சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் !

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்…..

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் இன்று வவுனியாவில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. மாற்றுத்திறனாளிகளின் வாழ்வியலில் மாற்றத்தை கொண்டுவரும் நோக்கோடு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது அந்த வகையில் உயிரிழை அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாபெரும் சக்கர நாற்காலி மரதன் ஓட்டப்போட்டியானது அதிகாலை 06 மணியளவில் கௌரவ வடமாகாண அமைச்சர் வைத்திய கலாநிதி சத்தியலிங்கம் மற்றும் அரச அதிகாரிகளினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.  ஓமந்தை பாடசாலை முன்னாக ஆரம்பிக்கப்பட்ட சக்கர நாற்காலி மரதன் ஓட்டப்போட்டியானது வவுனியா மகாவித்தியாலயத்தின் முன்பாக நிறைவடைந்தது. மிக மிக சிறப்பாக நடைபெற்ற இன் நிகழ்வில் 11 முள்ளந்தண்டு வடம் பாதிப்புற்ற வீரர்கள் கலந்து கொண்டிருந்தனர் நாங்களும் எவருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்ற எண்ணத்தோடு 14கிலோமீற்றர் துாரத்தினையும் பொருட்படுத்தாது குறிப்பிட்ட நேரத்தில் ஓடி முடித்தனர்.


தொடர்ந்து நிகழ்வுகள் மாவட்ட சமூக சேவைகள் திணைக்களம் தன்னார்வுத் தொண்டு நிறுவனங்களோடு மற்றும் வவுனியா மாவட்ட பொது வைத்திய சாலையும் இணைந்து வவுனியா பேரூந்து தரிப்பிடத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டு பாதாதைகள் கட்டப்பட்ட வாகன ஊர்தியோடு ஊர்வலமாக நகரசபை கலாச்சார மண்டபத்தை அடைந்து நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது.


நகரசபை கலாச்சார மண்டபத்தில் உயிரிழை அமைப்பின் தலைவர்  திரு வி.ஜெயகாந்தன்  ஆற்றிய சிறப்பு பேச்சின் முழுவடிவம்


நாம்  இன்று அனைவரும் ஒன்றான , ஊர்வலமாக , ஒன்று கூடி மாற்றுத்திறனாளிகள் அனைவரையும் சமூகத்தின் ஓர் அங்கமாக ஏற்று அவர்களின் வாழ்வியல் பற்றிய விழிப்புண‌ர்வை  ஏற்படுத்த திடசங்கல்ப்பம் பூண்டமைக்காக எனது முதற்கண் நன்றிகள்


இது எமக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துகின்றது.


அங்கவீனர்கள் , கர்ம வினைப்பலனில் நின்று உழல்பவர்கள் என சமூகத்தால் பார்க்கப்பட்டவர்கள் இன்று மாற்றுத்திறனாளிகள் என்ற பதம் கொண்டு அழைக்கப்படுகின்றோம்.




போர் , விபத்து , இயற்கை அனர்த்தங்கள் எங்களின் முதுகு எலும்பை ஒடித்து , எம்மை சக்கர நாற்காலிகளில் சங்கமிக்க வைத்து விட்டது. உலகின் வேதனைகள் அத்தனையையும் அனுபவித்து விட்டோம். இனிவரும் காலங்களில்  நாம் அனுபவிக்க உள்ளவற்றை எண்ணி இன்னமும் அஞ்சுகின்றோம்.


அப்படி சக்கர நாட்காளிகளில் முடக்கப்பட்ட நாம் இன்று அந்த வேதனைகளோடு வாழ்வதை பழக்கப்படுத்திக் கொண்டோம்.


உங்கள் அனைவரது அன்பும் பாசமும் எம்மை தாங்கி நிற்கின்றது. எம்முன்னே நிற்கும் நீங்கள் , இந்த படிவத்தை படிப்பவர்கள் , கட‌ல் கடந்து கண்காணா தேசத்தில் வாமும் உறவுகள் என அத்தனை மனித தெய்வங்களின் அன்பும் அரவணைப்பும் நாம் இன்னமும் வாழ வேண்டும் என்பதற்கான ஒரே ஒரு காரணமாக அமைகின்றது.


