தமிழ்நாட்டில் வாழும் ஈழத்தமிழ் உறவுகளுக்கு பிரித்தானிய தமிழ் அமைப்புக்களினால் 2ஆம் கட்ட நிவாரணப்பணி!
பிரித்தானியாவில் இயங்கும் முக்கியமான பல தமிழ் அமைப்புக்கள் ஒன்றிணைந்து தமிழகத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு உதவும் முகமாக பல உதவித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில் இம்மாத முற்பகுதியில் இவ் அமைப்புக்களின் சார்பாக பிரித்தானிய சைவத் திருக்கோவில் ஒன்றியத்தின் சார்பில் திரு. கோபாலகிருஷ்ணன், பிரித்தானிய தமிழர் பேரவையின் செயல்பாட்டாளர் திரு. சகாதேவன் மற்றும் தென்னிந்திய திரைப்பட இயக்குனர் திரு. பாரதிராஜா தமிழ்நாட்டிலுள்ள சமூக தன்னார்வலர் அமைப்புகள் ஆகியோரினால் முதலாம் கட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இவ் உதவித்திட்டத்தின் தொடர்ச்சியாக கடந்த 13ம் திகதி புதன் கிழமை எம் உறவுகளுக்கான இரண்டாம் கட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இவ் உதவித்தொகை பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள காட்டுமன்னார் கோவில் ஈழத் தமிழர் அகதி முகாமில் உள்ள 272 உறுப்பினர்களைக் கொண்ட 102 ஈழத் தமிழ் குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி, 1 கிலோ சீனி, 4 கிலோ மைதா, 4 கிலோ கோதுமை, 1 கிலோ மைசூர் பருப்பு, 1 சமையல் எண்ணெய், 200 கிராம் தேயிலை போன்ற ஒரு மாதக் காலத்துக்கான உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன. அங்கே கணவனை இழந்து விதவைகளான பெண்களுக்கு உடுபுடவைகள் வழங்கப்பட்டன.
பிரித்தானிய தமிழர் பேரவை, பிரித்தானிய சைவத் திருக்கோவில் ஒன்றியம், நம்பிக்கை ஒளி, THE YOUTH PROJECT, SERENDIP CHILDREN'S HOME, LOTUS CARING HANDS> ஒத்துழைப்பு, கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு (ஐ.இ), பிரித்தானிய தமிழ் கொன்சவேற்றிவ், தொழில் கட்சிக்கான தமிழர் மற்றும் ஹில்லிங்டன் தமிழ் சமூக நிலையம் என்பன இணைந்து கடந்த ஆண்டு இறுதியில் தமிழகத்தில் மிகப் பெரிய அழிவினை ஏற்படுத்திய மழைவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவைப்படும் நிவாரண உதவிகளை முன்னெடுத்து வருகின்றன.
காட்டுமன்னார் கோவில் ஈழத் தமிழர் அகதி முகாமிலுள்ள பலர் தமிழீழத்தின் மன்னார், திருகோணமலை,, முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களில் இருந்து பல வருடங்களிற்கு முன்னர் தமிழ்நாட்டிற்கு இடம் பெயர்ந்து மேற்படி அகதி முகாமில் வாழ்கின்றனர். அங்கு 20 ஆண்டுகளாக வாழ்பவர்கள் பிரித்தானியாவிலிருந்து சென்ற செயல்பாட்டாலர்களுடன் தம் அகதி வாழ்வின் சுமைகளைப் பகிர்ந்து கொண்டது மனதைப் பாதிக்கும் விடயமாக அமைந்தது. நாட்டுக்குத் திரும்பும் ஏக்கமும் அங்கே நிம்மதி கிடைக்குமா என்ற தயக்கமும் அவர்கள் மனங்களை வாட்டுவது புரியக் கூடியதாகவிருந்தது.
அடுத்த கட்டங்களில் உதவி அவசியம் தேவைப்படுவோர் விபரங்கள் திரட்டப்பட்டு பாதிக்கப்பட்டோரிற்கு நேரில் உதவிகள் கொடுக்கும் செயல்பாடுகள் எதிர்வரும் காலங்களில் தொடரும்.
அதேவேளை குறுகிய காலத்திற்குள் ஏற்பாடு செய்யப்பட இவ் வெள்ள நிவாரண பணிக்கு முழுமையான ஆதரவை வழங்கிய பிரித்தானியா வர்த்தக நிலையங்கள், சங்கங்கள், ஆலயங்கள் மற்றும் நிதி உதவிகள் வழங்கிய தனிப்பட்ட நல்லிதயங்கள் , மற்றும் நிதியைச் சேகரிப்பதற்கு உதவிய அனைத்து அமைப்புகளின் தொண்டர்களுக்கும் இதயபூர்வமான நன்றியைத் தெரிவிப்பதுடன் எதிர்காலத்தில் இவ்வாறான ஒருங்கிணைந்த மனிதாபிமானப் பணிகள் தொடர்வதற்கு அனைத்து பிரித்தானிய தமிழ் மக்களின் ஆதரவும் அனுசரணையும் தொடர்ந்தால் தமிழ் மக்களுக்கான மேலும் பல நற்பணிகளை விரைந்து செயல்படுத்த முடியும்.
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு!
Contact: S Sangeeth Tel: +44 (0) 7412 435 697
Email: media@tamilsforum.com
Contact: S Sangeeth Tel: +44 (0) 7412 435 697
Email: media@tamilsforum.com