தமிழ் நாட்டிலிருந்து... அகச்சிவப்பு தமிழ்!!!

வை.கோ பா.ஜ.க-வுடன் கூட்டணி வைப்பது சரியா? – ஓர் அலசல்!


பாரதிய ஜனதாவுடனான தலைவர் வை.கோ அவர்களின் கூட்டணியையும், தமிழருவி மணியன் முதலான தமிழர் தலைவர்களின் இன்றைய பா.ஜ.க ஆதரவு நிலைப்பாட்டையும் விமரிசிக்கும் அனைவரிடமும் நான் கேட்க விரும்பும் ஒரே கேள்வி இதுதான். 

இதை விட்டால் வேறென்ன வழி இருக்கிறது? 

'எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி' என்பதுதான் இன்றும் நாம் ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையாக இருக்கிறது எனும்பொழுது, கூட்டணி மட்டும் புத்தர்களுடனும் காந்திகளுடனும் வைத்துக்கொள்ள வேண்டும் என நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்?

ஆம், பா.ஜ.க-தான் சிறந்த தேர்வு எனச் சொல்லவில்லை. மற்றவையெல்லாம் அதைவிட ஆபத்தானவை என்பதுதான் விதயமே!

ஒரு புறம், முள்ளிவாய்க்கால் பேரழிவை நிகழ்த்திய காங்கிரசு; மறு புறம், முள்ளிவாய்க்கால் முற்றம் இடித்த ஜெயலலிதா; இன்னொரு புறம், இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறதா இல்லையா என்பது கூடத் தெரியாத இரசியா தனி ஈழத்தை எதிர்க்கிறது என்பதற்காகத் தாங்களும் தனி ஈழத்தை எதிர்க்கும் அறிவுக் கொழுந்துகளான பொதுவுடைமைத் தோழர்கள். பா.ஜ.க-வுக்குப் பதிலாக இவர்களில் யாரைத் தேர்ந்தெடுக்கச் சொல்கிறீர்கள் நண்பர்களே?

பார்க்கப் போனால், இந்த நான்கு தரப்பினரில் பா.ஜ.க ஒரு வகையில் மேலெனவே சொல்லலாம். காரணம், மற்ற மூன்று தரப்பினருக்கும் இருப்பது போலத் தமிழர்களுக்கோ தமிழீழத்துக்கோ எதிரான தனிப்பட்ட விரோதம் எதுவும் பா.ஜ.க-வுக்கு இல்லை.

காங்கிரசின் தமிழ்ப் பகை நமக்குச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கடைசி நேரத்தில், தமிழர்களைக் காப்பாற்ற அமெரிக்கா களமிறங்க இருந்த தறுவாயில், "இஃது என் தனிப்பட்ட விவகாரம். யாரும் தலையிடக்கூடாது!" என்று சோனியா சொல்லித் தடுத்து நிறுத்தியதை நாம் என்றைக்கும் மறந்துவிட முடியாது!

போராட்டத்துக்குப் பெயர் 'போன' பொதுவுடைமைத் தோழர்களின் தமிழீழம் குறித்த நிலைப்பாட்டையும் மேலேயே பார்த்தோம். அது மட்டுமின்றி, மூன்றாவது அணி என்பது எப்பொழுதும் தோல்வி மகுடத்தைத்தான் அணியும் என்பதுதான் வரலாறு. இன்று, இந்தியாவிலேயே மிகச் சிறந்த முதல்வர், மேலாண் மேதை (Management Genius) என எப்படியெல்லாம் மோடியைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகிறார்களோ, அதே போல் இதற்கு முன்பு ஊடகங்களாலும், சமூக - அரசியல் பார்வையாளர்களாலும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடப்பட்டவர் சந்திரபாபு நாயுடு. ஆனால், இந்தியா முழுக்க நற்பெயர் வாங்கியிருந்த அவரையும், போதாதற்கு மேற்கொண்டு ஜெயலலிதா, லாலு பிரசாத் எனப் பல மாநில அரசியல் பெருந்தலைகளையும் இணைத்து அமைக்கப்பட்ட மூன்றாவது அணி, அன்றைய நாடாளுமன்றத் தேர்தலில் அப்பளமாய் நொறுங்கியது. இவையெல்லாம் நாம் மறக்கக்கூடாதவை!

