தொடர் இழப்புகள், வலிகள், ஏமாற்றங்களுக்கு பின்னரும் கூட, தமது உணர்வுகள் மீண்டும் சுயமாகவே சிறைச்சாலைகளுக்குள் சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்து வருவதாகவும், சிறுநீருடன் குருதியும் கலந்து வெளியேறிக்கொண்டிருக்கும் உயிருக்கு ஆபத்தான நிலைமையில் அவர்களின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகின்றமை தமது சப்த நாடிநாளங்களை ஒடுங்கச்செய்வதாகவும் தெரிவித்துள்ள வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவும், கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் வவுனியா சங்கத்தினரும்,
எமது உணர்வுகளான அவர்களில் யாராவது ஒருவரையேனும் இழக்க நேருமாயின், அது தமிழ் சமுகத்துக்கு பெருத்த அவமானமாகவும், தமிழ் சமுகத்தின் வாக்களிப்பில் நிகழ்ந்த மாபெரும் குறைபாடாகவும், தமிழ் அரசியல் தலைமைகளின் மற்றுமொரு நம்பிக்கைத்துரோகமாகவும், அமையும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தமிழ் மக்களின் உன்னத உணர்வான தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி 2016 மார்ச் 08 சர்வதேச பெண்கள் தினமாகிய நாளை, வவுனியா பொங்குதமிழ் நினைவுத்தூபி முற்றத்தில் காலை 8.00 மணியிலிருந்து மாலை 4.00 மணிவரை நடைபெறவுள்ள அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தில் அனைவரையும் உணர்வுபூர்வமாக கலந்துகொள்ளுமாறு அவர்கள் விடுத்துள்ள கூட்டு ஊடக அறிக்கையின் முழு விவரமும் இணைக்கப்பட்டுள்ளது.