ஜகார்த்தா: ஈழத் தமிழ் அகதிகள் 44 பேருடன் நடுக்கடலில் தத்தளிக்கும் படகை தமிழகத்துக்குத் திருப்பி அனுப்ப இந்தோனேசியா முடிவு செய்துள்ளது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஈழத் தமிழ் அகதிகள் தங்களை அங்கேயே சுட்டுக் கொல்லுமாறு பிஞ்சு குழந்தைகளுடன் கெஞ்சுகிற நெஞ்சை பிளக்க வைக்கும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவுகிறது.
தமிழக அகதிகள் முகாம்களில் இருந்த 44 ஈழத் தமிழர்கள் தமிழ்நாட்டுப் பதிவு எண் கொண்ட படகில் ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைவதற்காகப் புறப்பட்டுச் சென்றனர். ஆனால் இந்தோனேசியா அருகே அந்த படகு இயந்திரக் கோளாறால் தரை தட்டியது. ஒரு கர்ப்பிணிப் பெண், 9 சிறுவர்களுடன் உள்ள இப்படகு இந்தோனேசியாவின் ஆச்சே மாகாண கடற்கரையில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இந்த படகு தொடர்பாக தகவல் கிடைத்த இந்தோனேசிய கடற்படையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது படகில் இருந்து சில பெண்கள் கடலில் கீழே குதித்து கரையை நோக்கி நகர்ந்தனர். அங்கு வந்த இந்தோனேசிய கடற்படையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தும் வகையில் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். மேலும் வேறு எவரும் கீழே இறங்கக் கூடாது எனவும் எச்சரித்தனர்.
இந்த நிலையில் படகின் இயந்திர கோளாறு சரி செய்யப்பட்ட பின்னர் மீண்டும் தமிழகத்துக்கே அவர்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்து வருவதாக இந்தோனேசியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் இதை படகில் உள்ள ஈழத் தமிழர்கள் ஏற்க மறுத்து தங்களை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பின்னர் எரிபொருள் மற்றும் உணவு உதவிகளை வழங்கவும் இந்தோனேசியா முடிவு செய்தது. ஆனால் அவர்கள் மீண்டும் தமிழகம் திரும்ப வேண்டும் என்று நிபந்தனை விதித்தது இந்தோனேசியா.