முதல்முறையாக வாயை திறந்தார் செல்வம் !!!

மாவிட்டபுரத்தானுக்கு கோவிந்தா !!! கோவிந்தா !!!

மாவட்ட அபிவிருத்திக்குழு அமைச்சர் விவகாரத்தை பொறுத்தவரையில் இழுபறிநிலை காணப்பட்டாலும், யாழுக்கு யானை அணியின் கலா நியமிக்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. அதற்கான நியமனக்கடிதமும் கொடுக்கப்பட்டு விட்டதாம்.

ஒரு கபினட் அமைச்சரின் அந்தஸ்துக்கு சமமான இந்தப்பதவியை கைப்பற்றுவதற்கு இலங்கை தமிழரசுக்கட்சியின் முக்கியஸ்தர் ஒருவரும் கண் வைத்து செயற்பட்டது இரகசியமானதல்ல.

‘யாழுக்கு ஒருவர், கிளிநொச்சிக்கு ஒருவர்’ என, இரு மாவட்டங்களையும் பெறுவதற்கு அதிக வாக்குகளை பெற்ற தமிழரசுக்கட்சியின் இருவர் திட்டமிட்டிருந்ததாக தெரிகின்றது. இதற்காக அரசுடன் பேரம் பேசவும் அவர்கள் தயாராக இருந்ததாகவும் கேள்வி.

நல்லிணக்க அடிப்படையில் எதிர்க்கட்சி தலைவர் பதவியையும், அவை பிரதித்தலைவர் பதவியையும் கொடுத்த அரசாங்கம், மாவட்ட அபிவிருத்திக்குழு அமைச்சர் பதவியையும் தரும் என்று அவர்கள் எதிர்பார்த்திருக்கலாம். இந்த இழுபறிகளுக்கு மத்தியில் பதவி கொடுக்கப்பட்டு விட்டது.

உலக மகா அதிசயம்… முதல்முறையாக வாயை திறந்தார் செல்வம் !!!

கூட்டமைப்பின் கூட்டங்களின் போது வழமையாக வாய்மூடி அம்முணி – மங்குணி வேலை பார்க்கும் மன்னாரின் மைந்தன், இந்த வாரம் கூட்டமைப்பின் கூட்டம் ஒன்றில் வாயை திறந்திருக்கிறார்.
சுமந்திரன் அந்தப்பக்கமா? இந்தப்பக்கமா? மன்னார் மைந்தன் கேட்ட கேள்வி இதுதான்.

அமெரிக்காவின் பவர் கொழும்புக்கு வந்தபோது, சுமா எம்முடன் இணைந்து பேச்சுக்கு வந்திருந்தார். பின்னர் அரசாங்கத்தின் சிரேஸ்ட கபினட் அமைச்சர்களை பவர் சந்தித்தபோது அதிலும் பங்குபற்றியிருந்தார். அப்பிடியென்றால் சுமா அந்தப்பக்கமா? இந்தப்பக்கமா? என்று மன்னார் மைந்தன் கேட்டுள்ளார்.

இதற்கு சுமா, சும்மா மழுப்பி மழுப்பி சமாளித்து பதிலளித்ததாக கேள்வி.

இதனைவிட பட்ஜெட்டில் போரால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்குக்கு எதுவும் இல்லை என்கிறோம். அதனை எதிர்த்தும் பேசுகிறோம். பின்னர் எதற்காக அதனை ஆதரித்து வாக்களிக்க வேண்டும்? எனவும் மன்னார் மைந்தன் அப்பாவித்தனமாக கேட்டுள்ளார்.

உலக நாடுகள் இன்று இலங்கை அரசுடன் உள்ளன. அரசுக்கு நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த நிலைப்பாட்டை எடுத்ததாக சொல்லி சாம் ஐயா எல்லோருக்கும் வகுப்பெடுத்ததாக கேள்வி.

வன்னி எம்.பிக்கள் SS க்கு பெருகும் மக்கள் ஆதரவு !!!