அடுத்தவர் ஜெயலலிதா. அவரை நம்ப முடியுமா? படாத பாடெல்லாம் பட்டு, தமிழ்நாடு முழுக்கச் சுற்றியலைந்து, காலங் காலமாகத் தமிழினப் பகையாளியாகக் கருதப்பட்ட தனக்குத்தமிழினத் துரோகிக்கு எதிரான வாக்குகள் அனைத்தையும் மொத்தமாக மடைமாற்றி விட்ட வை.கோ அவர்களைக் கறிவேப்பிலை போல் தூக்கி எறிந்த ஜெயலலிதா, நாளை பிரதமராக்கி விட்டால் மட்டும் வை.கோ சொல்வதைக் கேட்டுத் தமிழீழத்தைத் தங்கத் தட்டில் வைத்துத் தந்துவிடுவாரா? முதலமைச்சராக இருக்கும்பொழுதே தமிழர்களை மதிக்காதவர், பிரதமராகிவிட்டால் நம்மை மதிப்பாரா? தமிழர்கள் அனைவரும் மொத்தமாக வாக்களித்தால் மட்டுமே பிரதமர் பதவியை நினைத்தாவது பார்க்க முடியும் எனும் நிலைமையில் இருக்கும்பொழுதே, அதுவும் நாடாளுமன்றத் தேர்தல் நெருக்கத்திலேயே முள்ளிவாய்க்கால் முற்றத்தின் மீது கை வைக்கிறாரே, இவரா நாளை பிரதமரானால் தமிழர் தரப்பில் நிற்பார்? சிந்தித்துப் பாருங்கள் தோழர்களே!

பா.ஜ.க-வினர் மட்டும், ஆட்சி அமைத்த அடுத்த நிமிடம் தமிழீழத்தை நமக்குப் பெற்றுத் தந்துவிட்டுத்தான் ராமர் கோயிலுக்கே போவார்கள் எனச் சொல்லவில்லை. ஆனால், மற்ற மூவரைப் போல் தமிழர்களுக்கோ, தமிழீழத்துக்கோ எதிரான தனிப்பட்ட பகை எதுவும் அவர்களுக்கு இல்லை எனும் நிலையில் அவர்களை விட்டால் நமக்கு வேறு தேர்வு இல்லை இங்கே என்பதைத்தான் புரிந்துகொள்ள வேண்டுகிறேன்!

மேலும், அடுத்து பா.ஜ.க ஆட்சியமைக்கப் போகிறதோ இல்லையோ, ஆனால், அப்படி ஓர் எண்ணம் இப்பொழுது நாடெங்குமுள்ள மக்களிடையில் விதைக்கப்பட்டுவிட்டது. "இந்த ஐந்து மாநிலச் சட்டமன்றத் தேர்தல்கள்தாம் அடுத்த நாடாளுமன்றத்தை முடிவு செய்யப் போகின்றன" என்று கட்சிகளும் ஊடகங்களும் சொல்லிச் சொல்லியே மக்கள் உள்ளத்தில் அந்தக் கருத்தை ஆழப் பதித்து விட்டன. கண்டிப்பாக, இது நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்காமல் இருக்காது. நம் மக்களிடையே ஒரு (!) கெட்ட பழக்கம். தகுதியானவருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை விட வெல்பவருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதுதான் அது. தான் வாக்களிக்கும் கட்சி வெற்றி பெறாவிட்டால், தன் வாக்கு வீணாகிவிட்டதாகவும், அது தனக்கு இழுக்கு எனவும் நினைப்பவர்கள் நம் மக்கள். எனவே, 'அடுத்தது பா.ஜ.க-தான்' என்கிற தோற்றத்தை இந்த ஐந்து மாநிலத் தேர்தல்கள் ஏற்படுத்தி வைத்திருப்பதால், பெருவாரியான மக்கள் அந்தக் கட்சிக்குத்தான் வாக்குகளை வாரி வழங்குவார்கள் வரும் நாடாளுமன்றத் தேர்தலில். ஆக, ஏதோ ஒரு வகையில் அடுத்தது பா.ஜ.க-தான் என்று ஓரளவு உறுதியாகிவிட்ட நிலையில், அவர்களுடன் நாம் கூட்டணி வைத்தாக வேண்டிய நிலைமையில் இருக்கிறோம். காரணம், நடுவண் அமைச்சரவையில் தமிழுணர்வுள்ள கட்சிகள் இல்லாததும், ஏற்கெனவே அதில் பங்கு வகிக்கும் கட்சிகள் தமிழுணர்வுள்ள கட்சிகளாக இல்லாததும்தான் ஈழத் தமிழினப்படுகொலைக்கும் காரணம்; கடந்த நான்கரை ஆண்டுக்காலத் தமிழர் போராட்டம் எதற்குமே பதில் கிடைக்காததற்கும் காரணம். ஆகவே, இந்த முறையாவது, அடுத்து அமையும் நாடாளுமன்றம் தமிழர் சொல்வதைக் கேட்பதாக அமைய வேண்டியது கட்டாயம்.

