மே 18 அன்று, முள்ளிவாய்க்காலை நோக்கி பெரும் மக்கள் கூட்டமாக திரண்டு வாருங்கள். இனப்படுகொலை
நடத்தப்பட்ட மண்ணில் நின்றுகொண்டு, தமிழ் இனப்படுகொலைக்கு நீதி கோருவோம்.
வவுனியா பிரஜைகள் குழு, முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள்
உரிமைக்கான அமையம், தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல்
ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கங்கள் (FSHKFDR - Tamil
Homeland) கூட்டாக
அறைகூவல் !!!
கூட்டு ஊடக அறிக்கை:
28.04.2016
மே 18 அன்று, முள்ளிவாய்க்காலை நோக்கி பெரும் மக்கள்
கூட்டமாக திரண்டு வாருங்கள்.
இனப்படுகொலை நடத்தப்பட்ட மண்ணில் நின்றுகொண்டு, தமிழ்
இனப்படுகொலைக்கு நீதி கோருவோம்.
சிறீலங்கா அரசாங்கமானது, ஐந்தரை இலட்சத்துக்கும் அதிகமான மக்களை ஒன்றரை
கிலோமீற்றர்கள் நீரேந்து நிலப்பரப்புக்குள் (களப்புக்குள்) முற்றுகையிட்டு,
கொத்துக்குண்டுகளாலும், பல்குழல் எறிகணைகளாலும், இரசாயன எரிஅமில வாயுக்களாலும்
நிகழ்த்திய மாபெரும் தமிழினப்படுகொலையை – மனிதப்பேரவலத்தை – மனித உரிமை
மீறல்களைக்கண்டித்து, பெரும் மக்கள் கூட்டமாக ஒன்றுகூடி ‘நீதி கேட்கும் பொறிமுறை
நினைவேந்தல் எழுச்சி நிகழ்ச்சி’க்கு மே 18 புதன்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு
முள்ளிவாய்க்காலில் ஏற்பாடுகள் செய்துள்ளோம்.
2009ம் வருடம் இறுதி யுத்த முற்றுகை வலயமாகவும், சிறீலங்கா அரசின் கொலைக்களமாகவும்
ஆக்கப்பட்டு, ஒன்றரை இலட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட
முள்ளிவாய்க்கால் மண்ணில் ஒன்றுகூடி, தமிழர் தேசியப்பெருந்துயரை உலகுக்கு
பறைசாற்றுவதோடு, வீழ்ந்த இடத்தில் வீரத்தின் துவக்கமாக எழுச்சி கொள்ளும்
தமிழ்த்தேசிய இனத்தின் ஒன்றுகூடலாகவே, இம்முறை ‘முள்ளிவாய்க்கால் தமிழ்
இனப்படுகொலை ஏழாம் வருட நினைவேந்தல்’ நிகழ்ச்சியை பிரகடனம் செய்துள்ளோம்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகள் ஜீன் மாதம்
தொடங்கவுள்ள காலச்சூழலில், சிறீலங்கா அரசின் இனப்படுகொலைக்கு உட்பட்டும் தப்பியும்
பிழைத்திருக்கும் தமிழ்த்தேசிய இனம், கந்தகத்தாலும் குருதியாலும் தோய்த்து
எடுக்கப்பட்டு இனப்படுகொலை நிகழ்த்தப்பட்ட மண்ணில் நின்றுகொண்டு நீதி கேட்கும்
குறித்த மே 18 தேசிய ஒன்றுகூடலானது முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகின்றது.
எனவே இந்த உயரிய நோக்கத்தை சிதைக்கும் படியாக, தத்தமது சௌகரியங்களுக்காக -
சுயநலன்களுக்காக முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நினைவேந்தலை சிறு சிறு
குழுக்களாக, உதிரிகளாக அங்கொன்றும் இங்கொன்றுமாக கூட்டங்களை நடத்தி,
மே 18 புதன்கிழமை அன்று முள்ளிவாய்க்காலில் இடம்பெறவுள்ள ‘தமிழ்த்தேசிய இனத்தின்
ஒன்றுகூடலுக்கு’ மக்களை பெரும் கூட்டமாக கலந்துகொள்ளவிடாது தடுக்கும் -
குழப்பங்களை ஏற்படுத்தும் அனைத்து நிகழ்ச்சிகளையும் உடனடியாக இரத்து
செய்யும்படியும் - தவிர்த்துக்கொள்ளும்படியும் தமிழர் தாயகத்தின் எட்டு
மாவட்டங்களிலும் உள்ள சகல பிரஜைகளையும் அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
‘முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை ஏழாம் வருட
நினைவேந்தல்’ ஆனது, இம்முறை ‘நீதி கேட்கும் பொறிமுறை நினைவேந்தல் எழுச்சி
நிகழ்ச்சி’யாக, ‘தமிழ்த்தேசிய இனத்தின் ஒன்றுகூடல்’ ஆக, அதுவும் இனப்படுகொலை
நடத்தப்பட்ட முள்ளிவாய்க்கால் மண்ணில் மட்டுமே இடம்பெறும் என்பதையும் சிரத்தையோடு
கவனத்தில்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
‘நான்… நான்… என்று தன்னிலை முன்னிறுத்தல்களை முற்றிலுமாகத்துறந்து, நாங்கள்
அதாவது இனம் என்று ஒன்றுபடுமாறு’ அனைத்து தரப்புகளுக்கும் வலிறுத்துகின்றோம்.
