யாழ் போதனா வைத்தியசாலையில் தாதியராக இணைவதற்கு ஓர் அரியவாய்ப்பு!


2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் உயர்தரக் கல்வியினை பூர்த்தி செய்த மாணவர்கள் ஓர் அரச நியமனம் பெறவும் அரச சேவையிலிருந்து கொண்டே ஓர் பட்டதாரியாக வருவதற்கும் அரிதோர் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனை எமது பிரதேச மாணவர்கள் சரிவரப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
imageமேலும் எமது பிரதேசத்திலேயே மனங்கவர் கொடுப்பனவுடைய அரச தொழில் பெற சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. பயிற்சிக்காலத்திலும் கொடுப்பனவு வழங்கப்படுவதுடன் பயிற்சி முடிந்தவுடனேயே அரச நியமனம் பெறவும் வாய்ப்பு உள்ளது.
தற்போது சுகாதார அமைச்சினால் அரச தாதிய சேவைக்காக தாதிய மாணவர்களினை இணைப்பதற்கு 03-06-2016 வர்த்தமானி மூலம் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அனைத்து புத்தகசாலைகளிலும் தாதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் விற்பனையாகின்றன.
விண்ணப்பங்களின் முடிவுத்கதி:- 2016-06-24 என்பதுடன் இதற்கான தகமைகளாக,
1. 2014 அல்லது 2015 ஆம் ஆண்டுகளில் க.பொ.த (உ/த)பரீட்சையில் உயிரியல், பௌதீக விஞ்ஞான பாடத்தில் 03 பாடங்களில் சித்தியுடன் க.பொ.த(சா/த) பரீட்சையில் தமிழ், கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் ஆகிய 04 பாடங்களில் திறமைச்சித்தியுடன் 06 பாடங்களில் சித்தியும் பெற்றிருத்தல் வேண்டும்.
2. வயதெல்லை 18 வயதிலிருந்து 28 வயது வரை,
3. உயரம்:- 4’10’ ஆகும்
4. அத்துடன் திருமணகாத ஒருவராகவும் இருத்தல் வேண்டும்.
இப்பயிற்சிக்காக 95 சதவீதம் பெண்களும் 5 சதவீதம் ஆண்களும் தெரிவு செய்யப்படுவர். இத்தாதிய மாணவர்களுக்கு 03 வருட பயிற்சியின் போது மாதாந்த பயிற்சிப்படியாக 30000 ரூபாவினை படித்துக்கொண்டு பணம் சம்பாதித்து கொள்ளும் அரிய வாய்ப்பும் உள்ளது.
அத்துடன் பாதுகாப்புடன் கூடிய தங்குமிட, உணவு வசதிகளும் வழங்கப்படுகின்றன. அதுமட்டுமன்றி வட-கிழக்கு மாகாணங்களிலுள்ள தகுதியுடைய மாணவர்கள் ஒவ்வொருவரும் எமது பிரதேசத்திலேயே பயின்று எமது பிரதேசத்திலேயே அரச தாதிய உத்தியோகத்தராக கடமையாற்றும் வாய்ப்பும் உள்ளது. யாழ்போதனா வைத்தியசாலையானது இலங்கையிலேயே சிறந்த ஓர் தாதிய பயிற்சிக்கல்லூரியினையும் வளவாளர்களினையும் கொண்டுள்ளது.
யாழ்போதனா வைத்தியசாலையில் தற்போது 200 வரையான தாதிய வெற்றிடங்கள் உள்ளதால் தாதிய மாணவ பயிற்சியினை 03 வருடத்தினுள் முடித்தவுடனேயே இங்கேயே தாதியராக நியமனம் பெறுவதற்கான வாய்ப்புக்களுண்டு.
தற்போது வடக்கு மாகாணத்தில் ஓர் தனித்துவமான போதனா வைத்தியசாலையாக திகழும் போதனா வைத்தியசாலையானது வடக்கிலுள்ள ஏறத்தாழ 1.2 மில்லியன் மக்களுக்கான சுகாதார சேவையினை வழங்கி வருவதுடன், தாதியராக வருவதற்கான அடிப்படைப் பயிற்சிகளினை வழங்கும் ஓர் சிறந்த தாதிய பயிற்சி கல்லூரியினையும் கொண்டுள்ளது.
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் நீண்ட காலமாக 407 ஆக இருந்த தாதிய ஆளணியின் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையானது தற்போது 03 மாதங்களுக்கு முன்னர் 607 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் வைத்தியசாலையில் தற்போது ஏறத்தாழ 200 தாதிய வெற்றிடங்கள் தோன்றியுள்ளன. இன்னும் ஒரு சில வருடங்களில் தாதிய சேவைக்காக அனுமதிக்கப்படும் ஆளணியினரின் எண்ணிக்கையானது பெருமளவில் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எதிர்காலத்தில் மிகவிரைவாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் விசேட சிகிச்சைப் பிரிவுகளாக நரம்பியல் சத்திரசிகிச்சைப்பிரிவு, இருதய சத்திரசிகிச்சைப்பிரிவு, சிறுநீரக மாற்றுச் சத்திசிகிச்சைப்பிரிவு என்பன ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதனால் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு மேலும் அதிகளவில் தாதியர்கள் இணைக்கப்படக்கூடிய வாய்ப்பு காணப்படுகிறது. எனவே எமது பிரதேசத்தில் எமது மக்களுக்கு இவ்வைத்தியசாலையிலே இணைந்து தாதியராகக் கடமையாற்றும் சந்தர்ப்பம் உயர்தரத்தில் விஞ்ஞான பாடத்தில் சித்தியடைந்த மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
தாதிய சேவையை புனிதமான சேவையாக கருதுவதால் இவர்களுக்கு ஏனைய சேவையினரைப் போலல்லாது விசேட அதிகரித்த சம்பள கொடுப்பனவுகள் பயிற்சிக்காலத்திலிருந்து வழங்கப்படுகின்றது.
அத்துடன் அரச தாதியராக கடமையாற்றிக்கொண்டே ஓர் விஞ்ஞானமாணி தாதிய பட்டதாரியாக வருவதற்கான வாய்ப்புக்களையும் வழங்கும் முகமாக அரசாங்கத்தினால் ஒவ்வொரு ஆண்டும் விசேட கல்வி விடுப்புக்கள் வழங்கப்படுகின்றது. இதனால் அரச தொழிலில் ஈடுபட்டுக்கொண்டே இளம் வயதில் பட்டதாரியாக வருவதற்கான வாய்ப்பும் காணப்படுகிறது.
எனவே வட-கிழக்கிலுள்ள க.பொ.த (உ.த) விஞ்ஞான பாடத்தில் 03 பாடத்தில் சித்திபெற்ற ஒவ்வொருவரும் இவ்அரிய சந்தர்ப்பமான பயிற்சிக்காலத்திலேயே அதிகூடிய கொடுப்பனவு, பயிற்சி முடிந்தவுடன் எமது பிரதேசத்திலேயே அரச தொழில் வாய்ப்பு மற்றும் இளம் வயதிலேயே அரச தொழிலுடன் ஓர் பட்டதாரியாக மாறும் வாய்ப்பு என்பனவற்றினை நழுவவிடாது மாணவ தாதியர்களினை இணைப்பதற்கான விண்ணப்பங்களினைப் புத்தகசாலைகளில் பெற்று விண்ணப்பிக்கத் தவறாதீர்கள்.
…………………….
பணிப்பாளர்