இளவயதுத் திருமணங்களால் வன்னியில் சிக்கிச் சிதையும் கிராமங்கள் : அறிவூட்ட யாரும் இல்லாத அவலம்!

வன்னிப் பகுதியில்  தற்போது வரை அதிகரிக்கும் இளவயதுத்  திருமணம் தொடர்பில் அதிகாரிகள் உரிய  கவனம் செலுத்த வேண்டும் என்ற பலமான கோரிக்கை முன் வைக்கப்படுகின்றது. 

 



குறிப்பாக வன்னியின் கிராமப்புறங்களில் இவ்வாறான இளவயதுத் திருமணங்கள் அதிகரிப்பதே பல குடும்ப பிணக்குகளுக்குக் காரணமாக அமைகிறது. அது தவிர சட்ட ரீதியிலான அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமலும் அவர்கள் தவிக்கின்றனர். 

இது குறித்து கிளிநொச்சி மாவட்டம் மண்ணித்தலைப் பகுதியில் இளவயதுத் திருமணம் செய்த ஆறு குடும்பங்களை நேரில் சந்தித்து அவர்கள் எதிர் கொள்ளும் நெருக்கடிகள் தொடர்பில் கேட்க முடிந்தது. 

தனது வயது தற்போது 19 என தன்னை அறிமுகம் செய்து கொண்டார் பெண் ஒருவர். அவரது தந்தை வீட்டில் இருந்த போதும் கணவர் கடற்றொழிலுக்கு சென்றிருந்தார். அவர்களுக்கான நிரந்தர வீடு யுத்தம் காரணமாக அழிக்கப்பட்டு அடையாளச் சின்னமாகக் காட்சியளிக்கிறது.

கணவரின் கடற்றொழில் வருமானத்தில் தற்போது நான்குபேர் வாழும் நிலையில் போதிய வருமானம் இல்லை எனத் தெரிவித்தவர்களிடம் மூவர் தானே உள்ளீர்கள் நான்காவது நபர் யார் என்ற கேள்வியைத் தொடுத்தபோது கிடைத்த பதில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

குறித்த பெண்ணின் சிறு பிள்ளை முன்பள்ளிக்கு சென்றுள்ளதாக கூறினர். பெண்ணுக்கு வயது 19. அவரது பிள்ளைக்கு வயது 5. அப்படி என்றால் திருமணம் நடந்த வயது? 

கேள்வி கேட்டு கிளறும் நோக்கமில்லாததால் அது தொடர்பில் வினாவைத் தொடுக்காமலே அடுத்த கேள்விக்குச் சென்றோம். 

இவர்களின் திருமண காலத்தில் பதிவுத் திருமணங்கள் இடம்பெறுகின்றனவா? என்பது எமது அடுத்த கேள்வி. 

அதற்கும் தெளிவற்ற பதிலே கிடைத்தது. சில பதிவாளர்கள் வயது குறைந்தாலும் பெற்றோர் விருப்பம் என பதிவு மேற்கொள்வர் சிலர் மறுக்கின்றனர் எனக் கூறப்பட்டது. 

அவ்வாறு மறுக்கும் பதிவுகள் குழந்தைப்பேற்றின் பின்பே மேற்கொள்ளப்படுகின்றது.  ஆக இங்கே திருமணத்தின் தகுதியாக பிள்ளைப்பேறு கருதப்படும் அவலம். 

இக்கிராமங்களுக்கு மகளிர் அமைப்புக்கள் அரச திணைக்கள அதிகாரிகள் வந்து  இவை தொடர்பில் கூறி,  இதற்கான சட்ட ஏற்பாடுகள், அறிவூட்டல்கள் மேற்கொள்வது பற்றிக் கேட்ட போது இவ்வாறான  அதிகாரிகள்  இருப்பதே எமக்குத் தெரியாது என்கின்றனர். 

