இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்துக்கு வாக்களித்து, அடிமைப்பட்டுக்கிடக்கின்ற இரண்டு பெரும் தமிழ்த்தேசிய இன மக்களின் வாழ்விலும் ஒளியேற்றுங்கள்!

இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்துக்கு வாக்களித்து, அடிமைப்பட்டுக்கிடக்கின்ற இரண்டு பெரும் தமிழ்த்தேசிய இன மக்களின் வாழ்விலும் ஒளியேற்றுங்கள்! ஈழத்திலிருந்து வவுனியா பிரஜைகள் குழு அறைகூவல். 

தமிழ்நாட்டில் சட்டமன்றத்தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் நேரத்தில் அனல் பறக்கும் கடைசிக்கட்ட பிரசாரங்கள் சூடுபிடித்துள்ளன. இந்தநிலையில் சுடுகாடாகியிருக்கும் ஈழத்திலிருந்து சிவில் சமுக மனித உரிமைகள் அமைப்பாகிய வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு, நாம் தமிழர் கட்சியின் தமிழ்த்தேசிய அரசியல் முன்னெடுப்புக்கு தமிழீழ மக்கள் சார்பாக ஆதரவு தெரிவித்துள்ளதோடு, 

அந்தக்கட்சியின் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்துக்கு வாக்களித்து, ‘அடிமைப்பட்டுக்கிடக்கின்ற இரண்டு பெரும் தமிழ்த்தேசிய இன மக்களின் வாழ்விலும் ஒளியேற்றுமாறு’, தாய்த்தமிழக சொந்தங்களிடம் வினயமாக வலியுறுத்தியுள்ளனர்.

வவுனியா பிரஜைகள் குழுவின் தலைவர் கோ.ராஜ்குமார், செயலாளர் தி.நவராஜ், ஊடகப்பேச்சாளர் அ.ஈழம் சேகுவேரா ஆகியோர் ஒப்பமிட்டு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையின் முழுவிவரமும் வருமாறு:

     
ஊடக அறிக்கை:
14.05.2016

தமிழக வாக்காளர் பிரம்மாக்களுக்கு,

இலங்கையில் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு ஏழு வருடங்கள் முழுமைப்பெற்ற பின்னரும்கூட, சிறீலங்கா அரசின் மனிதத்துவத்துக்கு எதிரான குற்றங்கள் - படுகொலைகளுக்கு எதிராக தொய்வுறாமல் போராடிக்கொண்டிருக்கும் ‘வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு’வினராகிய உங்கள் உறவுகள், தமிழர் தாயகத்தின் எட்டு மாவட்டங்களினதும் தமிழ் மக்கள் சார்பாக அன்புரிமையோடும் - பெருத்த நம்பிக்கையோடும் விடுக்கும் செய்தி.      

இரட்டை மெழுகுவர்த்திக்கு வாக்களியுங்கள். அது அடிமைப்பட்டுக்கிடக்கின்ற (தமிழகம் – தாயகம்) இரண்டு தமிழ்த்தேசிய நிலங்களின் மக்களுக்கும் இருளைத்துடைத்து வழியை முழுவதும் காட்டும் !!!

துரோகம் தந்த பெருத்த காயத்தோடும் - ஆறாத சினத்தோடும் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களும், அவர் கூடவே தமிழ் பிள்ளைகளும் தமிழக தேர்தல் களத்தில் நிற்கின்றார்கள். (ஆலமரம் போன்ற இரண்டு பெரும் திராவிடக்கட்சிகளின் தயவில் பற்றிப்படர்ந்து – ஒட்டி ஒடுங்கினால் மாத்திரமே இன்னபிற கட்சிகள் தக்கன பிழைக்கலாம் எனும் அரசியல் அநுபவ நிலைமையில் கூட, ‘நாம் தமிழர் கட்சி’ பிள்ளைகள் 334 தொகுதிகளிலும் தனித்தே – எதிர்த்தே நிற்கும் நெஞ்சுரமும் - கொள்கைப்பிடிப்பும் கண்டு, தாயக உறவுகள் நாங்கள் முதலில் அண்ணன் சீமான் அவர்களின் கைகளை இறுகப்பற்றிக்கொள்கின்றோம்.)

எதிர்த்தும் - தனித்தும் ஏன் இந்த முடிவு? சிந்தியுங்கள் !!!

