யாழ்ப்பாணத்திலிருந்து தினமும் கொழும்பு செல்லும் இரவு நேர தபால் ரயில்
அனுராதபுரம் ரயில் நிலையத்தை தாண்டியதும் ரயில் எஞ்சினின் பிரதான
முன்விளக்கைத் தவிர அனைத்து விளக்குகளையும் அணைத்துவிட்டே நீண்ட நேரம்
பயணிப்பதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.
அண்மைய நாட்களில் இந்த இரவு நேர தபால் ரயில் மீது ஆங்காங்கே நடைபெறும் பலத்த கல்வீச்சு மற்றும் அநுராதபுரம் ரயில் நிலையத்திற்கு அப்பால் இடம்பெற்ற கல்வீச்சு தாக்குதலையடுத்தே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சில நாட்களாக யாழ்ப்பாணம் கொழும்பு இரவு நேர தபால் ரயில் அனுராதபுரம் ரயில் நிலையத்தை நள்ளிரவு 12 மணியளவில் தாண்டி காட்டுப் பாதையூடாக செல்கையில் ரயில் எஞ்சினின் பிரதான விளக்கைத் தவிர ரயில் பெட்டிகள் அனைத்திலுமுள்ள விளக்குகள் அணைக்கப்பட்டு பெட்டிகளின் ஜன்னலில் உள்ள தகரப் பாதுகாப்பு இறக்கப்பட்டே சுமார் ஒரு மணி நேரம் பயணம் செய்வதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.
இதனால் ரயில் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதேநேரம் நான்கு ரயில்கள் மற்றும் ரயில் பஸ்கள் மீது கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் மேற்கொள்ளப்பட்ட கல் வீச்சுத் தாக்குதலில் ரயில் பயணிகள் சிலர் காயமடைந்துள்ளதாக ரயில் போக்குவரத்து அதிகாரி விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை கிளிநொச்சி, மாஹவ, திபிரியாகெதர, தெமட்டகொடை, களனி ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற கல்வீச்சு தாக்குதலில் பயணியொருவர் படுகாயமடைந்துள்ளதுடன் ரயில் கண்ணாடிகள் பலவும் சேதமடைந்துள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமை காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி வந்த இரவு நேர தபால் ரயில் மீது கிளிநொச்சி பகுதியில் வைத்து மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சுத் தாக்குதலில் வயோதிப மாது ஒருவர் படுகாயமடைந்ததுடன் ரயில் கண்ணாடிகளுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை அன்றைய தினம் மாத்தறையிலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற ரஜரட்ட ரெஜின ரயில் மீது மாஹவ மற்றும் திம்பிரியாகெதர பகுதிகளுக்கிடையில் வைத்து குளம் ஒன்றில் குளித்துக் கொண்டிருந்த சிலர் மேற்கொண்ட கல்வீச்சுத் தாக்குதலில் ரயிலுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
அன்றைய தினம் கோட்டையிலிருந்து ராகம நோக்கிச் சென்ற ரயில் மீதும் தெமட்டகொடை மற்றும் உறுகொடவத்த பகுதிகளில் வைத்து கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
மேலும் கடந்த புதன்கிழமை திருக்கோணமலையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற இரவு நேர தபால் ரயில் மீதும் நேற்று முன்தினம் வியாழக்கிழமை பிற்பகல் 3.45 மணியளவில் மதவாச்சியிலிருந்து அநுராதபுரம் நோக்கிச் சென்ற ரயில் பஸ் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் கொழும்பிலிருந்து வவுனியா சென்ற ரயில் மீது அநுராதபுரம் பகுதியில் நடத்தப்பட்ட கருங்கல் வீச்சுத் தாக்குதலில் படுகாயமடைந்து கோமா நிலையிலிருந்த உதவிக் கல்விப் பணிப்பாளர் உயிரிழந்ததும் தெரிந்ததே.
நன்றி: Thinakural