அடுத்து, பெண்னைத் தலமையாகக் கொண்ட குடும்பம் ஒன்றைச் சந்தித்த வேளையில், அந்தப் பெண் இரு சிறுவர்களுடன் நின்றிருந்தார். இருப்பதற்கான நிரந்தர வீடு இன்றி தற்காலிக கொட்டகையிலேயே அவர்கள் வசிக்கின்றனர். 

வீட்டுத் திட்டம் முதல் கட்டம் வழங்கப்பட்ட போது குழந்தைகளின் சுகயீனம், இடப்பெயர்வு போன்ற காரணங்களினால் சந்தர்ப்பம் தவறவிடப்பட்டுள்ளது. தற்போது அடுத்த கட்டத்தில் முன்னுரிமைக்கான உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு இரு பிள்ளைகளுடன் உள்ளவரின் தற்போதைய வயது 31 , இவரின் மூத்த மகனின் வயது 9. இவரது திருமண வாழ்க்கை 2007ல் முக்கொம்பன் பகுதியில் ஆரம்பித்து  2009ல் முள்ளிவாய்க்காலில் வீச்சுடன் முடிவுற்றுள்ளது. 

தற்போது பிள்ளைகளை வளர்ப்பதற்காக பன்னவேலை , ஆடு வளர்ப்பு, அரச உதவி இவற்றின் மத்தியிலேயே அன்றாட ஜீவனோபாயம் என்று தன் சோகக் கதையைச் சொல்லும் போது அவரின் இரு கண்களும் நிறைந்து வழிந்தது.

அந்தக் கண்ணீர் இப் பெண்ணிடம் இனி வினாவாதீர்கள் என கூறுவது போல் இருந்தது. அவரின் வயதை மிஞ்சிய முதுமை தற்போதே 40 வயதினை ஒத்த தோற்றம். வறுமையின் மொத்த உருவமாகத் தெரிந்தது. 

இவற்றுக்கான காரணத்தை அறிந்து மாற்றீடு என்ன என வினாவுவதற்காக மூத்தவர்களைத் தேடியும் முடியாமலே அருகில் இருந்த பாடசாலையின் அதிபரை நாடினோம்.  

இக் கிராமத்தில் தொழில் முயற்சிகள் இரண்டுதான். ஒன்று கடற்றொழில் மற்றையது விவசாயம். 

அவ்வாறு அறுவடை செய்யும் பொருளைக் கூட இவர்களால் கொண்டு சென்று சந்தைப்படுத்த முடியாத வறுமை. அதாவது வாகன வசதிகள் இல்லை. 

அதனால் வரும் வர்த்தகர்கள் கேட்கும் விலைக்குப் பொருளைக் கொடுத்து விடுகிறார்கள். அது குடும்ப பொருளாதாரத்தினை ஈடு செய்ய முடியாது இருக்கிறது.

அதேபோல் மாணவர்களின் கல்விக்கு தரம் 9 வரையான பாடசாலைகளே உண்டு. அதற்குமேல் கல்வி பெறுவதானால் 40 கிலோமீற்றர் பயணம் என்பதனால் கல்வியை இடைநிறுத்தி விடுகிறார்கள். 

கிராமத்தில் எந்தவிதமான பயனுள்ள பொழுது போக்கும் கிடையாது. இக் கிராமம் மட்டுமல்ல அயல் கிராமங்களில் கூட ஓர் சன சமூக நிலையமோ அல்லது ஓர் பத்திரிகை கூட இன்றுவரை கிடையாது. இந்த நிலையில் வெளியுலகத் தொடர்பக்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்படவில்லை என்று விளக்கினார் அந்த அதிபர். 

எனவே குறித்த கிராமங்களின் அபிவிருத்தி தொடர்பில் உரியவர்களும் சமூக ஆர்வலர்களும் தமது கரிசனையை திருப்ப முன் வரவேண்டும் என கோரிக்கை முன் வைக்கப்படுகின்றது.
- நன்றி: நம்நாதம்