கிளிநொச்சி மாவட்ட மக்களை
அடிமைப்படுத்தியிருந்த கசிப்பு, மது, போதைவஸ்து போன்ற குற்றச்செயல்களை
அடியோடு அழித்து, அவற்றில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்குக் கொடூரமான
தண்டனைகள் வழங்கி, நீதிபதி வகாப்தீன் நீதியை நிலைநாட்டியிருந்தார் என்று
கிளிநொச்சியில் இருந்து இடம்மாற்றம் பெற்றுச் செல்லும் நீதிபதி
வகாப்தீனுக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் புகழாரம்
சூட்டியுள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட
நீதிபதியாகக் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாகக் கடமையாற்றி, பொத்துவில்
பிரதேச நீதிபதியாக இடம் மாற்றம் பெற்றுச் செல்லும் நீதிபதி வாகப்தீனுக்கு
கிளிநொச்சியில் நடத்தப்பட்ட பிரிவுபசார வைபவத்தில் கலந்து கொண்டு
உரையாற்றுகையிலேயே மேல் நீதிமன்ற நீதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
அங்கு உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது:
போரிற்குப்
பின்னரான காலப்பகுதியில் மறுவாழ்வுக்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்த
கிளிநொச்சி மாவட்ட மக்களை கசிப்பு, மது, போதைவஸ்து என்பவற்றிற்கு
அடிமைப்படுத்திய சமூகவிரோத குற்றவாளிகள் அவர்களின் நிம்மதியை
குலைத்திருந்தார்கள். இத்தகைய குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளை வழங்கி,
கிளிநொச்சி மாவட்ட நீதிபதி வகாப்தீன் நீதியை நிலைநாட்டியிருந்தார்.
கடந்த
2012 ஆம் ஆண்டு, வகாப்தீன் நீதிபதியாக கிளிநொச்சி மாவட்டத்தில் முதலாவது
நியமனத்தைப் பெற்றார். அப்போது, இந்த மாவட்டத்தில் கசிப்பு உற்பத்தி
அதிகரித்திருந்தது. அதனால், கசிப்பு உட்பட மதுபாவனையினால், பெண்கள்,
குழந்தைகளின் வாழ்க்கை சீரழிக்கப்படுவதை சமூக நலன் நோக்கில் பார்த்த
நீதிபதி, இத்தகைய சமூக, பொருளாதார, கலாசாரச் சீரழிப்பு குற்றங்களை அடியோழு
ஒழிப்பதற்காக குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளை வழங்கினார்.
சமூக
நலன் சார்ந்த அவருடைய செயற்பாட்டில் விசேட அம்சமாக, சமூக நலன் கொண்ட
பார்வையையும் அவருடைய செயற்பாட்டையும் கிளிநொச்சி மாவட்ட சட்டத்தரணிகள்
சங்கத்தினர் ஆதரித்திருந்தனர். கசிப்பு மற்றும் போதை வஸ்து குற்றங்களில்
சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆதரவாக அவர்களுடைய வழக்குகளில் சட்டத்தரணிகள்
ஆஜராகாமல், நீதிமன்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தார்கள்.
நீதிபதி
வகாப்தீனின் தீர்ப்புக்கள் மிகவும் கடுமையாக உள்ளதென சுட்டிக்காட்டி,
அவற்றுக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் மீளாய்வு மனுக்களும்
மேன்முறையீட்டு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. சட்டத்திற்கு உட்பட்ட
அதியுச்ச தண்டனை வழங்கி சமூகத்தைத் திருத்தும் நீதிபதியின் தீர்ப்பில் யாழ்
நீதிமன்று தலையீடு செய்யாது என தெரிவித்து. அனைத்து மேன்முறையீடு மற்றும்
மீளாய்வு மனுக்கள் யாழ். மேல் நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டன.
வகாப்தீன்
சமூகப் பார்வை கொண்ட ஒரு நீதிபதி. சுமூக நலன்களில் அவருக்கு தீவிர
அக்கறையும் ஆர்வமும் உள்ளது. அந்த வகையிலேயே அவர் சமூக விரோதக்
குற்றங்களுக்குக் கடும் தண்டனைகளை வழங்கி, அந்தக் குற்றச் செயல்களை
ஒடுக்கினார். அதேநேரம் மதுபோதையில் வாகனம் செலுத்திய சாரதிகளை சிறைக்கு
அனுப்பி போக்குவரத்து மரணங்களைத் தடுத்த நீதிபதியாகவும் அவரைப் பார்க்க
முடிகின்றது.
முன்னர் மிகுந்த கட்டுப்பாட்டில்
இருந்த கிளிநொச்சி மாவட்டம் சுதந்திரக் காற்றை சுவாசிக்க முயன்ற போது,
மக்கள் மத்தியில் சமூகவிரோதக் குற்றச் செயல்கள் தலைவிரித்தாடத் தொடங்கின.
அவற்றை அடியோடு அழித்த நீதிபதி வகாப்தீனின் காலம் பொன்னெழுத்துக்களினால்
பொறிக்கப்படும் என்றார்.
கிளிநொச்சி
மாவட்டத்தில் இருந்து நீதிபதி வகாப்தீன் பொத்துவில் நீதிபதியாக இடம்
மாற்றம் செய்யப்பட்டுள்ளதையடுத்து, கிளிநொச்சிக்கு, திருகோணமலை மாவட்ட
சிரேஸ்ட தரமுள்ள நீதிபதி பிரபாகரன் நியமனம் பெற்றுள்ளார் என்பது
குறிப்பிடத்தக்கது.