ஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தி அவர்களின் நினைவுகளுடன் பேசுதல்!!!

இறுதிப்போரின் போது  செல்வீச்சு தாக்குதலில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தி அவர்களின் நினைவுகளுடன் பேசுதல் எனும் தொனிப்பொருளிலான ஒன்றுகூடலும் நினைவு கூறல் நிகழ்வும்  யாழ்.இந்து கல்லூரியில் நேற்று (13) மாலை மூன்று மணியளவில் சிறப்புற நடைபெற்றது

மூத்த படைப்பாளரும் எழு கலை இலக்கியப்பேரவையின் அமைப்பாளருமான இணுவையூர் சிதம்பரத்திருச்செந்திநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சத்தியமூர்த்தி அவர்களின் திருவுருவப்படுத்துக்கு அவர்களுடைய அம்மம்மா வெற்றிவேல் தங்கரத்தினம் அவர்கள் மாலை அணிவித்து சுடரேற்றி நிகழ்வினைத் தொடங்கிவைத்தார்.

அகவணக்கத்துடன் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் தொடக்க உரையினை எழு கலை இலக்கியப் பேரவையின் செயலாளர் மயூரரூபன் ஆற்றினார். அவர் தனது உரையில் சத்தியமூர்த்தியின் இலக்கிய மற்றும் ஊடக வருகை தொடர்பிலும் நிகழ்வு தொடர்பிலுமான அறிமுகத்தினை வெளிப்படுத்தி உரையாற்றினார்.

நிகழ்வின் தலைவர் உரையாற்றும்போது, சத்தியமூர்த்தி அவர்களின் பிரவேசம் தொடக்கம் இறுதியில் அவர் பிரிந்த காலம்வரையிலான 19ஆண்டுகள் இலக்கிய, மற்றும் ஊடகத் துறைகளின் செயற்பாடுகள் மற்றும் ஆளுமை தொடர்பில் உரையாற்றினார். நிகழ்வின் நினைவுரையாற்ற வந்திருந்த வலம்புரி பத்திரிகையின் ஆசிரியர் விஜயசுந்தரம், சிறுவயது முதல் யாழ்ப்பாணம் இடப்பெயர்வு வரையிலான சத்தியமூர்த்தியின் செயற்பாடுகள் தொடர்பில் உரையாற்றினார்.

நினைவுரையாற்றிய யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி, இறுதிப்போரின் போது வன்னி சந்தித்த நெருக்கடிகள் அவலங்கள் தொடர்பிலும் ஊடகங்கள் தொடர்பிலும் உரையாற்றியதுடன் ஊடகவியலாளர் சத்தியமூர்த்தியின் ஊடகச்செயற்பாடு தொடர்பிலும் உரையாற்றினார்.

அனுபவ உரைகள் வரிசையில், கவிஞர் வேலணையூர் சுரேஸ், ஊடகவியலாளர் இளங்கீரன் எழு கலை இலக்கியப் பேரவையின் தலைவர் கை.சரவணன், ஆகியோர் உரையாற்றியிருந்தனர். மூத்த படைப்பாளர்கள், படைப்பாளர்கள், ஊடகவியலாளர்கள், இலக்கியவாதிகள் மற்றும் ஆர்வலர்கள் என நூற்றுக்கணக்கானோர் இந் நிகழ்வில் பங்குகொண்டிருந்தனர்.




நாட்டுப் பற்றாளர் சத்தியமூர்த்தி அவர்களின் இறுதி குரல்.
நாட்டுப்பற்றாளர், ஊடகவியலாளர் பு. சத்தியமூர்த்தி நாளை நானாக இருப்பேன் என்று சொன்னவர் இன்று போய் விட்டார்அவரின் ஒரு உருக்கமான பதிவு.