பட்ஜெட்டை ஆதரிப்பதென கூட்டமைப்பின் தலைமை முடிவெடுத்தாலும் கூட, வன்னியின் இரு எம்.பிக்கள் அதனை ஏற்க மறுத்து விட்டார்கள். கூட்டமைப்பின் தலைமைக்கு இது முதலாவது எச்சரிக்கை மணி.

அரசுக்கு நல்லெண்ணத்தை வெளிப்படுத்த பட்ஜெட்டை ஆதரித்ததாக கூட்டமைப்பின் தலைமை சொன்னாலும், இந்த பித்தலாட்டம் மக்கள் மத்தியில் எடுபடுவதாயில்லை. ஏனெனில் தமிழர்களுக்கு நல்லெண்ணத்தை வெளிப்படுத்த இந்த அரசும் ஒன்றும் செய்யவில்லையே என்று மக்கள் கடுப்பில் உள்ளனர்.

பட்ஜெட்டுக்கு ஆதரவாக தூக்கிய கையை இறக்க முன்னரே, மற்ற கையை நீட்டி ‘பட்ஜெட்டில் வடக்கு மாகாணசபைக்கான திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு இல்லை. கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை. வாக்குறுதி மீறப்பட்டுள்ளது. பொறுமை இழந்து விட்டோம்’ என்று சுமந்திரன் பாராளுமன்றத்துக்குள்ளேயே முழங்கியிருக்கின்றார். 

உண்மைகள் இப்பிடி  உரைக்கும் நிலையில் உள்ளபோது ஏன் ஆதரித்து வாக்களித்தனர்? என்பது, அது அவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் நன்மைகளை பொறுத்தது.

வடக்கு கிழக்கில் வாக்குகளை வாங்கிக்கொண்டு கொழும்பில் படுத்துக்கிடப்பவர்களுக்கு பிரச்சினை இல்லை. வடக்கு கிழக்கில் மக்களிடம் போகும் எம்.பிக்களுக்கு தான் தெரியும் மக்களின் பிரச்சினை. நாக்கு புடுங்க மக்கள் கேள்வி கேட்க தொடங்கி விட்டார்கள். 

காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை, அரசியல் கைதிகளின் பிரச்சினை, காணி பிரச்சினை என்டு தமது வீடுகளை தேடிவரும் மக்களுக்கு வன்னி எம்.பிக்கள் பொறுப்புக்கூற வேண்டுமல்லவா? 

அரசை ஆதரித்து விட்டு மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்வது எப்பிடி? வன்னி எம்.பிக்களின் முடிவு மக்களின் வரவேற்பை பெற்றிருப்பதாக பேசப்படுகின்றது. 

அடி வயிற்றில் புளியைக் கரைக்கும் சங்கரி !!!

சங்கரியின் அழைப்பும் முதலமைச்சரின் பதிலும் கூட்டமைப்பின் தலையை சுற்ற வைத்துள்ளதாக தகவல். நிலைமை கட்டுமீறிப்போய் விடுமோ? விக்கி தலைமையில் புதிய மாற்று தமிழ் தேசிய அணி உருவாகி விடுமோ? என்று அச்சம் ஏற்பட்டுள்ளதாம். 

தடல்புடலாக முதலமைச்சரை அழைத்துப்பேசி, தமது கட்டுப்பாட்டுக்குள் அவரை கொண்டு வர முயற்சிகள் திரை மறைவில் இடம்பெற்று வருவதாகவும் கேள்வி. இரண்டொரு வாரத்துக்குள் அடுத்த நகர்வு என்ன? என்பது தெரிந்துவிடும். 

ஏனெனில் இலங்கையில் பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளில் யாப்பில் சமஸ்டிக் கோரிக்கையை வலியுறுத்தும் ஒரே கட்சியாக தமிழர் விடுதலைக்கூட்டணி மட்டுமே காணப்படுவது கூட்டமைப்பின் தலைவருக்கு இன்னும் அடிவயிற்றில் புளியைக்கரைத்துள்ளதாம்.

நன்றி,
தினக்குரல் (அதிரடி அரசியல்)
06.12.2015