வற்றாத நீர் வளம் கொண்ட நிலாவரை கேணியின் சிறப்பும் அதன் வரலாறும்

வற்றாத நீர் ஊற்றைக் கொண்ட நிலாவரை கேணியானது யாழ்மாவட்டத்தின் வலி-கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்டு; யாழ் நகருக்கு வடதிசையில் அச்சுவேலி நோக்கிச் செல்லும் இராசவீதி, புத்தூர் சுன்னாகம் நெடுஞ்சாலை சந்திப்பிற்கு அருகாமையில் அமைந்துள்ளது. இவ் அமைவிடம் யாழ் நகரில் இருந்து சுமார் 16 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது.


நிலாவரை என அழைக்கப்படும் இவ் சிறப்பு மிக்க நீர்நிலை, அச்செழு, கலைமதி, சிறுப்பிட்டி கிராமங்களுக்கு நடுவிடத்தில் அமைந்திருப்பதோடு புத்தூர் கமநல சேவை நிலையம், சுதேச வைத்திய திணைக்களத்தின் மூலிகைத் தோட்டம், கமநல சேவை திணைக்களத்தின் உரக்களஞ்சியம், வாதாரவத்தை குடிநீர் விநியோகத் திட்டத்திற்கான நீரை வழங்கும் தேசிய வடிகாலமைப்பு குடி நீர் விநியோக அதிகார சபையின் ஆழ் துளைக்கிணறு, நிலாவரை இராணுவ முகாம் என்பவற்றின் நீர் தேவைகளை பூர்த்தி செய்கின்றது. இங்கு பாதுகாப்பு தரப்பினரால் நிர்மாணிக்கப்பட்ட அறு கோண கூரை அமைப்புக் கொண்ட முருகன் கோயில் படையினரின் தேனீர்சாலையுடன் கூடிய விற்பனை நிலையம் மற்றும் சில குடும்பங்களின் வாழ்விடங்களான இல்லங்களையும் கொண்டது.
அமைதியான சூழல், மருது, வேம்பு, வாகை மரங்கள் ஓங்கி வளர்ந்து நிழல் பரப்பும் ரம்மியமான சோலை, கால் பதித்தால் நிறமூட்டும் செம்மண், மண் வளர்த்தை எடுத்துக் காட்டும் பயிர்ச்செய்கைச் சுற்றாடல், பருகும் போது மீண்டும் பருகத்தூண்டும் நீர் வளம், வந்தாரை வரவேற்கும் வீதியோர வர்த்தக நிலையங்கள், வற்றாத நீர் நிலையான ஆழ் கிணறு, அத்தனையும் உற்று நோக்கிய வண்ணம் கோயில் கொண்டிருக்கும் நவசைலேஸ்வரர் ஆலயம், அத்துடன் யுத்த வடுக்களை தாங்கி நிற்கும் கட்டிட இடிபாடுகளுடன் கூடிய சுற்றாடல் கொண்டதுதான் நிலாவரை.
அண்மைக்காலம் வரை மிக அமைதியாகவும் ஆள் அரவமற்ற பிரதேசமாகவும் காணப்பட்டது. உள்ளூர் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஒரு சில வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்கும் வழிப்போக்கர்கள் மற்றும் விவசாயிகள் இளைப்பாறிச் செல்லும் இடமாகவும் விளங்கியது. ஏ9 பாதை திறக்கப்பட்டு இயல்பு நிலை ஏற்பட்டதை அடுத்து வெளிமாவட்டங்களில் இருந்து யாழ் குடா நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் தரிசனத்துக்கு தப்பிவிடாமல் உற்று நோக்கப்படும் மிக முக்கியமான சுற்றுலா மையம். நளாந்தம் வெளிமாவட்ட சுற்றுலாப்பயணிகளின் வாகனங்கள் பல ஒரே நேரத்தில் தரித்து நிற்பதையும் பல நூற்றுக் கணக்கான பயணிகள் ஆறுதலாக அமர்ந்திருந்து உண்டு மகிழ்ந்து வருவது கண்கொள்ளாக் காட்சியாகும்.
