மக்கள் பிரதிநிதிகளை உருவாக்கும் மக்களிடம் வாக்கெடுப்பை நடத்துங்கள்!

மக்கள் பிரதிநிதிகளை உருவாக்கும் மக்களிடம் வாக்கெடுப்பை நடத்துங்கள். ஓமந்தையே முடிவாகும்! வடக்கு பொருளாதார மத்திய நிலையம் தொடர்பில் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் செய்தி.

தாண்டிக்குளம் விவசாய பண்ணைக்காணியில் பொருளாதார மத்திய நிலையம் அமையப்பெற்றால், 05 நன்மைகளும் - 09 தீமைகளும், ஓமந்தை காணியில் அமையப்பெற்றால் 13 நன்மைகளும் - 02 தீமைகளும் மட்டுமே உண்டு. என்று துறைசார் நிபுணர்கள் குழுவினர் கணிப்பிட்டுள்ளனர். 

எனவே வடக்கு மாகாண மக்களுக்கு 13 நன்மைகளை பெற்றுக்கொடுக்கப்போகின்றோமா? அல்லது 05 நன்மைகளை மட்டும் பெற்றுக்கொடுக்கப்போகின்றோமா?, மக்கள் 09 தீமைகளை எதிர்கொள்ள வேண்டுமா? அல்லது 02 தீமைகளை மட்டுமே எதிர்கொள்ள வேண்டுமா? 

வடக்கு மாகாணத்துக்கான பொருளாதார மத்திய நிலையத்தின் அமைவிடம் தொடர்பில், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் இரண்டு குழுக்களுக்குள், ‘மக்களையும் - திட்டத்தையும் முன்னிறுத்தி சிந்திக்காமல், தனிநபர் ஒருவரை மட்டுமே முன்னிறுத்தி சிந்திக்கும் குறுநிலை சிந்தனை கொண்ட குழு’வின் பக்கம் அதிக பெரும்பான்மை இருந்துவிட்டால், தமிழ் மக்களின் வாழ்வும் - வளமும் - நிறைவும் என்னாவது? என்று அச்சமும் - கவலையும் வெளியிட்டு கேள்வி எழுப்பியுள்ள வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினர்,

மக்கள் பிரதிநிதிகளை உருவாக்கும் மக்களிடமே வாக்கெடுப்பை நடத்துமாறும், ஓமந்தை பிரதேசமே முடிந்த முடிவாக தெரிவாகும்! என்றும் தெரிவித்துள்ளனர். 

இதுதொடர்பில் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் கோ.ராஜ்குமார், செயலாளர் தி.நவராஜ், ஊடகப்பேச்சாளர் அ.ஈழம் சேகுவேரா ஆகியோர் ஒப்பமிட்டு உத்தியோகபூர்வமாக அனுப்பிவைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஊடக அறிக்கை:
04.07.2016

மக்கள் பிரதிநிதிகளை உருவாக்கும் மக்களிடம் வாக்கெடுப்பை நடத்துங்கள். ஓமந்தையே முடிவாகும்! 

வடக்கு மாகாணத்துக்கான பொருளாதார மத்திய நிலையத்தின் அமைவிடம் வவுனியா மாவட்டத்தின் ஓமந்தையிலா? அன்றி தாண்டிக்குளத்திலா? என்பது தொடர்பில், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கிடையே முரண்நிலை கருத்துருவாக்கம் பெற்று, இருவேறு குழுக்களாக பிரிந்து நின்று அரசியல் பேசுவதை எம்மால் அவதானிக்க முடிகின்றது. 

இதில் ஓமந்தையே சிறந்த இடத்தெரிவு என்று கூறும் குழுவிடம் உண்மையான சமுக அக்கறையையும், மக்கள் நலன் - தேசவளப்பாதுகாப்புடன் கூடிய தூரநோக்கு சிந்தனையையும் காணமுடியும் அதேவேளை, தாண்டிக்குளமே தெரிவு என்று கூறும் குழுவிடம் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் மீதான காழ்ப்புணர்ச்சி அரசியல் நடத்தைகளை மட்டுமே காணமுடிகின்றது.

குறித்த திட்டம் தொடர்பிலும், அதன் அமைவிடம் தொடர்பிலும், இந்த திட்டம் இந்த இடத்தில் அமைவதால் தேசத்துக்கும் - மக்களுக்கும் எத்தனை அனுகூலம்? எத்தனை பிரதிகூலம்? என்றும் சிந்தனை செய்வதையும் - சீர்தூக்கிப்பார்ப்பதையும் விடுத்துவிட்டு, ‘முதலமைச்சர் ஒரு தீர்மானத்தை எடுத்துவிட்டால், அந்த தீர்மானத்துக்கு நேர்எதிராக முடிவையே எடுப்போம்’ என்று வன்மம் வளர்த்துக்கொண்டு நிற்கும் தனிமனித தாக்குதல் அரசியல் போக்கே இன்றைய குழப்பங்களுக்கு எல்லாம் மூலகாரணமாகும். 

அப்படியாயின் இதில் எங்கே மக்கள் நலன் அரசியல் இருக்கின்றது? தேசவளப்பாதுகாப்பு சிந்தனை இருக்கின்றது? அசிங்க அரசியலின் உச்சமே மேலோங்கி கிடக்கின்றது.  

