டெங்கு ஒழிப்பு செயற்திட்டத்தில் படையினர் இணைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பொதுமக்கள் கேள்வி!

யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் வவுனியா உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ள டெங்கு ஒழிப்பு செயற்திட்டத்தில் சிறிலங்காவின் முப்படையினரும் இணைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


சிறிலங்கா அரசாங்கத்தால் கடந்த வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த மூன்று நாள் டெங்கு ஒழிப்பு செயற்திட்டத்தில் சிவில் அதிகாரிகளுடன் சிறிலங்காவின் முப்படையினரும் வீடுவீடாகச் சென்று டெங்கு நுளம்பு தொடர்பான சோதனைகளில் ஈடுபடுவது தொடர்பில் பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
                               
இந்த சோதனை நடவடிக்கைகளில் யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா படையினரும், மட்டக்களப்பில் விமானப்படையினரும், புத்தளத்தில் கடற்படையினரும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு வீடு வீடாகச் சென்று சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் குழுக்களில் சிறிலங்கா படைத்தரப்பின் புலனாய்வுப் பிரிவினரே செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் டெங்கு நுளம்பு தொடர்பான சோதனை எனும் பெயரில் செல்லும் இவர்கள் ஒவ்வொரு வீடுகளிலும் இருக்கின்ற குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பிலான விபரங்களை திரட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடக்கில் சிவில் நிர்வாகப் பணிகளில் இருந்து சிறிலங்கா படையினர் முற்றாக விலக்கப்பட வேண்டும் என்று சர்வதேச சமூகத்தினால் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், சிறிலங்கா அரசாங்கத்தால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறித்து பொது மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
 பொங்குதமிழ்