தென்னிலங்கையிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் கண்ணில் படாமல் நிலாவரை தப்புவது இல்லை. அது மட்டுமல்ல நிலாவரைச் சூழலை தமது கமராக்கள் வீடியோ பதிவுகளுக்கு உள்ளாக்காமல் விடுவதும் இல்லை. சுற்றுலாப் பயணிகளை வரவேற்பதற்கும் யாழ் மாவட்டத்துக்குச் சிறப்பாக உரிய பனம் பண்டங்களையும், பனையோலை கைப்பணிப் பொருட்களையும், யாழ்ப்பாணத்து சின்ன வெங்காயத்தையும், மாம்பழத்தையும் விற்பதற்கு நடைபாதை விற்பனை நிலையங்கள் மணிப்பிரவான நடையில் சிங்களத்ததையும் தமிழையும் கலந்து பேசும் நடைபாதை வியாபாரமும் பார்ப்போரை கவர்ந்திழுக்காமல் இல்லை.
அது மட்டுமல்ல தென்னிலங்கை கைப்பணிப்பொருள் கித்துள் பனங்கட்டி, பல்வேறு வகையான வளையல்கள் மற்றும் உணவு நிலையங்களும் வகை வகையாக வந்தோரை வரவேற்றவண்ணம் உள்ளன. மேலும் விசாலமான சிற்றுண்டிச் சாலைகளும் தமிழ், சிங்கள சிறப்புச் சிற்றுண்டிகளும் சைவ உணவு அசைவ உணவு வகைகள் உள்ளடக்கியதாக உள்ளன.
நிலாவரைக்கும் நவசைலேஸ்வரத்துக்கும் பூர்வீகமான புராண இதிகாச கதைத் தொடர்புகளும் கர்ண பரம்பரைக் கதைத் தொடர்புகளும் பல உண்டு. அந்த வகையில் இராம பிரான் தமிழ் வேந்தன் இராவணணை சங்காரம் செய்து விட்டு வடநாடு திரும்பும் போது ஸ்தாபித்த தலம் தான் நவசைலேஸ்வரம் என்றும் அவரது அம்பினால் தோண்டப்பட்டது தான் நிலாலவரை வற்றாத நீர் நிலை என்றும் கூறப்படுவது உண்டு.
நிலாவரை வற்றா நீர் நிலை மற்றும் நவசைலேஸ்வரம் தொடர்பாக இராமயணத்துடன் தொடர்புபடுத்தியும் கர்ணபரம்பரையாகவும் பல்வேறு கதைகள் சம்பவங்கள் கூறப்பட்ட போதிலும் நிலாவரை வற்றாநீர் நிலைக்கு புவியியல் ரீதியிலான விஞ்ஞான விளக்கமும் நவசைலேஸ்வரத்துக்கு பூர்வீக வரலாற்றோடும் சிவன் வழிபாட்டோடும் தொடர்பான வரலாறும் உண்டு. இது உண்மைதான் என்பது சில சான்றுகள் மூலம் உறுதி செய்யப்படுகின்றது.
நல்லூர் இராசதானிக் கால ஆலயங்கள் பற்றிக் கூறும் போது தக்ஷிணகைலாய புராணத்தின் நவசைப்படலத்தில் புத்தூரில் இருந்த சிவன் கோயில் பற்றியும் அதன் கேணி பற்றியும் நந்தவனம் பற்றியும் கூறப்படுவதோடு குறித்த ஆலயத்தை வழிபட்ட அடியார்கள் பெற்ற நன்மைகள் பேறுகள் பற்றியும் கூறப்பட்டுள்ளன. இதில் குறிப்பிடப்படும் சிவன் கோயில் நவசைலேஸ்வரம் சிவன் கோயில் தான் என்று ஒரு சாரார் கூறும் அதே வேளையில் சிலர் இதில் கூறப்படும் சிவன் கோயில் புத்தூர் சிவன் கோயில் எனக் கூறுவதும் உண்டு.

நவசைலேஸ்வரம் புராதனமானதும் தல மகிமை கொண்டதும் பூர்வீகமானதும் என்பதில் மாறுபட்ட கருத்துக்கு இடமில்லை. இந்த ஆலயம் ஈழத்தில் சிறப்பு பொருந்திய ஆறு ஈஸ்வரங்களில் ஒன்று. 
