நீண்ட இழுபறிக்கு மத்தியில் வவுனியா மாவட்டத்துக்கான பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையா? தாண்டிக்குளமா? இழுபறி நிலைக்கு சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வடமாகாண பாராளுமன்ற மாகாணசபை உறுப்பினர்களின் தனித்தனியான கருத்துகளின் படி ஓமந்தையில் அமைய வேண்டும் என 21 பேரும் தாண்டிக்குளத்துக்கு 05 பேரும், 13 பேர் வாக்களிப்பில் பயத்தில் ஒதுங்கிக்கொண்டதும் ஒருவர் நடுநிலை வகித்ததோடு சம்பந்தனின் கூற்றுப்படி ஜனநாயக ரீதியான தீர்ப்பே இறுதி முடிவாகும் என்பதற்கு அமைவாக ஓமந்தை தீர்மானிக்கப்பட்டது.
வடமாகாணசபையின் அமர்வு நேற்று 12.07.2016 நடைபெற்ற போது இந்த தீர்மானம் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், தாண்டிக்குளத்தில் தான் அமைக்கப்பட வேண்டும் என்றும் தமிழரசு கட்சி சார்ந்தவர்கள் சீறிப்பாய்ந்தனர். ஆனால் ஓமந்தையா? தாண்டிக்குளமா? என்ற வாக்கெடுப்பில் வாக்களிப்பில் கலந்துகொண்ட சத்தியலிங்கம், சீ.வி.கே சிவஞானம், சாந்தி சிறீஸ்கந்தராசா, சிவமோகன், பரஞ்சோதி ஆகியோர் தாண்டிக்குளம் தான் தமது தெரிவு என்று தனித்தனி கடிதங்களில் அனுப்பி வைத்தவர்கள் ஏன் இந்த வாக்களிப்பில் கலந்துகொண்டனர்?
இரண்டாவது சம்பந்தன் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று கூறிய போது மேற்குறித்த ஐவரும் அன்றைய கூட்டத்தில் மாகாணசபை தீர்மானம் நிறைவேற்றி உள்ளபடியால் வாக்கெடுப்பு நடத்த முடியாது என்று ஏன் எடுத்துரைக்கவில்லை. அதுதான் முடியாவிட்டாலும் மாகாணசபை தீர்மானம் இருக்கும் போது இந்த ஐவரும் ஏன் வாக்களிப்பில் கலந்து கொண்டனர்.
வடமாகாணசபை தீர்மானம் ஆனது அன்று சபையில் இருந்த உறுப்பினர்கள் அனைவரும் ஓமந்தை தான் எல்லோருடைய தெரிவும், தாண்டிக்குளம் காணியை தராவிட்டால் பணம் திரும்பி போய்விடக்கூடாது என்பதற்காக தாண்டிக்குளத்தில் பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்படலாம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அமைச்சரவை கூட்டத்தில் யாரும் எதிர்பாராத விதமாக கலந்து கொண்ட வடமாகாண முதலமைச்சர் இந்த பொருளாதார மத்திய நிலையம் வடமாகாணத்துக்கு தர விருப்பமா? இல்லையா? என்பதுடன் வெளிமாவட்டத்துக்கு கொண்டு செல்ல அனுமதிக்க மாட்டேன் என்ற கடும்தொனியில் வற்புறுத்திய படியால் ஜனாதிபதியும் பிரதமரும் ஒரு முடிவுக்கு வந்தனர். மத்திய நிலையம் வவுனியாவுக்கு உரியதென்றும் அதற்கான காணி தெரிவையும் நீங்களே முடிவு எடுங்கள்.
இந்ததநிலையில் மேற்குறிப்பிடப்பட்ட வடமாகாணசபையின் தீர்மானமானது நிதி திரும்பி வெளிமாவட்டத்துக்கு போவது தடுக்கப்பட்டுள்ளதால் ஓமந்தையில் இந்த மத்திய நிலையம் அமைய வேண்டும் என்ற தீர்மானம் அனைவரிடத்திலும் இருந்தபடியால் மாகாணசபை தீர்மானம் செல்லுபடியற்றது.
இந்தநிலைமையை தெரிந்து கொண்டும் தமிழரசுகட்சியின் மக்கள் பிரதிநிதிகள் சம்பந்தன் தலைமையில் எடுக்கப்பட்ட முடிவுக்கு மாறாக முன்னுக்கு பின் முரண்பாடாக நடந்து கொண்டுள்ளனர். உதாரணத்துக்கு சத்தியலிங்கம் விவசாய பெருமக்களிடம் தனது தெரிவு ஓமந்தை தான் என்று சொல்லி விட்டு தாண்டிக்குளத்துக்கு வாக்களித்தது ஏன்?
அதேபோல் முல்லைத்தீவு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா அந்த மாவட்ட பொதுஅமைப்பு பிரதிநிதிகளிடம் மாங்குளமும் ஓமந்தையும் தான் தனது தெரிவு என்று சொல்லி விட்டு தாண்டிக்குளத்துக்கு வாக்களித்தது ஏன்?
