வலிகாமம் வடக்கின் நிலங்களில் பெரும்பகுதியில் இராணுவத்தினர் விவசாய நடவடிக்கைகள்!

இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டு உயர்பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள வலிகாமம் வடக்கின் பெரும்பகுதியில் இராணுவத்தினர் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதை கண்டு பொது மக்கள் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் குறிப்பிப்பிடுகின்றன.
பி.ரணில் விக்கிரமசிங்க தலைமையில் தேசிய பொங்கல் விழா (வெள்ளிக்கிழமை) வடமாகாணத்தில் இடம்பெற்றது. இதன்போது, ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட மக்கள் பலாலியில் அமைந்துள்ள ஸ்ரீ இராஜேஸ்வரி அம்மன் ஆலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.
இதற்கமைய, ஏற்கனவே பதிவு செய்யப்பட்டவர்கள் உயபட பாதுகாப்பு வலய நுழைவாயிலில் வைத்து இராணுவத்தினருடைய வாகனங்களில் ஏற்றி நிகழ்வு நடைபெற்ற கண்ணார் வயல் ஸ்ரீ இராஜேஸ்வரி அம்மன் ஆலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதன்போது, வீதியின் இருப்பக்கங்களிலும் காணப்பட்ட பொதுமக்களுக்கு சொந்தமான விவசாயக் காணிகளில் இராணுவத்தினர் விவசாயம் செய்திருந்தமையினைக் கண்டு மக்கள் அதிர்ச்சியும், ஆத்திரமும் கொண்டுள்ளனர்.
இதன்போது இப்பகுதியில் பப்பாசி, வாழை, கரும்பு, சோளம் மற்றும் மரக்கறி பயிர்கள் நடப்பட்டு செழிப்பாக விவசாயம் செய்யப்பட்டிருப்பதையும், விவசாயத்திற்காக நிரந்தரமாக குழாய் மூலமாக நீர் விநியோகத் திட்டமும் அமைக்கப்பட்டிருந்ததனை மக்கள் அவதானித்துள்ளனர்.
இதவேளை நிகழ்விற்காக வரும் மக்களின் கண்களில் விவசாய நிலங்கள் தென்படக்கூடாது என்பதற்காக இராணுவத்தினர், பச்சை தென்னை ஓலைகளால் அவசர அவசரமாக வேலிகளை அமைத்து மறைத்திருந்ததனையும் அவதானிக்க கூடியதாக இருந்ததாக அங்கு சென்று திரும்பிய மக்கள் கூறினர்.
                                                                       நன்றி:PTK Voice of Vanni.