மறுக்கப்படும் நீதியை வென்றெடுத்து எம் மக்களின் நெடுந்துயர் தீர்க்க மே-18 ல் பிரித்தானியவில் ஒன்றிணைவோம்!
7ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவேந்தல் மே- 18ம் திகதி
பிரித்தானிய தமிழர் பேரவையினால் வழமை போன்று மத்திய லண்டனில் Piccadilly Circus
அல்லது Charing Cross நிலக்கீழ் தொடருந்து நிலையத்திற்கு அண்மையில் உள்ள waterloo
Place (SW1Y 5ER) - இல் மாலை 3 மணிக்கு பெரும் எழுச்சிப் பேரணி ஆரம்பமாகி மாலை 5
மணிக்கு Westminster நிலக்கீழ் தொடருந்து நிலையத்திற்கு அண்மையில் உள்ள Richmond
Terrace (SW1A 2AT) இல் பொதுக் கூட்டத்துடன் நினைவு கூரப்பட உள்ளது. சென்ற ஆண்டும்
இதே இடத்தில் நினைவு கூறல் நிகழ்ச்சி இடம் பெற்றது குறிப்பிடத் தக்கது.
ஸ்ரீலங்கா இனவாத அரசுகளினால் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக தமிழ்
மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையின் உச்சக்கட்டமாக 18-05-2009 அன்று வரை
முள்ளிவாய்க்காலில் 70,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழ் மக்கள்
படுகொலை செய்யப்பட்டும், 80,000க்கு மேற்பட்ட தமிழ் பெண்கள் விதவைகள்
ஆக்கப்பட்டும், 25,000த்திற்கும் மேற்பட்ட சிறார்கள் அனாதைகள் ஆக்கப்பட்டும்,
மேலும் 146,679 தமிழ் அப்பாவி இளைஞர்கள், யுவதிகள், பெண்கள், என பலர்
கடத்தப்பட்டும் காணாமல் போயுமுள்ளனர்.
போர் முடிவடைந்து 7 வருடங்கள் கடந்த பின்னரும் ஸ்ரீலங்கா அரசால் மேற்கொள்ளப்படும்
கட்டமைக்கப்பட்ட தமிழின அழிப்பும், நில அபகரிப்புகளும், தொடர்ச்சியாக துரிதகதியில்
எமது தாயகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்பொழுது சர்வதேச சமூகம் எமக்கு நடந்த, நடந்து கொண்டிருக்கும் அநீதியின்
ஒருபகுதியை விளங்கிக் கொண்டிருக்கும் இந்தவேளையில் ஸ்ரீலங்கா அரசு தமிழ் மக்களை
அச்சுறுத்தல் மற்றும் இன்முகம் காட்டல் மூலமாக மக்களை நீதிக்கான போராட்டத்தில்
இருந்து விலக்கி வைக்கப் பார்க்கின்றது.
எழுச்சி கொண்ட தமிழ் மக்களை போராடும் சக்திகளிடமிருந்து அந்நியப்படுத்தி விடலாம்
என நினைக்கின்றது. பாதிக்கப்பட்ட தமிழ் மக்களாகிய நாம் அதைப் புரிந்துகொண்டு
ஒற்றுமையுடன் முறியடிப்போமாக.
அதேவேளை 2009 முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின் தாயகத்தில் அவலப்படும் எமது
மக்களுக்காகக் குரல் கொடுக்கும் புலம்பெயர் தமிழ் மக்களினதும், புலம்பெயர் தமிழ்
அமைப்புகளின் நீதிக்கான போராட்டங்களை ஸ்ரீலங்கா அரசு, தனது தந்திரமான
நடவடிக்கைகளின் மூலம் முடக்க முயல்கின்றது.
இதைப் புலம்பெயர் தமிழர்களாகிய நாம் அறிவுபூர்வமாக புரிந்துகொண்டு தக்க நேரத்தில்
தக்க பதிலடிகொடுக்க அனைத்து தமிழ்மக்களும் எழுச்சியுடன் அணி திரள்வோம். வாருங்கள்!
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகள் ஜீன் மாதம் தொடங்கவுள்ள பின்னணியில் மே
18 ஒன்றுகூடலானது புலம்பெயர் தேசத்தில் ஒன்றுபட்ட தமிழ் மக்களின் குரல்
முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகின்றது.