இத்தகைய அபத்தமான அரசியல் போக்குச்சூழமைவில், ‘பொருளாதார மத்திய நிலையத்தின் அமைவிடம் தொடர்பில் மக்கள் பிரதிநிதிகளிடம் வாக்கெடுப்பு நடத்தி முடிவு காணப்படும்’ என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் கூறியுள்ளார். வாக்கெடுப்பின்போது பெரும்பான்மையே இடத்தெரிவை தீர்மானிக்கும் என்றும் பேசியுள்ளார்.  

வடக்கு மாகாணத்துக்கான பொருளாதார மத்திய நிலையத்தின் அமைவிடம் தொடர்பில், வடக்கு மாகாண விவசாயப்பணிப்பாளர், வடக்கு மாகாண நகர அபிவிருத்தி அதிகாரசபை பணிப்பாளர், வவுனியா மாவட்ட விவசாய விரிவாக்கல் பிரதிப்பணிப்பாளர், வவுனியா பிரதேச செயலாளர், வவுனியா மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், வவுனியா மாவட்ட விவசாயப்பணிப்பாளர் ஆகியோர் உள்ளடங்கிய துறைசார் நிபுணர்கள் குழு தயாரித்துள்ள அறிக்கை என்ன கூறுகின்றது? 

தாண்டிக்குளம் விவசாய பண்ணைக்காணியில் பொருளாதார மத்திய நிலையம் அமையப்பெற்றால், 05 நன்மைகளும் - 09 தீமைகளும், ஓமந்தை காணியில் அமையப்பெற்றால் 13 நன்மைகளும் - 02 தீமைகளும் மட்டுமே உண்டு என்று கணிப்பிட்டுள்ளனர். 

எனவே வடக்கு மாகாண மக்களுக்கு 13 நன்மைகளை பெற்றுக்கொடுக்கப்போகின்றோமா? அல்லது 05 நன்மைகளை மட்டும் பெற்றுக்கொடுக்கப்போகின்றோமா?, மக்கள் 09 தீமைகளை எதிர்கொள்ள வேண்டுமா? அல்லது 02 தீமைகளை மட்டுமே எதிர்கொள்ள வேண்டுமா? 

சிந்தனை குறைபாடுடைய – ஆளுமையில் பழுதுடைய அரசியல் தலைமைகளால் எப்படி இந்த இனம் வாழ்வு பெறும்? வளம் பெறும்? என்ற கேள்விகள் எங்கள் முன்னே பெருத்த அச்சுறுத்தலாக உருத்திக்கொண்டு நிற்கின்றன. 

வடக்கு மாகாண மக்களும் அவர் தம் சந்ததிகளும் ஈட்டு பொருளாதாரத்தில் தங்கியிருக்க வேண்டுமா? தன்னிறைவு பொருளாதாரத்தில் எழுச்சியுற வேண்டுமா? சுற்றாடல் பாரம்பரிய பண்பாட்டு (கிராமிய) உணவு உற்பத்தியின் அவசியம் தான் என்ன? அதைப்பாதுகாக்க வேண்டிய எமக்குள்ள தேசியக்கடமை என்ன? மாவட்ட தனியார் பேருந்து நிலையம் மற்றும் மாவட்ட பொதுவைத்தியசாலை அமையப்பெற்றுள்ள சூழலில் ஏற்படப்போகும் அதிக வாகன நெரிசல்? அதிகரிக்கப்போகும் நகரத்தின் வெப்;பநிலை? தாண்டிக்குளம் விவசாயக்கல்லூரிக்கு முன்பாக உள்ள ஆபத்தான வீதி வளைவில் ஏற்படப்போகும் விபத்துகள்? அடுத்துவரும் ஆண்டுகளுக்கு பொருளாதார மத்திய நிலையத்தை விஸ்தரிக்க போதாத இடவசதி? 

இப்படியெல்லாம் நீடித்து நிலைத்திருக்கும் அபிவிருத்தி – தூரநோக்கு சிந்தனையோடு ‘தமிழ் இனத்தின் இருப்பு பற்றி – தமிழ் நிலத்தின் வளம் பற்றி’ சிந்திக்காத, ‘சக்தியற்ற – பயனற்ற’ அரசியல் தலைமைகளை பெற்றதே தமிழ் மக்களுக்கு வெட்கம், அவமானம், சாபம், கேடாகும்!

வடக்கு மாகாணத்துக்கான பொருளாதார மத்திய நிலையத்தின் அமைவிடம் தொடர்பில், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் இரண்டு குழுக்களுக்குள், ‘மக்களையும் - திட்டத்தையும் முன்னிறுத்தி சிந்திக்காமல், தனிநபர் ஒருவரை மட்டுமே முன்னிறுத்தி சிந்திக்கும் குறுநிலை சிந்தனை கொண்ட குழு’வின் பக்கம் அதிக பெரும்பான்மை இருந்துவிட்டால், தமிழ் மக்களின் வாழ்வும் - வளமும் - நிறைவும் என்னாவது?

எதிர்கால தேசம் குறித்த பரந்த சிந்தனை மக்களிடம் தாராளமாகவே உண்டு. தாண்டிக்குளத்தில் பொருளாதார மத்திய நிலையம் அமைவதற்கு எதிரான விவசாய மேன்மக்களின் போராட்டங்கள் இதையே எமக்கு எடுத்தியம்புகின்றன. எனவே மக்கள் பிரதிநிதிகளை உருவாக்கும் மக்களிடமே வாக்கெடுப்பை நடத்துங்கள். ஓமந்தை பிரதேசமே முடிந்த முடிவாகும். மக்கள் பலமும் - நலமும் - சக்தியும் பெறுவர்.


வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினர்.