அப்படி அமையாவிட்டால்... ம.தி.மு.க போன்ற உண்மையான தமிழர் கட்சி எதனோடும் கூட்டணி வைக்காமலே ஒருவேளை அடுத்து பா.ஜ.க ஆட்சியைப் பிடித்துவிட்டால்... அடுத்து நடக்கப்போவது ஒன்றே ஒன்றுதான். இந்தியாவின் அடுத்த ஆட்சியாளர்களையும் கைக்குள் போட்டுக்கொண்டு இலங்கை தன் தமிழர் அழிப்பைச் சாவகாசமாகத் தொடரும். இப்பொழுதே அதற்கான முன்னோட்டமாக, பா.ஜ.க தலைமைகளை நோக்கி இலங்கை தன் காய் நகர்த்தல்களைத் தொடங்கிவிட்டதாக முகநூலில் தகவல்கள் பரபரக்கின்றன! இதைத்தான் விரும்புகிறோமா நாம்?

சரி, வை.கோ, சீமான், பழ.நெடுமாறன் என உண்மைத் தமிழுணர்வுக் கட்சிகள் மட்டும் ஒருங்கிணைந்து தேர்தலைச் சந்திக்கலாமே என்றால், சந்திக்கலாம்; ஆனால், வெல்வோமா? அப்படி ஒரு சோதனை செய்து பார்க்கக்கூடிய நிலைமையிலா நாம் இப்பொழுது இருக்கிறோம்?

அங்கே இலங்கையில் நம் மக்கள் ஒவ்வொரு நிமிடமும் செத்துக் கொண்டிருக்கிறார்கள். நரக வேதனை பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய ஒரே நம்பிக்கையான நமது உடனடிக் கடமை, சிங்கள இராணுவக் கோரப் பிடியில் சிக்கியிருக்கும் அவர்களை விடுவித்தல், அவர்களுக்குப் பாதுகாப்பும், உயிர் வாழத் தேவையான அடிப்படை வசதிகளுடனுமான வாழ்க்கை ஒன்றை அமைத்துத் தருதல். இவற்றை எவ்வளவுக்கெவ்வளவு விரைவாகச் செய்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவுதான் நாம் அவர்களைக் காப்பாற்ற முடியும். தாமதிக்கும் ஒவ்வொரு நாளும் அங்கு நம் மக்கள் சிலர் பலராகச் செத்துக் கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கை மென்மேலும் சீரழிவின் உச்சத்தையும் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் திராவிடக் கோட்பாடு, தமிழர் கொள்கை, மதச்சார்பின்மை போன்றவற்றுக்காக நாம் கவலைப்பட்டுக் கொண்டிருந்தால், இவற்றையெல்லாம் சிந்தாமல் சிதறாமல் கடைப்பிடித்து, தமிழருக்கு ஆதரவான ஒரு நல்லாட்சியை நாடாளுமன்றத்தில் அமைத்து, அதன் பின் தமிழீழம் பெற்றுத் தருவதற்குள் அங்கு தமிழர் ஒருவரும் மிச்சமிருக்க மாட்டார் அதைப் பெற்றுக்கொள்ள.

