சம்பந்தரின் பார்வையில் செல்வாவும் கடும் போக்காளரா?

வடமாகாண முதலமைச்சரின் செயற்பாடுகளை மிகவும் கவனமாக அவதானித்து வருவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் நியமிக்கப்பட்டு தமிழரசுக்கட்சி வேட்பாளராக போட்டியிட்டு மக்களால் தெரிவுசெய்யப்பட்ட விக்னேஸ்வரன் கட்சியின் கொள்கைகளிற்கு கட்டுப்பட வேண்டியவர் என்றும் கடுமையான இறுக்கமான நிலைப்பாடுகள் உதவப்போதில்லை, கடுமையான நிலைப்பாடுகளை முன்னெடுப்பதன் மூலம் நாட்டிற்குக் கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பத்தினை பாழடிப்பது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் கொள்கைகளுடன் தன்னை இணைத்து வருவதாகவும் திரு. சம்பந்தன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் களமிறங்கி தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் வெற்றியீட்டிய முதல்வர் விக்னேஸ்வரனை கடுமையான பிடிவாதமான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றார் என்று குற்றம் சுமத்தும் திரு.சம்பந்தன் அவர்களே, நீங்கள் பொதுக்கூட்டங்களில் பேசிய விடயங்களை சற்றே உங்களுக்கு நினைவூட்ட விரும்புகின்றோம்.

தேர்தல் காலங்களில் நீங்கள் ஏறிய மேடைகளில் எல்லாம் நாங்கள் கௌரவமாக வாழவேண்டும். நாங்கள் எங்களுக்கு உரித்துடையவற்றையே கேட்கிறோம். பிரிக்கப்படாத இலங்கையில் வடக்கு-கிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வையே நாம் கேட்கின்றோம். அது எமது உரிமை அதனை யாரும் தட்டிப்பறிக்க முடியாது என்று நீட்டி முழங்கினீர்களே. இப்பொழுது அவைகள் உங்கள் கண்ணோட்டத்தில் கடும்போக்கா? நீங்கள் மிதவாதமாகப் பேசிய அதே கருத்துக்கள் எப்பொழுது கடும்போக்காக மாறின?

தந்தை செல்வாவால் நிறைவேற்றப்பட்ட வட்டுக்கோட்டை தீர்மானம் கடும்போக்கா? தந்தை செல்வாவும் நீங்களும் சொன்னவற்றைவிடவா விக்னேஸ்வரன் அதிகமாகச் சொல்லிவிட்டார்? 

எமது பிரச்சினை தீரும்வரை நாங்கள் அரசாங்கத்திடம் இருந்து எதுவித அர்ப்பத்தனமான சலுகைகளையும் பெற்றுக்கொள்ள மாட்டோம் என்று கூறினீர்களே இப்பொழுது மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைமை பதவிகளை ஏற்றுக்கொண்டது ஏன்?

பாராளுமன்றத் தேர்தலுக்கான விஞ்ஞாபனத்தில் சர்வதேச விசாரணை வேண்டும் என்று தெரிவித்திருந்தீர்கள். அதனை வலியுறுத்தியே வடமாகாணசபையும் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. இதில் எது கடும்போக்கு என்று விளக்குவீர்களா?

பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் வடக்கு-கிழக்கில் நடைபெற்றது இனப்படுகொலை என்று பேசினீர்கள். இதனையே வடக்கு மாகாணசபையிலும் ஏகமனதாக தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. இதில் முதல்வர் எந்தக் கட்சியின் கொள்கையை மீறியுள்ளார்?

தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டவர்கள் அனைவரும் தமிழரசுக்கட்சியினர் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? அப்படியானால் அங்கத்துவக் கட்சிகள் தமது தனித்துவத்தைப் பேணவேண்டிய தேவை இருக்கிறது என்று ஏன் சொன்னீர்கள்?

கூட்டமைப்பை ஒரு குடை அமைப்பாக, சட்டவலுவுள்ள அரசியல் கட்சியாகத் திகழ்வதற்கு அதனைப் பதிவு செய்ய வேண்டும் வேண்டுகோள் விடுத்த அங்கத்துவக் கட்சிகளிடம் தனித்தன்மையைப் பேணவேண்டும் என்று தெரிவிக்கும் நீங்கள் அனைத்து அங்கத்துவக் கட்சிகளின் விருப்புடன் கூட்டமைப்பின் வேட்பாளராகக் களமிறங்கிய முதலமைச்சரை மட்டும் தமிழரசுக் கட்சியின் கொள்கைகளை மதிக்கக் கடமைப்பட்டவர் என்று கூறக் காரணம் என்ன?

வடமாகாணசபை பதவி ஏற்றுக்கொண்டநாள்முதல் முதல்வர் தனது கடமைகளைச் செய்வதில் தடைகள் இருப்பதாகத் தெரிவித்திருந்தார். மாகாண சபைக்கு உரிய அதிகாரங்களைச் செயற்படுத்துவதில்கூட சிக்கல் இருக்கிறது என்று சுட்டிக்காட்டியிருந்தார். அதனைக் களைவதற்கு நீங்கள் எடுத்த முயற்சிகள் எவை? கட்சியின் தலைவராக நீங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளை வெளியில் சொல்வீர்களா? தற்போதைய நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற ஆட்சியிலாவது அதற்கான நடவடிக்கைகளை எடுத்தீர்களா?

