கனடாவிலுள்ள தமிழர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை- குடியுரிமைகள் விண்ணப்பம் தொடர்பிலான தொலைபேசி அழைப்புக்கள் மூலம் மோசடிகள்
தற்பொழுது கனடாவில் குடியுரிமைகள் விண்ணப்பம் தொடர்பிலான தொலைபேசி அழைப்புக்கள் மூலம் பெறுமளவில் மோசடிகள் இடம்பெறுவதனால் கனடாவில் வசித்து வரும் தமிழர்கள் அது குறித்து அவதானமாக இக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, குறித்த ஒரு தரப்பு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு, ‘நாம் கனேடிய மத்திய காவல்துறையிலிருந்து பேசுகின்றோம்.
உங்களுடைய குடிவரவு விசாரனை சம்பந்தமான ஒரு விண்ணப்பத்தை நீங்கள் கடந்த காலத்தில் பூர்த்தி செய்யவில்லை. இந்த இணைப்பை குடிவரவு அதிகாரிக்கு மாற்றுகின்றேன’; என தெரிவித்து அழைப்பை மாற்றுவார்கள்.
பின்னர் அங்கு குடிவரவு அதிகாரியென கூறி மற்றொருவர் கதைத்து, மக்களை நம்ப வைக்க அவர்கள் பற்றிய தனிப்பட்ட விபரங்களையும் தெரிவிப்பார்கள். பின்னர் அவர் காவல் துறைக்கு என்று கூறி அழைப்பை இன்னுமொரு இடத்திற்கு மாற்றுவார்.
பின்னர், காவல் துறையில் என்று கூறி கதைப்பவர், குறித்த பிரச்சினையை சரிசெய்வதற்காக தண்டப் பணம் தேவை என்று கூறி அவர்களிடமிருந்து பணம் பெற்றுக்கொள்வார்கள். இந்த செயலினால் அங்குள்ள பல தமிழர்கள் பாதிப்படைந்துமுள்ளனர்.
எனவே இவ்வாறான ஏமாற்றும் மோசடி செயற்பாடுகள் குறித்து கனடாவில் உள்ள தமிழர்கள் அவதானமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்று அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இவ்வாறான அழைப்புக்களினால் ஏமாற்றப்பட்டுள்ளவர்கள் பொலிஸ் நிலையத்தில் தகவல் வழங்கி முறைப்பாடு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.