நிலமும் வானும் கடலும் அழுத முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் எழுச்சி!

உயிர்ப்புடன் இருத்தலுக்கு உத்தரவாதம் இல்லா நிச்சயமற்ற வாழ்க்கைச்சூழமைவுகளால் ஆன சிறீலங்கா அரசின் அந்த முற்றுகைப்போர் வலயத்துக்குள்…

அன்றைய உயிர் வாழ்தலுக்கான உணவுத்தேடல்களில் ஈடுபடக்கூட மனம் ஒப்பாமல், ஒவ்வொரு கணமும் அந்தக்கணத்தின் இருப்புக்கான பெருமூச்சை வாரிவாரி இறைத்தபடி அவநம்பிக்கைகளாலும், ஏமாற்றங்களாலும், நம்பிக்கையீனங்களாலும், தோல்விகளாலும், இழப்புகளாலும், இட்டு நிரப்பப்பட்டுக்கொண்டிருந்த வாழ்க்கையை வாழ சபிக்கப்பட்டனர் தமிழ் நிலத்தின் ஆட்சி முடிக்குரிய மக்கள்!

திரும்பும் இடமெல்லாம் எங்கள் உறவுகளின் மரண ஓலமும் - அழுகுரல்களும் காது ஜவ்வுகளை கிழிக்கின்றன. இரத்தவாடையும் - பிணவாடையும் - கந்தக நெடியும் கலந்து வந்து நாசி துவாரத்தை அரிக்கிறது காற்று. தலை இழந்த பனைகளையும் தாண்டி வானம் முட்ட உயர எழும் கரிய புகைப்படலம் மானுடப்பேரவலக்காட்சிகளை மறைக்கிறது. பசி மயக்கமும் - வயிற்றுக்குமட்டலும் கண்ணைக்கட்ட பையப்பைய கால் தூக்கி வைக்கும் இடமெல்லாம் ஊறி உப்பி உருப்பெருத்துப்போன உடலங்கள். கால் வைத்ததும் உடலங்களுக்குள் புதைகின்றன கால்கள். ஊனமும் உடல் சிதிலங்களும் பசையாய் ஒட்டிக்கொள்ள வெளிக்கிளம்புகின்றன கால்கள். 

எங்கும் இரத்தச்சேறு. நாலாபுறமும் பிணக்குவியல்கள். அழையா விருந்தாளிகளாக இலையான்களும் - ஈக்களும் வேறு. சுதாகரித்து பாதுகாப்பு தேடிக்கொள்வதற்குள் வானைக்கிழித்துக்கொண்டு வந்து விழும் பலகுழல் எறிகணைகள் - கொத்துக்குண்டுகளால் ஊர்கள் முழுக்கவும் சுடுகாடாகவே மாறிப்போய்விட்டன. ஒரு பிணத்தை புதைத்துவிட்டு நிமிருவதற்குள் மேலும் ஐம்பது அறுபது உயிர்களை வெட்டிக்கிழித்துச்சிதைத்து முண்டங்களாக எறிந்திருக்கும் அரச படைகளின் விமானக்கணைகளும் - பலகுழல் சுடுகலன்களும். 

மரணபயம் பிதுங்கி வழியும் கண்களோடு இருக்கும் எச்சசொச்ச குழந்தைகளையும், ‘நல்ல சாவே வராதா?’ என்று சலித்துக்கொள்ளும் முதியவர்களையும் பட்டினிச்சாவு வீழ்த்துகிறது. உயிர்பிழைத்து மீண்டுவிடுவோம் என்ற குறைந்தபட்ச நம்பிக்கைகளோடு உயிர் ஊசலாடும் மிகுதிப்பேரையும் தொற்றுநோய்கள் மரணப்படுக்கையில் சாய்க்கின்றன. 

