சிறிலங்காவின் நில அபகரிப்பு நடவடிக்கைகளை சர்வதேசத்திடம் ஆதாரபூர்வமாக அம்பலப்படுத்தியது பிரித்தானிய தமிழர் பேரவை!
இலங்கையில் தமிழர்களுக்கான இனப்படுகொலையின் ஒரு பகுதியாக தமிழர்களின் பூர்வீக நிலங்கள் அரசாங்கத்தினாலும், இலங்கை இராணுவத்தினராலும் தொடச்சியாக அபகரிக்கப்பட்டு சிங்களமயமாக்கல் நிரந்தரமாக்கப்படுகின்றது.
தொடர்ச்சியான நில அபகரிப்பினை நிறுத்துவதற்கும் அபகரிக்கப்பட்ட தமிழர் நிலங்களை மீள ஒப்படைக்க கோரியும், இவ்வாறான தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் நடவடிக்கைகளை சர்வதேச சமூகத்துக்கு தெரியப்படுத்தும் நோக்கிலும் கடந்த காலங்களில் பிரித்தானிய தமிழர் பேரவையினரால் நில அபகரிப்பு தொடர்பான காத்திரமான செயல்பாடுகள் பல தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டன. தமிழர் தேசத்தில் திட்டமிட்ட நில அபகரிப்பை அம்பலப்படுத்தும் சர்வதேச மாநாடு பிரித்தானியாவில் ஒழுங்கு செய்யப்பட்டு பன்னாட்டுப் பிரதிநிதிகள், பேராசிரியர்கள்,சட்டவல்லுனர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஐ. நா.வில் உயர் பதவிகளில் இருந்தோர், சர்வதேச நிறுவனங்கள் கலந்து கொண்டதுடன் அவர்கள் முன்னிலையில் நில அபகரிப்பு தொடர்பான ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டன. முன்னைய ராஜபக்ச அரசு தங்கு தடையின்றி மேற்கொண்டு வந்த நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை பிரித்தானிய தமிழர் பேரவை சர்வதேசத்தின் கண் முன்னாள் கொண்டு வந்ததன் மூலம் அதன் வேகம் மட்டுப்படுத்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக இலங்கை அரசின் மீது மேற்கொள்ளப்பட்ட சர்வதேச சமூகத்தின் அழுத்தம் காரணமாக இலங்கையின் புதிய அரசு ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் சில பகுதிகளை மட்டும் 2015ம் ஆண்டு தமிழர்களிடம் மீள ஒப்படைத்து சர்வதேச சமூகத்தை ஏமாற்றியது. எனினும் இவ்வருடம் புதிய அரசு புனரமைப்பு மற்றும் நஷ்ட ஈடு வழங்கல் என்னும் போர்வையில் மீண்டும் தமிழரின் நிலங்கள் அபகரிக்கப்பட்டு சிங்கள குடியேற்றங்களை உறுதி செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பான ஆதாரபூர்வமான தரவுகளை மிகுந்த சிரமத்தின் மத்தியில் சேகரிக்கப்பட்டு ஐ. நா சபைக்கும் அங்கத்துவ நாடுகளின் ராஜதந்திரிகளுக்கும் தெரிவிக்கும் செயற்பாடுகளை பிரித்தானிய தமிழர் பேரவை மேற்கொண்டுள்ளது.
அண்மையில் மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் ( CPA) என்னும் கொழும்பிலிருந்து செயற்ப்படும் அமைப்பு வெளியிட்ட அறிக்கையின் பிரகாரம் வட மாகாணத்தில் 12, 000 ஏக்கர் நிலப்பரப்பு இலங்கை இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது. எனினும் உண்மையான தரவுகளின்படி 01 மார்ச் 2016ம் ஆண்டு வரையில் 67,427 ஏக்கர் நிலப்பகுதி வட மாகாணத்தில் அபகரிக்கப்பட்டுள்ளமை ஆதரங்களுடன் பிரித்தானிய தமிழர் பேரவையினரால் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இலங்கையின் மகிந்த ராஜபக்சவின் முன்னால் அரசாங்கத்தினால் தமிழர் பிரதேசத்தில் அபகரிப்பு செயப்பட்ட 69,992 ஏக்கர் நிலப் பகுதியில் இதுவரை புதிய அரசாங்கத்தினால் 2565.5ஏக்கர் நிலப்பகுதி மட்டுமே ஆட்சி மாற்றத்தின் பின் 2015 ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தது. அதாவது இது வரை விடுவிக்கப்பட்ட நிலப்பகுதி அபகரிக்கப்பட்ட நிலப் பகுதியின் 3.6% மட்டுமே ஆகும்.
மாவட்டம்
|
ஆக்கிரமிக்கப்பட்டநிலம் (01/01/2015)
|
ஜனவரி 2015இன்பின்விடுவிக்கப்பட்டது
|
ஆக்கிரமிக்கப்பட்டநிலம் (01/03/2016)
|
முல்லைத்தீவு
|
19,790
|
134
|
19,656
|
கிளிநொச்சி
|
12,840
|
474
|
12,366
|
வவுனியா
|
23,778
|
14
|
23,764
|
யாழ்ப்பாணம்
|
6,270
|
1709.5
|
4,561
|
மன்னார்
|
7314
|
234
|
7,080
|
69,992
|
2565.5
|
67,427
|
பிரித்தானிய தமிழர் பேரவையினரால் வட பகுதியில் நம்பகமான வட்டாரங்கள் மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தற்போதைய அரசாங்கத்திலும் அதிகளவினாலான நிலங்கள் விடுவிக்கப்படாமல் உள்ளது.
இலங்கை அரசினால் தொடர்ச்சியாக தமிழர்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் வழங்கப்படும் போலி வாக்குறுதிகளையும் ஏமாற்றும் நடவைக்கைகளையும் ஆதாரபூர்வமாக வெளிக் கொண்டு வருவதற்கு தாயகத்திலுள்ள அமைப்புகள் முன்வர வேண்டும் என பிரித்தானிய தமிழர் பேரவை வேண்டுகோள் விடுக்கின்றது. எம் தாயகத்தின் நிலமும் வளங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் தொடர்ச்சியாக செயல்படுவோம் என பிரித்தானிய தமிழர் பேரவை உறுதியளிக்கின்றது.
மேலும் பிரித்தானிய தமிழர் பேரவை, இலங்கை அரசு ஐ. நா சபையின் தீர்மானத்தின் பிரகாரமும் இலங்கை அரசினால் அளிக்கப்பட்ட வாக்குறுதியின் அடிப்படையிலும் தமிழர் பிரதேசத்திலிருந்து இராணுவத்தை வெளியேற்ற உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழர் நிலங்களை மீள ஒப்படைப்பதற்கு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் பிரித்தானிய அரசாங்கத்திடம் கோரிக்கையினை முன்வைத்துள்ளது.
பிரித்தானிய தமிழர் பேரவையினரால் மேற்கொள்ளப்படும் இவ்வாறான தொடர்ச்சியான செயற்ப்பாடுகளுக்கு பக்கபலமாக தாயகத்திலும் புலபெயர் தேசத்திலும் இருக்கும் எம் மக்களுக்கு நன்றி தெரிவிப்பதுடன் தொடர்ச்சியான ஆதரவினையும் பிரித்தானிய தமிழர் பேரவை வேண்டி நிற்கின்றது.