அதன் பூர்வீகம் போர்த்துக்கீசர் காலத்தில் இடித்து அழிக்கப்பட்டது. ஆலயத்தின் பூர்வீக விக்கிரகங்கள் முன்னோரால் அயலில் உள்ள கிணற்றில் இடப்பட்டு மறைக்கப்பட்டது. பிற்பட்ட காலத்தில் இறையருளால்
மீட்டெடுக்கப்பட்டு தற்போதைய ஆலயம் கட்டப்பட்டு அதில் பிரதிஷ்டை செய்யப்பட்டது எனக் கூறப்படுகின்றது.
போர்த்துக்கீசரால் முற்றாக இடித்து அழிக்கப்பட்ட பூர்வீக ஆலயத்தின் அடித்தளமும் சுற்றுப்பிரகாரமும் தற்போதைய ஆலயத்தக்கு அருகில் மண்ணுள் மறைபட்டுள்ளது. சில இடிபாடுகள் மண்ணுக்கு மேல் இப்பொழுதும் காணப்படுகின்றன எனக் கூறப்படுகின்றது.
நவசைலேஸ்வரத்தில் தற்போது காணப்படும் ஆலயம் 1948ஆம் ஆண்டு காலப்பகுதியில் எதிர்பாராத விதமாக மீட்டெடுக்கப்பட்டு கட்டப்பட்டது. ஆலயத்தின் முக்கிய விக்கிரகங்கள் மற்றும் மூல மூர்த்தியாகிய சிவலிங்கமும் ஆலயத்துக்கு அருகில் உள்ள கிணற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்டன.
தற்போதைய ஆலயத்தை நிர்மாணித்த பரம்பரைப் பூசகரான வேலுப்பிள்ளை சுப்பையாவும் அவரின் மனையாள் சிவக்கொழுந்தும் பூசை வழிபாடு செய்தனர் என்றும் வேலுப்பிள்ளை சுப்பையாவின் பேரனும் தற்போதைய ஆலய பரிபாலன சபையின் தலைவருமான வேலுப்பிள்ளை அருணாசலம் தெரிவிக்கின்றார். 
தற்பொழுது காணப்படும் ஆலயம் வெளிச் சுற்றுப்பிரகாரத்துடன் சிறிய ஆலயமாக அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் நித்தியபூஜைகள் வழிபாடுகளுக்கு புலம்பெயர்ந்த உறவுகள் நிதி உதவி வழங்கி வருகின்றனர். ஆலயத்தின் தற்போதைய தினசரி பூசையை அச்சேழுவைச் சேர்ந்த சிவஸ்ரீ விக்னேஸ்வரக் குருக்களும் அவர்களது குடும்பத்தினரும் மேற்கொண்டு வருகின்றனர்.
ஆலயத்தின் தீர்த்தமாக வற்றாநீர் ஊற்று காணப்படுகின்றது. ஆலயத்தின் முன்றலில் சில மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள வற்றா நீர் ஊற்றுக்கு இறங்குவதற்கு மேற்கு கிழக்காக பல படிகள் கட்டப்பட்டு தேவையின் நிமித்தம் படிக்கட்டுக்களை பயன்படுத்தி இறங்கி ஏறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
இந்த வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் 20 ற்கும் மேற்பட்ட படிக்கட்டுக்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. ஆலயமும் ஆலய வாசலில் அமைந்துள்ள வற்றா நீர் ஊற்றும் அத்தோடு இணைந்து நூற்றாண்டுக்கு மேற்பட்ட வளர்ச்சி கொண்ட மரங்கள் நிறைந்த சுற்றாடலும் ஆலயத்தின் சூழலை அழகூட்டுவனவாக இருப்பதோடு வெளிமாவட்டங்களில் இருந்து வரும் பல்லாயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் மையமாகவும் விளங்குகிறது.

வலி.கிழக்கில் புராதன வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் தனித்துவம் மிக்கதாகவும் அழகும் அமைதியும் நிறைந்த இடமாகவும் விளங்கும் நிலாவரை ஆழ் கிணறு தொடர்பாக புராண இதிகாசங்களில் இடம்பெறுவதாக கூறப்பட்ட போதிலும் அதனுடன் தொடர்பான சுலோகங்களோ பாடங்களோ இது வரை கண்டறியப்படவில்லை எனக் கூறப்படுகின்ற அதே வேளையில் வற்றாதநீர் நிலை அமைப்பதற்கு வரையறை செய்யப்பட்டு கூறப்படும் நியாயங்களும் வரைவிலக்கணமும் விஞ்ஞான ரீதியில் வேறுபட்டதாக அமைந்துள்ளன.