சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று மே 16 அன்று 73.76 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம்
தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியில் 88.5
சதவீதமும், குறைந்தபட்சமாக சென்னை துறைமுகம் தொகுதியில் 55.2 சதவீதமும் வாக்குகள்
பதிவானதாக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் சட்டசபை தொகுதிகள் நீங்கலாக மீதமுள்ள 232
தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிவரை
நடைபெற்றது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தொடர்ந்து பல இடங்களில் மழை
பெய்ததால் வாக்களிக்க வர மக்கள் தயக்கம் காட்டினர். சில பகுதிகளில் குடையுடன் வந்து
நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து விட்டு சென்றனர்.
மழை, மின்வெட்டு பிரச்சினை வாக்காளர்களை மிரட்டினாலும் ஏராளமான வாக்காளர்கள்
ஆர்வத்துடன் வந்து ஜனநாயகக் கடமை ஆற்றியதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ்
லக்கானி தெரிவித்தார். ஒரு சில அசம்பாவித சம்பவங்களைத் தவிர வாக்குப்பதிவு அமைதியான
முறையில் நடைபெற்றதாகவும் அவர் கூறினார்.
மதுரை, ராமநாதபுரம், காவிரி டெல்டா மாவட்டங்களில் கடும் மழை கொட்டியதால்
வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டது. காலை 11 மணிவரை வாக்குப்பதிவு குறைவாக காணப்பட்டது.
மழை பெய்யாத மாவட்டங்கள் தவிர ஏனைய மாவட்டங்களில் ஓட்டுப்பதிவு நன்றாக இருந்தது.
பெரும்பாலான மாவட்டங்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியதாக
தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறினார்.
இன்று காலை 9 மணிக்கு 18% வாக்குகள் பதிவாகின. 11 மணிக்கு 25.2 சதவிகிதமும்,1
மணிக்கு 42.1 சதவிகித வாக்குகளும் பதிவானது. பிற்பகல் 3 மணிக்கு மேல் மீண்டும்
வாக்குப்பதிவு விறுவிறுப்படைந்தது. தமிழகம் முழுவதும் 3 மணி வரை 63.70% வாக்குகள்
பதிவாகி இருந்தன.
மழை பெய்த மாவட்டங்களில் மழை குறைந்த உடன் ஓட்டுப்பதிவு அதிகரித்தது. கன மழை பெய்த
வேதாரண்யம், நாகையில் மாலையில் ஓட்டுப்பதிவு நன்றாக இருந்ததாகவும் தென் மாவட்ட
ஓட்டு சதவீதம் அதிகரித்தாகவும் ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
மாலை 5 மணி நிலவரப்படி 69.19 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. மாலை 6 மணிக்கு
வாக்குப்பதிவு நிறைவடைந்தபோது 73.76 சதவீத வாக்குகள் பதிவானதாக ராஜேஷ் லக்கானி
கூறினார். கடந்த நாடாளுமன்ற தேர்தலை சட்டசபை தேர்தலில் அதிக வாக்குகள்
பதிவாகியிருப்பதாகவும், முழுமையான வாக்குப்பதிவு சதவீதம் காலையில் தெரியவரும்
என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அரியலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் வாக்குப்பதிவு 70 சதவீதத்தை அடைந்த போதும்
சென்னையில் 50.27% வாக்குகளே பதிவானது. சென்னையில் வாக்குபதிவு சதவிகிதம்
குறைந்துள்ளதாகவும் ராஜேஷ் லக்கானி கூறினார்.
வாக்கு பதிவு நிலவரம் அறிவிக்க தாமதம்
ஏன்?
வாக்குப்பதிவு நடைபெற்ற உடன் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்கு சதவிகிதம்
அறிவிக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் 2 மணி நேரத்திற்கு ஒருமுறை கூட வாக்கு
சதவிகிதம் அறிவிப்பதில் தடுமாற்றம் ஏற்பட்டது. 232 தொகுதிகளில் இருந்தும் தேர்தல்
அதிகாரிகள் எஸ்.எம்.எஸ் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டதே வாக்கு சதவிகிதம்
அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டதாக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறினார்.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. வாக்குப்பதிவு
முடிந்த உடன் மின்னணு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும்
மையங்களுக்கு பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன. மே 19ம் தேதி வாக்குகள்
எண்ணப்பட்டு முடிவுகள் அன்றைய தினமே அறிவிக்கப்படும்.
புகைப்படங்கள் உதவி: தட்ஸ் தமிழ் இணையம்