மோடியும் இனப்படுகொலையாளிதான். அந்தாளுடன் கூட்டணி வைப்பது தமிழர் கொள்கைக்கு மட்டுமின்றி, மனிதநேயக் கொள்கைக்கே எதிரானதுதான். இவற்றையெல்லாம் யாரும் மறுக்கவில்லை. ஆனால், இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தால் நம் மக்களைக் காப்பாற்றுவது யார்? ஆயிற்று, தமிழினப் படுகொலை நடந்து முடிந்து நான்கரை ஆண்டுகளுக்கும் மேல். எந்த நாடு வந்து நம் மக்களைக் காப்பாற்றியது? ஐ.நா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகியவை இணைந்து நம் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி வைத்து, இன்று வரை அவர்கள் உயிர் வாழ அரும்பேருதவி ஆற்றி வருகின்றன என்பது உண்மைதான். ஆனால், நம் மக்களை மீட்கவோ, நடந்த இனப்படுகொலைக்கு நியாயம் கிடைக்கவோ, தமிழீழம் பிறக்கவோ இந்த நான்கரை ஆண்டுக்காலத்தில் எந்தப் பெரிய முயற்சியும் அவர்கள் எடுக்கவில்லை. ஐ.நா-வோ அதில் உறுப்பினராயிருக்கும் நாடுகளுள் ஒன்றே ஒன்றோ மனம் வைத்திருந்தால் கூட ஒரே இரவில் தமிழீழத்தை மலரச் செய்திருக்க முடியும். ஆனால், இந்த இவ்...வளவு பெரிய கால இடைவெளியில் அவர்கள் யாரும் அதற்கு முன்வரவில்லை. இனிமேலும் அப்படி முன்வரக்கூடிய அறிகுறியும் ஏதும் தெரியவில்லை. அப்படியிருக்க, நம் மக்களைக் காப்பாற்ற நாம் எப்படியாவது நமக்குச் சாதகமான ஓர் ஆட்சியை இங்கு அமைத்தாக வேண்டியது இன்றியமையாதது இல்லையா? அட, சாதகமாக இல்லாவிட்டாலும், பாதகமாகவாவது இல்லாமல் இருக்க வேண்டாவா? கொள்கையில் உறுதி என்பது உயிரினும் மேலானதுதான். ஆனால், கோடிக்காணக்கான மக்களின் உயிர்க் காப்பு, இன, மான மீட்பு என வரும்பொழுது நடைமுறைச் சாத்தியங்களுக்கு நாம் விட்டுக்கொடுத்துப் போக வேண்டியது இன்றியமையாதது இல்லையா?

இவையெல்லாம் வெறும் சமாளிப்புகள் என்கிறீர்களா? சூழ்நிலைக்கேற்றாற்போல் மாற்றி மாற்றிப் பேசும் அரசியல் கயவாளித்தனம் என்கிறீர்களா? சொல்லுங்கள்; ஆனால், அப்படிச் சொல்ல வாய் திறக்குமுன், உலகின் மிகக் கொடுமையான ஒரு சூழலில் வாழும் நம் ஈழத் தமிழ்ச் சொந்தங்களை நினைத்துப் பார்த்துவிட்டுப் பேசுங்கள்!

வயிற்றிலிருக்கும் தமிழ்க் குழந்தையைக் கூட விட்டு வைக்காத கொடூரர்களுக்கிடையில், எந்நேரம் என்ன நடக்குமோ என ஒவ்வொரு நிமிடமும் உயிரையும் மானத்தையும் கையில் பிடித்துக்கொண்டு வாழும் நம் தாய்மார்களை நினைத்துப் பார்த்து...

வறுமையும் அதிகாரப் பேய்களின் கொடுமையும் கண்ணெதிரே தன் குடும்பத்தைச் சிறிது சிறிதாக விழுங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு ஒவ்வொரு நொடியும் துடித்துக் கொண்டிருக்கும் நம் அண்ணன் தம்பிகளை நினைத்துப் பார்த்து...

