வவுனியாவில் GS க்காக அமைச்சர் பதவியை துறக்க துணிந்த றிசாட் பதியூதீன்!

மரக்காரம்பளை பகுதி கிராம அலுவலர் நஸாருக்காக அமைச்சர் றிசாட் பதியூதீன் தனது அமைச்சர் பதவியை துறப்பேன் என்று அரசாங்க அதிபரை எச்சரித்த சம்பவம் ஒன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.

மரக்காரம்பளை கிராம அலுவலர் பிரிவிக்குட்பட்ட சமயபுரம், சுந்தரபுரம், மணிப்புரம், கணேசபுரம் மக்களை வீட்டுத்திட்டம் சம்பந்தமான கலந்துரையாடலுக்கு, வீட்டுத்திட்ட விண்ணப்பக்கடிதங்கள், காணி அனுமதி பத்திரங்களுடன் கணேசபுரம் விநாயகர் வித்தியாலயத்துக்கு பி.ப 1.30 மணிக்கு சமுகமளிக்குமாறு நஸார் நேற்று (07.05.2016) அழைப்பு விடுத்திருந்தார்.

ஏற்கனவே பேசிவைத்தவாறு அமைச்சர் றிசாட் பதியூதீனும் பி.ப 3.00 மணியளவில் இந்த கூட்டத்துக்கு வருகை தந்திருந்தார். இந்த கூட்டத்தில் உரையாற்றிய கிராம அலுவலர் நஸார்,

‘உலகத்தில் 20 கோடி முஸ்லிம் மக்களுக்கு உள்ள 500 சிறந்த தலைவர்களில் அமைச்சர் றிசாட் பதியூதீனும் ஒருவர். இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக ஒரு சம்பவத்தை உங்களுக்கு சொல்லப்போகின்றேன். வவுனியா மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் என்னை பணிநிலை இடம்மாற்றம் செய்யமுற்பட்டபோது, நான் அமைச்சர் அவர்களை அணுகி விடயத்தை கூறியபோது,  

அமைச்சர் அவர்கள் அரசாங்க அதிபரிடம் நேரடியாகச்சென்று நஸாரின் இடமாற்றத்தை இடைநிறுத்துகின்றீர்களா? இல்லை இடைநிறுத்தாவிட்டால் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்யட்டுமா? என்று அரசாங்க அதிபரை எச்சரித்தார்.

உடனே அரசாங்க அதிபர் அமைச்சரைப்பார்த்து, ‘நீங்கள் உங்களுடைய அமைச்சர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டாம்’ எனக்கூறிவிட்டு எனது பணிநிலை இடமாற்றத்தை இரத்து செய்து தந்தார். அந்த நன்றியை நான் எப்போதும் மறக்கமாட்டேன். அதை இப்போதும் என் நெஞ்சுக்குள் வைத்துள்ளேன். என்று தனது உரையில் கூறினார்.

வீட்டுத்திட்ட கூட்டம் என்று அழைத்துவிட்டு, அமைச்சர் புராணம் பாடிக்கொண்டிருந்தமையால் கொதிப்படைந்த மக்களில் சிலர் முகத்தைச்சுழித்துக்கொண்டு கூட்டத்தை விட்டு வெளியேறிச்சென்றனர்.

கிராம அலுவலர்கள் கட்சிகள் சாராமலும், அரசியல்வாதிகளின் எடுபிடிகளாக இராமலும் நெஞ்சுக்கு நீதியாக பணியாற்ற வேண்டும். ஆனால் கிராம அலுவலர் நஸார், அமைச்சர் றிசாட்டின் கட்சி இணைப்பாளராக பணியாற்றுகின்றாரோ? என்று சிந்திக்கும் அளவுக்கு இவரது செயற்பாடுகள் அங்கு உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். 

இதுதொடர்பில் தற்போதைய அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர் ஆகியோர் உரிய நடவடிக்கையை எடுப்பார்களா? என்பதே பொதுமக்களின் இப்போதைய பெருத்த கேள்வியாக உள்ளது.