எங்களுக்கும் உங்களுக்குமாகிய தமிழ் இன விடுதலைப்போராட்டம், கூட்டுச்சதியாலும், கூட்டுப்படை பலப்பிரயோகத்தாலும் முள்ளிவாய்க்காலில் முற்றுகைக்குள்ளாக்கப்பட்டு, உன்னத விடுதலைப்போருக்கு நாங்கள் உவந்தளித்த போராளிகளும், போராட்டத்தின் நியாயத்தின்பால் ஈர்க்கப்பட்ட மக்களும், கந்தகத்தால் மூச்சுத்திணறி இறுதி சுவாசக்காற்றை உள் இழுத்துக்கொண்டிருந்தபோது,

‘எம் கண்ணில் நீர் வடிந்தால் உம் கண்ணில் உதிரம் கொட்டும் உறவாக’ நீங்கள் கூப்பிடும் தூரத்தில் இருந்தபோதும் - நாங்கள் கூக்குரல் இட்டபோதும், உங்களால் ஓடிவந்து உதவ முடிந்ததா? நாங்கள் எல்லோருமாக பொத்திப்பொத்தி வளர்த்தெடுத்த பெரும் விடுதலை நெருப்பை காக்க முடிந்ததா? இல்லையே… ஏன்? தடுத்தது எது? 

அந்த முற்றுகை வலயத்துக்குள், நாங்கள் இரசாயன எரிஅமில வாயுக்களால் எரிக்கப்பட, நீங்களோ… உங்களுக்கு நீங்களே உடலில் தீயை மூட்டிக்கொள்ள, இப்படி இருவரும் ஒருவர் மாறி ஒருவராக, ஒரு கூட்டுக்குடும்பமாக உயிரை மாய்த்துக்கொள்ள முடிந்ததே தவிர, வேறென்ன செய்ய முடிந்தது? ஏன் முடியாமல் போனது? 

அரசியல் அதிகாரம் !!!

இந்த ஒன்றே ஒன்று அன்றைக்கு நமது கையில் இல்லாது போனதால், மாறி மாறி ஆட்சிபீடமேறிய திராவிடக்கட்சிகளின் இரண்டகத்தை எம்மால் வெற்றிகொள்ள முடியவில்லை.

அன்று அரசியலில் இருந்த தலைவர்களிடம் அண்ணன் சீமான் அவர்கள் ஓடினான், கத்தினான், கதறினான். ஏதோஏதோவெல்லாம் சொல்லிப்பார்த்தான். குருட்டுக்கண்களும் - செவிட்டுக்காதுகளும் திறக்கவேயில்லை. பலர் ஏளனமாய் பார்த்தனர். இன்னும் சிலரோ அண்ணன் சீமான் அவர்களை தீண்டவேயில்லை. அதற்குள் எங்கள் கண் முன்னே ஈழ சாம்ராஜ்ஜியம் சரிந்துகொட்டி கணப்பொழுதில் எல்லாமே முடிந்துபோய்விட்டது. விக்கித்து வெறுங்கையோடும், துரோகம் முதுகில் குத்திய ஜீரணிக்க முடியாத வலியோடும் அன்று ஏதிலிகளாக நின்றது அண்ணன் சீமான் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகத்தமிழர்களும் தான்.

தமிழ்த்தேசிய இனத்தின் கையறுநிலையிலும் - ஏமாற்றத்திலும் மறுபடியும் தொடங்கிய மிடுக்கே ‘நாம் தமிழர் கட்சி’

நாம் தமிழராக ஒன்றுபடுங்கள் !!!

சாதிகளாலும், மதங்களாலும், பிணக்குகளாலும் பிளவுண்டு சிதறுண்டு கிடந்த தமிழினத்தை, தமிழுக்காகவும் - தமிழருக்காகவும் இனத்தின் பெயரால் பெருமெடுப்பில் ஒன்றுதிரட்டிய பெருமை அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களையே சாரும். 

‘தமிழர் நாட்டை தமிழர் தான் ஆளவேண்டும்’ என்று தமிழர் நலனை முன்னிறுத்தி தேர்தல் களத்தை சந்தித்திருக்கும் நாம் தமிழர் கட்சியின் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தின் மேலே புள்ளடியிடப்படும் உங்கள் ஒவ்வொருவரது வாக்கும், அடிமைப்பட்டுக்கிடக்கின்ற இரண்டு பெரும் தமிழ்த்தேசிய இன மக்களின் வாழ்விலும் இருளைத்துடைத்து ஒளியை பாய்ச்சும். வழியை காட்டும்.    

‘இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை’ எனும் புனிதக்கனவோடு, தமிழ்த்தேசிய அரசியல் முன்னெடுப்பை தொடங்கியிருக்கும் நாம் தமிழர் கட்சியை ஆதரித்து வாக்களித்து பலப்படுத்துங்கள். தாய்த்தமிழக உறவுகளே! உங்கள் வாக்கில் தங்கியிருக்கிறது இரண்டு பெரும் தமிழ்த்தேசிய நிலங்களின், இனங்களின் வாழ்வும் - வளமும் - நிறைவும். 

சுடுகாடாகியிருக்கும் ஈழத்தின் சாம்பல் மேடுகளிலிருந்து மெல்ல துளிர்க்கும் நம்பிக்கைகளோடு… உங்கள் உறவுகள்,



உண்மையாய்… உரிமையாய்… உணர்வாய்…
மக்கள் நலப்பணியில்,
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினர்,