மாவை.சேனாதிக்கு கூட்டமைப்பின் எம்.பிக்கள், கட்சி தலைவர்கள் இறுதி அஞ்சலி- விசித்திரம்!!!

‘தமிழீழ மாவீரர் நாள் - கார்த்திகை 27’ ஐ இல்லாமல் செய்து, பிறிதொரு நாளை தேர்ந்தெடுத்து, தேர்ந்தெடுக்கும் அந்த நாளில் ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சிகளைச் சேர்ந்த மரணித்த உறுப்பினர்களுக்கும் சேர்த்து அஞ்சலிக்கூட்டம் நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோகை.சேனாதிராசா.

ஈழத்தில் மாபெரும் ஒரு ‘வரலாற்று அழிப்பை, வரலாற்று திணிப்பை’ செய்யத்துடிக்கும் மாவை.சோகை.சேனாதிராசாவுக்கு, தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அங்கத்துவ கட்சிகளின் தலைவர்கள், தாம் ஒழுங்கமைத்த இடம் ஒன்றில் ஒன்றுகூடி இன்று (31.07.2016) ஞாயிற்றுக்கிழமை இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

தமிழ்த்தேசியக்குடியினம், போரில் உயிர் நீத்த ‘வீரர்களை தமது பிள்ளைகளை’ அஞ்சலித்து கௌரவிப்பதற்கு என்று ஒரு நாளை தேர்ந்தெடுத்து, (கார்த்திகை 27, தமிழீழ மாவீரர் நாள்) அந்நாளை தமது இனத்தின் தேசிய எழுச்சி நாளாக பிரகடனப்படுத்தி, வரலாற்று தொடர்ச்சியாக அந்நாளில் வீரர்களான தமது பிள்ளைகளை - உறவுகளை விசுவாசமாகவும், நன்றியுணர்வாகவும் வழிபட்டு, அதனை ஒரு வரலாற்று கடமையாக கடைப்பிடித்துவரும் பாரம்பரிய மரபானது பெருமைக்குரியது! 

சிறீலங்கா அரச படைகளால் முற்றுகைக்குள்ளாக்கப்பட்டுள்ள ஈழத்தில், கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு - பலதரப்பட்ட அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் கூட, ‘யாருக்காகவும், எவருடைய நிர்ப்பந்தங்களுக்காகவும், விருப்பங்களுக்காகவும் ஒவ்வொரு தமிழ்க்குடிமகனும் - தமிழ்க்குடிமகளும் தனக்குள்ள ஜனநாயக ரீதியான வழிபாட்டு உரிமையை விட்டுக்கொடுக்காமல், கார்த்திகை 27 அன்று தத்தமது இல்லங்களில் அன்றி பொதுஇடங்களில் தனியாகவோ சிறுகுழுவாகவோ பெரும்கூட்டமாகவோ ஒன்றுகூடி, மாலை 06 மணி 05 நிமிடத்துக்கு (06.05க்கு) நெய் விளக்கேற்றி, போரில் உயிர்நீத்த ‘தமிழ்த்தேசிய இனத்தின் வீரஆத்மாக்களை’ நினைவுகூர்ந்து உணர்வுபூர்வமாக அஞ்சலித்து வருகின்றனர். 

இத்தகையதொரு காலச்சூழலில், சிங்கள பயங்கரவாதத்துடன் இணைந்துகொண்டு பண்பாட்டுச் சிதைப்பு - மரபுரிமை அழிப்பைச்செய்து, ‘தமிழ்த்தேசிய இனத்தின் மூலங்களை’ பிய்த்தெறியத்தொடங்கியிருக்கும் இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோகை.சேனாதிராசாவுக்கு, தமிழ் மக்கள் தமது பலத்த கண்டனங்களை தெரிவிப்பதோடு இறுதி எச்சரிக்கையையும் விடுத்துள்ளனர். 

செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான ரெலோ கட்சியின் 33வது அஞ்சலிக்கூட்டம் வவுனியா நகரசபை உள்ளக மண்டபத்தில் 27.07.2016 புதன்கிழமை அன்று நடைபெற்றிருந்தது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மாவை.சோகை.சேனாதிராசா, ‘தமிழீழ மாவீரர் நாள் - கார்த்திகை 27’ ஐ இல்லாமல் செய்து, பிறிதொரு நாளை தேர்ந்தெடுத்து, தேர்ந்தெடுக்கும் அந்த நாளில் ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சிகளைச் சேர்ந்த மரணித்த உறுப்பினர்களுக்கும் சேர்த்து அஞ்சலிக்கூட்டம் நடத்த வேண்டும் என்று கூறினார்.