முல்லைத்தீவு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களான சிவமோகன், சாந்தி ஆகியோர் அந்த மாவட்ட மக்களின் விருப்பத்துக்கு மாறாக தாண்டிக்குளத்தை தெரிவு செய்தது என்பது, தமது எதிர்கால அரசியல் இருப்புக்காக மக்களை விட தமிழரசு கட்சிக்கு விசுவாசமாக இருக்கின்றோம் என்று காட்டவா?
சீ.வி.கே சிவஞானம் மாகாணசபை தீர்மானத்தை மீற முடியாது என்று சொல்லி விட்டு தாண்டிக்குளத்துக்கு வாக்களித்தது ஏன்?
சுமந்திரன் அவர்கள் வடமாகாணசபை தீர்மானத்தை நகைப்புக்கிடமாக மாற்ற விரும்பவில்லை என்று கூறியவர் சம்பந்தன் எடுத்த ஜனநாயக ரீதியான முடிவுக்கு மாறாக நடந்தது ஏன்?
அதேபோல் சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வடமாகாணத்தினுடைய பாராளுமன்ற உறுபப்பினர்கள், மாகாண அமைச்சர்களிடம் சம்பந்தன் தனித்தனியாக விருப்பம் கேட்டபோது சம்பந்தன் கூறிய ஒரு முக்கிய விடயம் இந்த கூட்டத்தில் மாவை சேனாதிராசாவும், சுமந்திரனும் பங்குபற்ற முடியவில்லை என்றும், தனக்கு தொலைபேசி ஊடாக இருவரும் தாண்டிக்குளம் தான் தங்களின் விருப்பத்தெரிவு என்று கூறியுள்ளனர் என்று தெரிய வருகின்றது.
இந்தநிலையில் சுமந்தின் அவர்கள் சம்பந்தரின் கூற்றுப்படி ஓமந்தையா? தாண்டிக்குளமா? என்ற விடயத்தில் தனது தெரிவு தாண்டிக்குளம் தான் என்பதை சம்பந்தனுக்கு தொலைபேசி ஊடாக தெரிவித்ததாக அன்றைய கூட்டத்தில் சம்பந்தன் அனைவருக்கும் முன்னிலையில் தெரியப்படுத்தினார்.
அப்படியாயின் வடமாகாணசபை தீர்மானத்தை நகைப்புக்கிடமாக மாற்றக்கூடாது என்ற காரணத்துக்காக வாக்களிக்கவில்லை என்று சொன்னதன் ஊடாக சுமந்திரனின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளது.
மாவை சேனாதிராசாவும் சம்பந்தனின் கூட்டத்தில் தனது தெரிவு தாண்டிக்குளம் என்பதை தொலைபேசி ஊடாக சம்பந்தனுக்கு கூறி விட்டு ஓமந்தைக்கு வந்து காணிகளை பார்வையிட்டு விட்டு மறுநாள் முதலமைச்சரை வைத்தியசாலையில் சென்று பார்வையிட்டு நீங்களே முடிவெடுங்கள் என்று கூறியவர் அடுத்த கணம் யாழ்ப்பாணத்தில் பத்திரிகையாளரை சந்தித்து சுற்றி வளைத்து இறுதியாக தாண்டிக்குளத்தில் பொருளாதார மத்திய நிலையம் அமைக்காவிட்டால் 200 கோடி ரூபா பணம் திரும்பி சென்று விடும் என்றும் இந்த கருத்துக்கணிப்புகள் தனக்கு கவலையளிப்பதாகவும் சொன்னார்.
ஓமந்தையில் தான் இந்த நிலையம் அமைய வேண்டும் என்ற சம்பந்தனின் கருத்துக் கணிப்புக்கு மாறாக மாவை சோனாதிராசா, சுமந்திரன், சீ.வி.கே.சிவஞானம், சத்தியலிங்கம் பேன்றவர்கள் மத்திய அமைச்சர்களான றிசாட் பதியூதீன் ஹரிசன் போன்றவர்களுடன் கூட்டுச்சேர்ந்து அவர்களது கட்சியை சார்ந்த வடமாகாணசபை உறுப்பினர்களான ஜயத்திலக்க, தர்மபால, இருவரையும் சேர்த்து மாகாணசபை தீர்மானத்துக்கு மாறாக ஓமந்தையில் இந்த மத்திய நிலையம் அமையக்கூடாது என்பதற்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்வதற்கு சத்தியலிங்கம் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார்.
தமிழரசுகட்சி தாமும் குழம்பி மக்களையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. வாக்களித்த மக்கள் தமது விருப்பத்துக்கு மாறாக தமிழரசு கட்சியை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் முன்னுக்கு பின் முரண்பட்ட கருத்துகளை தெரிவித்து வருவது பொதுமக்கள், புத்திஜீவிகள், துறைசார் நிபுணர்கள், ஊடகங்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த 60 வருட காலமாக இந்த கட்சி இரட்டை நிலைப்பாட்டிலிருந்து விடுபடப்போவதில்லை என்பது மேற்குறிப்பிட்ட நபர்களும், விடயங்களும் சாட்சி. மக்களே சிந்தியுங்கள். தீர்க்கமான முடிவு எடுங்கள்.
- தாயகன்