பிரதமருடன் இணைந்து உங்களது அடிமைகளை உசுப்பேற்றி நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவந்து மாகாணசபையைக் கலைக்க முயற்சிப்பது ஏன்? முதல்வர் தமிழரசுக் கட்சியை வளர்ப்பதற்கு உதவவில்லை என்பதால்தானே?
உங்களது சர்வாதிகாரத்தை ஏற்காத தமிழ்த் தலைவர்கள் அனைவரையும் சகல தரப்பினரிடமும் கடும்போக்காளர்கள் என்று காட்டிக்கொடுக்கும் முயற்சியில் ஈடுபடும் தாங்கள் எந்த இனத்தின் விடுதலைக்காக உழைக்க வந்தீர்கள்?

இவ்வளவு குறைகளை உங்களது பக்கம் வைத்துக்கொண்டு விரலை அவரைநோக்கி நீட்டுவது ஏன்? மாகாணசபையின் செயற்பாடுகள் தொடர்பாக கண்காணித்து விவாதிப்பதற்காகவும் சபை திறம்பட செயற்படுவதற்காகவும் அதன் குறைகளை பாராளுமன்றத்தில் தெரிவிப்பதற்காகவும் பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாணசபை உறுப்பினர்களும் மாதம் ஒருமுறையாவது சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டதே அதனை ஏற்று நீங்கள் எத்தனை கூட்டம் நடத்தினீர்கள்? எவ்வளவு பிரச்சினைகளைத் தீர்த்தீர்கள்?

தமிழரசுக் கட்சிதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று வரையறைப்படுத்த முயலும் நீங்கள் நெருக்கடியான சந்தர்ப்பங்களில் கூட்டமைப்பு என்றும் ஏனைய நேரங்களில் கட்சி என்றும் கூறுகிறீர்களே அப்படியாயின் நீங்கள் எந்தக்கட்சியைச் சொல்கிறீர்கள்? கூட்டமைப்பு என்பது கட்சியா அல்லது உங்களது தமிழரசுக் கட்சிதான் கட்சியா? மக்கள் உங்களைக் கூட்டமைப்பின் தலைவராகவே பார்க்கின்றனர். நீங்கள் தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்தபோதும் கூட்டமைப்பின் தலைவராக இருந்தீர்கள். இப்பொழுது கூட்டமைப்பின் தலைவராக மட்டுமே இருக்கிறீரகள். அப்படியானால் நீங்கள் உச்சரிக்கும் கட்சி என்பது எது?

வடக்கிற்கு தெற்கிலிருந்து ஒரு நீதியரசை அரசியலுக்கு அறிமுகம் செய்த நீங்கள் உங்களது கிழக்கு மாகாணத்தில் உங்களுக்கு அடுத்த இடத்தில் யாரை உருவாக்கியிருக்கிறீர்கள்?

இறுதியாக, இந்த நாட்டை ஆட்சி செய்த அத்தனை தலைவர்களும் சிங்கள பௌத்த பேரினவாதப் பிடியிலிருந்து விடுபட முடியாமல் இருப்பதனால்தான் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்ந்திருக்கின்றது. அவர்களுக்கும் உங்களுக்கும் உள்ள ஒற்றுமை என்னவென்றால் உங்களுடைய கட்சி அரசியலிலிருந்து (தமிழரசுக் கட்சி) என்றைக்கு விடுபடுகிறீர்களோ அன்றுதான் தமிழ் மக்களுக்கு உண்மையான விமோசனம் கிடைக்கும். எல்லோரையும் அரவணைத்துச் செல்வாவை உதாரணமாகக் காட்டும் உங்களால் அதனைச் செய்யமுடியாதுள்ளது. இதனை நீங்கள் கடைசிவரை செய்யப்போவதில்லை. 

ஆகவே, தமிழ் மக்களுக்கு ஒரு மாற்றுத்தலைமை வேண்டும். அந்தத் தலைமை கட்சிவெறியுடைய உங்களைப்போலல்லாமல் கொள்கை இலட்சியங்களுடன் அனைவரையும் இணைத்துக்கொண்டு இறுதிவரை பயணிக்கும் கூட்டுத்தலைமையாக இருக்கும்.

ஜனநாயகக் காற்றைச் சுவாசிக்க விரும்பும் பொதுமக்களே! புத்திஜீவிகளே! ஊடகத்துறை அன்பர்களே! துறைசார் வல்லுநர்களே! மனித உரிமைச் செயற்பாட்டாளர்களே! எமக்கான விடுதலை என்பது அனைத்துவிதமான அடக்குமுறைகளிலிருந்தும்தான் என்பதை ஏற்றுக்கொண்டுள்ள நீங்கள் திரு.சம்பந்தனின் சர்வாதிகாரத்திற்கு எதிராகவும் குரல்கொடுக்க முன்வரவேண்டும். அது ஒன்றுதான் எமது இனம் துணிவுடன் தலைநிமிர்ந்து நடப்பதற்கு வழிவகுக்கும்.

சம்பந்தர் குறிப்பிடுவதைப்போல் முதல்வர் விக்னேஸ்வரன் கடும்போக்காளர் அல்ல என்பதை நிரூபிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை.

-ஆரியம்-