நவாலித் தாக்குதல் தவறு:அரசே அதற்குப் பொறுப்பேற்க வேண்டும்:
போர்க்குற்றங்களுக்காக இராணுவத்தை
தண்டிக்க வேண்டும் என்று தமிழ் மக்களாகிய நீங்கள் கேட்கும்போது பிரபாகரனின்
படையினர் ஏன் தண்டிக்கப்படகூடாது? சந்திரிக்கா:
1995ஆம் ஆண்டில் 150க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்ட்ட நவாலித் தேவாலயம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் ஒரு தவறான சம்பவம் என்று தெரிவித்துள்ள இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா அதற்கு அரசே முழுப் பொறுப்பும் ஏற்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த செய்தியை அறிந்தபோது விமானப்படையையும் இராணுவத்தையும் நோக்கி தான் உரத்துக் கத்தியதாகவும் தான் அதிர்ச்சியடைந்து குமுறியதாகவும் முன்னாள் ஜனாதிபதி கூறுகிறார். யாழ் பிராந்திய நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளின் சிறிய முகாம் என்று நினைத்தே இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியிருந்ததாகவும் அதற்கு இராணுவமும் அரசும் முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ள அவர் அவ்வாறு பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அரசே அதற்குப் பொறுப்பு என்றும் தெரிவித்தார்.
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் கருத்துத் தெரிவித்த சந்திரிக்கா பிரபாகரனின் படையினரும் தண்டிக்கப்படவேண்டும் என்று கூறினார். போர்க்குற்றங்களுக்காக இராணுவத்தை தண்டிக்க வேண்டும் என்று தமிழ் மக்களாகிய நீங்கள் கேட்கும்போது பிரபாகரனின் படையினர் ஏன் தண்டிக்கப்படகூடாது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் நிருபிக்கப்பட்ட குற்றவாளிகளே அரசியல் கைதிகளாக உள்ளனர் என்றும் சந்திரிக்கா கூறுகிறார். வழக்குகள் இல்லாமல் இருப்பவர்களை விடுவிக்கமுடியும் என்றும் பலருக்கு எதிராக சாட்சியங்கள் உள்ளன என்றும் குறிப்பிட்டார்.