இந்த உயரிய நோக்கத்தை சிதைக்கும்படியாக, தத்தமது சுயநலன்களுக்காக முள்ளிவாய்க்கால்
தமிழ் இனப்படுகொலை நினைவேந்தலை சிறு குழுவாக, உதிரியாக நடத்தி, மே 18 புதன்கிழமை
அன்று இடம்பெறவுள்ள எழுச்சி மிக்க ஒன்றுகூடலுக்கு’ மக்களை பெரும் கூட்டமாக
கலந்துகொள்ளவிடாது - குழப்பங்களை ஏற்படுத்தும் அனைத்து தனிநபர்களையும் தேசத்தின்
நலன் கருதி, கடந்த காலங்களைப் போல் ஒற்றுமையுடன் செயல்பட முன்வருமாறு அன்புடன்
கேட்டுக்கொள்கின்றோம்.
எதிர்வரும் 18/05/2016 அன்று மாபெரும் நீதிகேள் நினைவெழுச்சி நிகழ்வாக
நடைபெறவுள்ள மே-18 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுநாள் நிகழ்வில் மக்கள் நாம்
பெருந்திரளாய் பங்கேற்று ஈழத்தில் இறுதி நாளில் எம் மண்ணில் பேரினவாத
அரசாங்கத்தால் நீதிக்குப் புறம்பாய் படுகொலைக்காளாகி விதையாகிப்போன உறவுகளுக்கு
அஞ்சலி செலுத்தியும், தொடர்ந்து மறுக்கப்பட்டு வரும் நீதியினை சர்வதேசத்தின் ஊடாக
பெற்றுக் கொள்ள வலியுறுத்தியும், நீதி மறுக்கப்பட்ட ஒரு இனத்தின் உரிமைக் குரலாக
உலக அரங்கில் ஓங்கி ஒலிக்கவும் ஒன்றிணைவோம்!
எம் இனிய உறவுகளே! அணி திரள்வோம்! வாரீர்!
பிரித்தானிய தமிழர் பேரவையின் ஒருங்கமைப்பின் கீழ் ஆண்டுதோறும்
நடைபெற்று வரும் நீதி கோரும் இவ்வெழுச்சிப் பேரணியில் வேறுபாடுகள் களைந்து எம்
ஒற்றுமையின் குரலாக ஒன்றிணைவோம். ஈழத்தில் எம்மினம் பட்ட அவலங்களை உலகுக்கு
எடுத்துச் சொல்வோம். காலத்தால் இழுத்து செல்லப்பட்டு மறக்கடிக்கப்பட்டு விடக்
கூடியவையல்ல எம்மினம் அனுபவித்த துயரங்கள். மெல்லென மாறிவரும் சர்வதேசத்தின்
கரிசனையினை மேலும் எமக்கானதாய் மாற்றிக் கொள்ள ஒன்றினைவோம் வாருங்கள்!
விடுதலை உணர்வோடு வலிகளின் நினைவுகளைத் தாங்கி மரணித்துப் போன எம் மக்களின்
கனவுகளோடும், வலி சுமந்து வாழும் எம் மக்களின் துயரினைப் போக்கும் வரலாற்றுக்
கடமையோடும் மாபெரும் மாற்றமொன்றினை மண்ணில் நிகழ்த்துவோம் வாரீர்!
எம் இனிய சொந்தங்களே!அனைவரும் கருப்பு உடை அணிந்து குறிப்பிடப்படும் முகவரியில்
குறித்த நேரத்தில் ஒன்றுகூடி வதைக்கப்பட்ட எம் மக்களுக்காய் நீதி கேட்கும் இந்
நிகழ்வில் நீங்களும் பங்கு பெற உரிமையோடு அழைக்கிறது பிரித்தானிய தமிழர் பேரவை.
7 ஆண்டு கால புலம்பெயர் மக்களின் கடும் முயற்சி சர்வதேசத்திலும் தாயகத்திலும் பல
சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றமை நிதர்சனமானது. அனைத்துல ரீதியாக அரசியல்
ராஜதந்திர செயல்பாடுகள் மூலம் இதனை மேலும் வலுப்படுத்த பிரித்தானிய தமிழர்
பேரவையுடன் இணைந்து கொள்வோம்! இறுதி வெற்றி ஒடுக்கப்பட்ட எம் தமிழினத்திற்கே!
குறிப்பு;- வர்த்தக நிறுவனங்கள், ஆலயங்கள், தமிழ் பொது அமைப்புக்கள், விளையாட்டு
அமைப்புக்கள், தமிழ்ப் பாடசாலைகள், ஊர்ச் சங்கங்கள் எம் இனம் சார்பான தங்களின்
பிரதிபலிப்புக்களை, பதாதைகளை தாங்கியவாறு பங்கேற்குமாறும், பெற்றோர்கள் வளர்ந்து
வரும் எம் இளையோருக்கு இன உணர்வினையும் தேசிய சிந்தனையினையும் கையளுக்கும் விதமாக
தம் பிள்ளைகளுடனும் தமிழ்த் தேசியத்தின் பெயரால் ஒன்றிணையுமாறு கேட்டுக்
கொள்கின்றோம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்