அத்தியாவசிய மருந்துகளுக்கும் - உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களுக்கும் - வளங்களுக்கும் பெரும் தட்டுப்பாடு நிலவிய அந்த மாபெரும் இனவழிப்பு நெருக்கடிச்சூழலிலும், கையிருப்பிலுள்ள பொருள்களோடு மக்களின் உயிர்களைக்காக்க தமது கடைசிக்கட்ட ஆளுமையையும் பிழிந்தெடுத்து சாறாக்கி அசாத்தியமாக போராடுகின்றார்கள் மருத்துவர்களும் - தமிழீழ மருத்துவத்துறை போராளிகளும். காயப்பட்டவர்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்தும் வரையிலுமாவது தாக்குப்பிடித்துவிட வேண்டும் என்ற நெஞ்சுரத்தோடு மூர்க்கத்தனமான இறுதிக்கட்ட வழிமறிப்புத்தாக்குதல்களில் படைத்துறைப்போராளிகள்.  

அவசரகால மீட்புப்பணியை எப்படிச்செய்வது? திட்டமிட்டு செயல்படுத்துவதற்கு காலஅவகாசம் இருக்கவில்லை. 

யுத்தம் எல்லாவற்றையும் உள்ளிழுத்து சப்பி விழுங்கி செரித்துக்கொள்வதற்கு முன்னரான அந்த ஒரு வார காலமும், கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் - கால் வைக்கும் இடங்கள் முழுத்தும் கும்பல் கும்பலாக குவிந்து பரவி சிதறிக்கிடக்கும் உடலங்களை அப்படியே வாரிக்கூட்டி அள்ளி வழித்துத்துடைத்து எடுத்துக்கொண்டுபோய், முன்னரங்க பாதுகாப்பு அரண்கள் அமைப்பதற்காக மண் அகழப்பட்ட தொடர் அகழிகளுக்குள்ளும், மழை வெள்ள நீர் வழிந்தோட வெட்டப்பட்ட வாய்க்கால்களுக்குள்ளும் சாரைசாரையாக கொட்டிப்புதைத்தனர் அன்று அந்த வல்வளைப்பு முற்றுகை வலயத்துக்குள் எமக்கென்றிருந்து இறுதிவரை சேவகம் செய்த ஒரேயோரு தன்னார்வத்தொண்டு நிறுவனமாகிய தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் தொண்டர்களும் - பணியாளர்களும். 

வார்த்தைக்கட்டுகளுக்குள் அடக்கிவிட முடியாத இந்த மானுடநேயப்பெரும் பணியில் தமிழீழ காவல்துறை உறுப்பினர்களும் இணைந்துகொண்டு வரலாற்று இடர் களைய சளைக்காமல் களமாடினர். தமிழ்த்தேசிய இனத்தின் பேராண்மை பிரபாகரப்பெருந்தகையின் கால்கள் அதிகம் அதிகமாக உலாவிய இறுதி இடமும் இந்த இடம் தான்!

இத்தகைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் மே 18 அன்று காலை 10.30 மணிக்கு உண்மையாய்… உரிமையாய்… உணர்வாய்… ஒன்றுகூடி, தமிழ்த்தேசிய இனத்தின் கூட்டுக்காயங்களை - கூட்டு மனவலிகளை ஒப்புவித்து, தமிழ்த்தேசிய இனத்தின் நெஞ்சத்தை அழுத்தும் - குரல்வளையை அடைக்கும் மாபெரும் வரலாற்றுப்பெருந்துயரில்,

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினரும் - தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினரும் கலந்து – கரைந்து – கசிந்துருகி - நினைந்துருகி உணர்வு கொண்டனர். உறுதி ஏற்றனர். உள்ளுர் மற்றும் சர்வதேச ஊடகவியலாளர்களும் இவ்விடத்துக்கு சமுகமளித்து ‘முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை ஏழாம் வருட நினைவேந்தல் எழுச்சி நிகழ்ச்சியை’ பதிவுசெய்து கொண்டனர். 