மாவீரத்தெய்வங்களினதும் - மேன்மக்கள் ஆத்மாக்களினதும் உன்னத தியாகங்களை
நலினப்படுத்தும் - மலினப்படுத்தும் வகையில், ‘அங்கு அவர்கள் காலை செய்கிறார்கள்,
இங்கு நாங்கள் மதியம் அல்லது மாலை செய்கிறோம்’ எனும் குறுமனநிலை – குழுநிலை
வாதங்களை உடனடியாக களைந்து,
அனைத்து அரசியல் கட்சிகளினதும் தலைவர்கள் - பிரமுகர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள்,
வடக்கு கிழக்கு மாகாணசபைகளின் உறுப்பினர்கள் (தத்தமது ஆதரவாளர்களுடன்),
மதத்தலைவர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள், சிவில் சமுக அமைப்புகளின்
பிரதிநிதிகள், மாணவர்கள், கல்வியாளர்கள், பேராளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள்,
சமுக ஆர்வலர்கள், பொதுமக்கள் என்று சகல பிரஜைகளையும் மே 18 அன்று,
முள்ளிவாய்க்காலை நோக்கி பெரும் மக்கள் கூட்டமாக உணர்வுபூர்வமாக திரண்டு வருமாறு
அழைப்பு விடுக்கின்றோம்.
மே 18 புதன்கிழமை அன்று தமிழர் தேசியப்பெருந்துயரை உலகுக்கு பறைசாற்றுவதற்காக,
தமிழர் தாயகத்தின் எட்டு மாவட்டங்களிலும் முழுமையான ஹர்த்தாலுக்கு (முழுநாள்
கடையடைப்புக்கு) அனைத்து வர்த்தக சங்கங்களையும், தனியார் பேருந்து போக்குவரத்து
சங்கங்களையும், வன்முறைகள் - படுகொலைகளுக்கு உள்ளாக்கப்பட்டு உயிர்நீத்த எமது
உறவுகளை விசுவாசமாகவும், நன்றியுணர்வாகவும் நினைவுகூர்ந்து அஞ்சலிப்பதை தமிழ்
இனத்தின் (ஒவ்வொரு பிரஜையினதும்) தேசியக்கடமையாகக்கொண்டு முழுமையான ஒத்துழைப்பை
உளத்தூய்மையோடு வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.
பொதுச்சுடர் ஏற்றும் மரபு !!!
நான் பெரிது – நீ பெரிது என்று தொடரும் குறுமனநிலைப்போக்கை களைந்து இனம் அதாவது
நாடு பெரிது என்று வாழும் உணர்வை தமிழ்ச்சமுகத்தில் வளப்படுத்துவதற்காக இம்முறை,
‘முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை ஏழாம் வருட நினைவேந்தல்’ நிகழ்ச்சியில்
பொதுச்சுடரை,
தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பங்களைச்சேர்ந்த ஒருவர், அல்லது முள்ளிவாய்க்கால்
தமிழ் இனப்படுகொலையை ஒளிப்பதிவுசெய்து ஐ.நா சபை வரை இனப்படுகொலை ஆதாரமாக கொண்டு
சென்று சேர்ப்பித்த களப்படப்பிடிப்பாளர் (ஊடகவியலாளர்) ஒருவர், அல்லது மருத்துவ
பொருள்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவிய அந்த அபாயகரமான சூழலில் மானுடநேய
மருத்துவப்பணியாற்றி எச்சசொச்ச உயிர்களைக்காப்பாற்றிய மருத்துவர் ஒருவர், அன்றி
முள்ளிவாய்க்கால் கொலைக்களத்தில் தாய் தந்தை இருவரையும் இழந்து சிறுவர்
இல்லங்களில் பராமரிக்கப்பட்டுவரும் சிறுவர் சிறுமிகளில் ஒருவர் ஏற்றுவதே
உசித்தமானதாகவும், அதுவே எமது நிலைப்பாடாகவும் உள்ளது என்பதையும் சகல
பிரஜைகளுக்கும் வினயமாக அறியத்தருகின்றோம்.
உண்மையாய்… உரிமையாய்… உணர்வாய்…
வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினர்,
முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் உரிமைக்கான அமையத்தினர்,
தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல்
ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கங்கள் (Forum
for Searching, Handed, Kidnapp ed and Forcibly Disappeared Relat ives
- Tamil
Homeland)