இல.ஜனாதிபதி மைத்திரியின் லண்டன் வருகையை கண்டித்து பிரித்தானிய தமிழர் பேரவையினரால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்ட பேரணி

இலங்கையின்  தற்போதைய அரச அதிபரும் இனப் படுகொலை அரசின் பங்காளியுமான மைத்திரி அவர்கள் 11ம் திகதி அன்று லண்டன் வருவதை முன்னிட்டு பிரித்தானிய வாழ் தமிழர்களின் கண்டனங்களை தெரிவுக்கும் முகமாக பிரித்தானிய தமிழர் பேரவையினரால் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று ஒழுங்கு 
செய்யப்பட்டுள்ளது. 
 Marlborough House பகுதியில் Commonwealth Secretariat முன்பாக காலை 8 மணி முதல் மாலை 6.30 மணி வரை ஒழங்கு செய்யப்பட்டுள்ள இப் பேரணிக்கு பிரித்தானிய வாழ் தமிழர்கள் அனைவரையும் கலந்து கொண்டு தமது பூரண ஆதரவினை வழங்குமாறு பிரித்தானிய தமிழர் பேரவை கேட்டுக்கொள்கின்றது.



கடந்த ஐ நா சபையின் மனித உரிமை கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக உள்நாட்டு விசாரணையில் சர்வதேச நாட்டு நீதவான்கள் மற்றும் சட்ட வல்லுனர்களின் பங்களிப்பினை நிராகரித்ததுடன் தற்பொழுது சர்வதேச சமூகத்தை ஏமாற்றும்  முகமாக பல அரசியல் செயர்ப்பாடுகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. இவ்வாறான இலங்கை அரசின் கபட நாடகங்களை சர்வதேச நாடுகளுக்கு தெரியப்படுத்துவதுடன் எமது கண்டனங்களை வெளிப்படுத்துவதற்கும் உரிய முக்கிய காலகட்டம் இதுவாகும். 



யுத்தம் முடிவடைந்த பல வருடங்கள் முடிவடைந்த போதும் தமிழர்களுக்கான உரிய தீர்வுத் திட்டங்களையோ அல்லது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நீதியையோ வழங்காது  இப் புதிய அரசாங்கமும் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ச்சியாக  மேறக்கொண்டு வருகின்றது. இந் நிலையில் நாளை11ம் திகதி நடைபெறவிருக்கும் பொது நலவாய நாடுகளின் நிகழ்வொன்றில் பங்கு கொள்ள லண்டன் வரும் இலங்கை ஜனாதிபதி மைத்திரி அவர்களுக்கு தமிழர்களின் ஒருமித்த எதிர்ப்பினை காட்டும் முகமாகவும் இலங்கையில் தொடர்ச்சியாக தமிழர்களுக்கு எதிராக மேற்கொண்டு வரும் வன்முறைகள்,கைதுகள் மற்றும் சித்திரவதைகள், நில அபகரிப்பு  என்பவற்றை கண்டித்தும், யுத்தக் குற்றச் சாட்டுகள் தொடர்பாக எதுவித காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளாது சர்வதேச சமூகத்தையும் தமிழர்களையும் ஏமாற்றுவதை கண்டித்தும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இப் பேரணியில்  எமது ஒருமித்த எதிர்ப்பினை வெளிப்படுத்தும் முகமாக பிரித்தானிய வாழ் தமிழர்கள்   அனைவரையும்  கலந்து கொண்டு தமது முழு ஆதரவினை வழங்குமாறு பிரித்தானிய தமிழர் பேரவை உரிமையுடன் வேண்டிக் கொள்கின்றது