முள்ளிவாய்க்காலில் ஈவிரக்கமின்றி சிதைக்கப்பட்ட - காமக்கழுகுகளால் கொத்திக்குதறப்பட்ட போராளிகளினதும், தமிழ் தேசிய குடியினம் வாழ்ந்து வளப்படுத்திய பூர்வீக நிலங்கள் மீது நிகழ்த்தப்பட்ட சிறீலங்கா அரச படைகளின் நில ஆக்கிரமிப்புப்போரினாலும், மனிதத்துவத்துக்கு எதிரான அரச வன்முறைகள் - குற்றங்களினாலும், கொத்துக்குண்டுகள் - பலகுழல் எறிகணைகள் - இரசாயன எரிஅமில வாயுக்களாலும் படுகொலை செய்யப்பட்ட உறவுகளினதும் ஒளிப்பட சாட்சியங்கள் பதாதைகளாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. 

மகாகவி பாரதியாரின் ‘நல்லதோர் வீணை செய்தே அதை நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ…’ பாடல் இசைக்க, பொதுச்சுடரை தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தலைவி (Forum for Searching, Handed, Kidnapped and Forcibly Disappeared Relatives - Tamil Homelandதிருமதி ஆஷா நாகேந்திரன் ஏற்றி அகஒளி பெருக்கினார். 

‘ஓ! வீரர்களே… புனிதர்களே… தியாகிகளே… உறவுகளே… உங்கள் சேவைகள் - தியாகங்கள் - அர்ப்பணிப்புகளால் ஈழதேசம் வாழ்வு பெறும். நிலை கொள்ளும். உங்கள் சாவு அர்த்தப்படும். உங்கள் சாவால் ஈழத்தவர்கள் வல்லமை நீடூழி பெறுவார்கள். இந்த மண்ணிலே விடுதலை பூக்கள் மறுபடியும் எழுந்து பூத்து குலுங்கி சிலிர்த்தாடும். உங்கள் கனவுகளை ஏற்றி பயணிக்கின்றோம். நீங்கள் நிம்மதியாக துயில்கொள்வீராக. இனி எழுவான் திசையில் ஒளிக்கீற்று பிளந்து, இருளைக்கிழித்து - இருளைத்துடைத்து வழியை முழுவதும் காட்டும். ஈழக்குழந்தைகளின் முகத்தில் மகிழ்ச்சிக்கோடு நிரந்தரமாகவே குடிகொள்ளும். உந்துசக்தியாக உள்ளிருந்து எங்களை எல்லாம் இயக்குகின்ற ஆத்மாக்களின் வேட்கையாக உங்கள் தியாகங்களின் மீது சத்தியம் செய்கின்றோம்.’ 

என்று பொதுச்சுடர் முன்னே கைகளை நீட்டி உறுதிப்பிரமாணமும் எடுத்துக்கொண்டனர். (https://youtu.be/Jq9wv3xOvyI?t=2 காணொளியை காணலாம்)

நாங்கள் இங்கே கூட்டாக ஒரு இலட்சிய தீயை ஏற்றி வைத்திருக்கிறோம். காற்றுத்தீண்ட தீண்ட அதன் வெம்மை நாலாபுறமும் வியாபித்து கனன்று கொண்டிருக்கின்றது. தீயின் வெம்மையில் விட்டில்கள் தாமாகவே தேடிவந்து வீழ்ந்து சாவதைப்போல, இந்த நீதித்தீயில் பகை-கொடுமை நிச்சயம் வீழ்ந்து செத்து மடியும்! செத்து மடியும்! செத்து மடியும்! என்ற நிறைந்தளவு நம்பிக்கைகளோடு குனிந்த தமது தலைகளை உயர நிமிர்த்தி ‘வீழ்ந்த இடத்தில் வீரத்தின் துவக்கமாய்’ இன்னும் இன்னும் வலிமையும் பெற்றுக்கொண்டனர். 





















காலப்பெருந்துயர் பகிர்வும், மானுடப்பேரவல நினைவேந்தல் அறிக்கையிடலும்,
-அ.ஈழம் சேகுவேரா-