செத்தால் நரகத்துக்குப் போவது என்பதற்கு மாறாகப் பிறவியே நரகத்தில் வாய்த்திருப்பதை உணராத நம் பிஞ்சுக் குழந்தைகளின் களங்கமில்லாப் புன்னகையை நினைத்துப் பார்த்து...

அதன் பிறகு சொல்லுங்கள், பா.ஜ.க-வுடன் கூட்டணி வைப்பது சரியா இல்லையா என்று!

அனைத்து விதமான வசதிகளும், பாதுகாப்பும் நிரம்பிய உயர்மட்டச் சமூகமான சென்னை மாநகரத்தில் வாழும் நமக்கே, நம் பெண் பிள்ளை மாலையில் வீடு திரும்பச் சற்றுத் தாமதமாகிவிட்டால் கொஞ்சம் பதறுகிறதே, தமிழ்ப் பெண்களைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆட்படுத்துவதைப் பொழுதுபோக்காகவே செய்யக்கூடிய அந்தச் சிங்களச் சமூக அமைப்பில் நம் அக்கா தங்கைகளை ஒரு நாள், இரண்டு நாள் கூட அல்லாமல், நான்கரை ஆண்டுகளாக விட்டு வைத்திருக்கிறோமே, அந்தப் பெண் பிறப்புகளில் ஒருவரையாவது நம் உடன்பிறப்பாக ஒரு நிமிடமாவது நினைத்திருந்தால் நாம் இப்படிக் கூட்டணி குறித்து வக்கணையாக நியாயம் பேசிக் கொண்டிருப்போமா?

அப்படியானால், இங்குள்ள சிறுபான்மையினர் நலன் நமக்கு முக்கியமில்லையா எனக் கேட்டால் முக்கியம்தான்! நம்முடனேயே சாப்பிட்டு, இந்தக் காற்றையே மூச்சிழுத்து, நம்மிடையிலேயே வாழ்கிறவர்களை விட்டுவிட்டு எங்கோ இருப்பவர்களுக்காகக் கடைப்பிடித்தால் அது மனிதநேயம் ஆகாதுதான். ஆனால், இரண்டு தரப்பினருக்குப் பாதிப்பு என வரும்பொழுது அவர்களில் கூடுதலான பாதிப்பு யாருக்கு எனப் பார்த்து அவர்களுக்கு முதலில் உதவிக்கரம் நீட்டுவதுதானே நியாயமாக இருக்க முடியும்?

அப்படிப் பார்த்தால், நாளை அமையக்கூடிய பா.ஜ.க ஆட்சியால் பாதிக்கப்பட இருக்கிற நம் சிறுபான்மையின உடன்பிறப்புக்களை விட ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழ் உடன்பிறப்புக்களுக்கு உதவுவதுதானே நம் முதல் கடமை? நன்றாக இருப்பவர்களின் பாதுகாப்பை விடப் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் மீட்புதானே முதன்மையானது?

இதை நம் சிறுபான்மையின உடன்பிறப்புகளும் ஏற்றுக்கொள்வார்கள் எனத்தான் நம்புகிறேன். ஏனெனில், பசித்திருப்பவனுக்கு உணவளிப்பதை விடத் தவித்திருப்பவனுக்குத் தண்ணீர் அளிப்பது எவ்வளவு முக்கியமானது என்பது அவர்கள் அறியாததில்லை! 

இந்தியர்களை அடிமைத் தளையிலிருந்து விடுவிப்பதற்காக நேதாஜி அவர்கள் இனப்படுகொலையாளி ஹிட்லருடன் கைகோத்தது சரி எனில், கறுப்பின மக்கள் நலனுக்காகப் பெருந்தலைவர் நெல்சன் மண்டேலா அவர்கள் வெள்ளை மாளிகையுடன் கைகுலுக்கியது தவறில்லையெனில், தலைவர் வை.கோ செய்வதும் சரியே!

நன்றி:
 

(கீற்று இதழில் அகச்சிவப்பு தமிழ் எழுதிய கட்டுரை).