"மகள் எட்டடி பாய்ந்தால் தாய் பதினாறு அடி.. மினசோட்டா தமிழ்ச்சங்கத்தில் திருக்குறள் சாதனை!"
மினியாபோலிஸ் (யு.எஸ்): மினசோட்டா தமிழ்ச்சங்கம் சார்பில் நடைபெற்ற திருக்குறள் சிறப்பு நிகழ்ச்சியில் பிரசன்னா சச்சிதானந்தன் 1330 திருக்குறள்களை பொருளுடன் கூறி அசத்தினார்.
முன்னதாக அவருடைய மகள் 8 வயது அத்விகா 1330 குறள்களையும் சொல்லி சாதனை படைத்திருந்தார். தற்போது 3 மணி 52 நிமிடங்களில் அனைத்து குறள்களையும் பொருளுடன் கூறி அமெரிக்காவில் புதிய சாதனை படைத்துள்ளார்.
ஜனவரி 24ம் தேதி மினடோங்கா ரிஜ்டேல் நூலக வளாகத்தில் பகல் 12:05 க்கு ஆரம்பித்த பிரசன்னா, பொருளுடன் 1000 குறள்களை சொல்லி முடித்த போது மூன்று மணி நேரம் ஆகியிருந்தது. மாலை 3.57 மணிக்குள் அனைத்து குறள்களையும் சொல்லி முடித்து விட்டார்.
நூலக வளாகம் 5 மணிக்கு மூடப்பட்டுவிடும் என்பதால், எந்த இடைவெளியும் இல்லாமல் சீக்கிரம் முடித்து விட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே தனக்கு இருந்ததாக தெரிவித்தார். நான்கு பேர் சுழற்சி முறையில் நடுவர்களாக பணியாற்றினர்.
மகளுக்கு திருக்குறள் சொல்லிக்கொடுக்கும் போதே அனைத்து குறள்களையும் படித்து விட்ட பிரசன்னா, இந்த நிகழ்ச்சியில் விரைவாக சொல்வதற்கு, மூன்று வார காலம் பயிற்சி எடுத்துக் கொண்டாராம்.
திருக்குறள் மற்றும் தமிழ் இலக்கியங்களை குழந்தைகள் புரிந்து, அதைப் பின்பற்றும் வகையில் கதைகளுடன் சேர்த்து சொல்ல விரும்புகிறார். மேலும், அனைத்து குறள்களையும் அவரால் இப்போது கதைகள் மூலம் விளக்க முடியும் என்கிறார்.
அமெரிக்காவின் தெற்கே, டல்லாஸ் நகரில் ஏற்கனவே கீதா அருணாச்சலம் மற்றும் சித்ரா மகேஷ் ஆகிய இருவர் 1330 குறள்கள் கூறி சாதனை படைத்து இருக்கும் நிலையில், வடக்கு பகுதியான மினியாபோலிஸ் நகரில் பிரச்சன்னா சச்சிதானந்தன் சாதனை புதிய மைல் கல்லாக விளங்குகிறது.
மேற்கே கலிபோர்னியாவில் அடுத்த மாதம் நடக்கவிருக்கும் போட்டியிலும் இந்த சாதனைகள் தொடர்ந்தால் ஆச்சரியமில்லை.
தாய்த் தமிழகத்தில் திருக்குறளுக்கான முக்கியத்துவம் எப்படி இருந்தாலும், புலம் பெயர்ந்த பகுதிகளில் அளப்பரிய மரியாதையுடனும் பெருமையுடனும் தமிழர்கள் திருக்குறளைக் கொண்டாடுவது தொடர்கிறது!
நன்றி
Posted by: Shankar
(ஒன்இந்தியாதமிழ்)