*******************************************************************************


இன்று மாணவர்கள்  எமது பேரணியில் கலந்து கொண்டார்கள்


நீங்கள் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதும் பொருட்டே இன்று எமது சக்கர நாற்காலிகளை உந்தி முன்னோக்கி நகர்த்தினீர்கள். நீங்கள் உங்கள் வகுப்பறைகளில் எம்மை போன்றவர்களைப்பார்ப்பீர்கள் . நீங்கள் பயணிக்கும் பேருந்துகளில் எம்மை பார்த்திருப்பீர்கள்


அவ்வாறான உங்களின் நண்பர்களை நீங்கள் அணைத்து அரவணைத்து கூட்டிச் செல்வதற்காக நாம் இந்த இடத்தில் நன்றி கூறு கின்றோம்


இவ்வாறு சக்கர நாற்காலிகளில் வாழும் ஒரு சிறுமி அண்மையில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்துள்ளார்.


இவ்வாறான சாதனையாளார்கள் கௌரவிக்கப்பட்டு ஊக்குவிக்கப்பட வேண்டும். அவர்களது கல்வி தொடர வேண்டும்


*********************************************************************************


உயிரிழை


நாம் ஒண்றிணைந்து எம்மைப்போன்றோர் அனைவரையும் அணைத்துச்செல்ல உயிரிழை எனும் அமைப்பை உருவாக்கி இன்று ஓரளவு முன்னேறி வருகின்றோம்


எமது அமைப்பில் 166 முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோர் அங்கத்தவர்களாக இருக்கின்றார்கள்.  அவரக்ளில் பெரும் பாலானோர் சாதாரண மனிதர்களாக வாழ்ந்து , போர் , விபத்து என்பவற்றால் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலிகளுக்குள் முடக்கப்பட்டவர்கள்

இவ்வாறு பாதிக்கப்படவர்களின்  வாழ்வில் சந்திக்கும் சவால்கள் எண்ணிலடங்காதவை

பூமிப்பந்தில் வாழும் அனைத்து தமிழ் மக்களும் ஏதோ ஒரு வகையில் தம்மை ஒரு தொண்டு நிறுவனத்தோடு தொடர்பு படுத்துகின்றார்கள்  அவ்வாறான தொண்டு நிறுவனங்கள் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோரை முதன்மைப்படுத்த விரும்புகின்றனர்.

அதன் விளைவாக பல்வேறுபட்ட உதவிகளை எமது மக்கள் பெறுகின்றனர். ஆனால் அவ்வாறான உதவிகள் ஒரு சிலருக்கு மட்டும் கிடைத்ததாக அமைந்து விட்டது. நகர் புரத்தில் இருந்தவர்களும் தகவல் தொடர்பாடலில் இருந்தவர்களும் முதன்மைப்படுத்தப்பட மற்றவர்களுக்கு ஏதும் கிடைக்காத நிலையே இருந்து வந்தது.

இவ்வாறான நிலையில் நாம் ஒரு தகவல் திரட்டை ஏற்படுத்தினோம். எமக்கு வருகின்ற உதவிகள் சிறிய அளவில் இருந்த பொழுதும் ,  அவற்றை அனைவருக்கும் பகிர்ந்தளிக்க முற்பட்டோம்

அவ்வாறான காலப்பகுதியில் லண்டனில் ஆரம்பிக்கப்பட்ட தொண்டு நிறுவனமான  ஊதா எமது அங்கத்தவர்களுக்கு உதவும் திட்டத்தோடு எம்மை அணுகினார்கள், சிறு துளி எனும் திட்டத்தில் எமது அங்கத்தவர்களுக்கு முதற்கட்டமாக உதவித் தொகையாக  ரூபா 10,000 வரை கொடுக்கும் திட்டத்தில் எம்மை ஒரு பங்கு தாரராக இணைத்தனா்.

நாம் அவர்களுக்கு முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டோரின் முழுமையான விபரத்தை கொடுத்து முதலில் அனைவருக்கும் ரூபா 5000 கொடுப்பதை உறுதிப்படுத்துவோம் அதன் பின்னர் நாம் 10,000 ரூபா என்ற இலக்கை அடையலாம் என ஆலோசனை வழங்கினோம்

அத்திட்டமானது கடந்த தை மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டது .  கார்த்திகை மாதத்தில் 56 பயளாளிகளுக்கு மாதாந்த உதவித்தொகை கிடைக்குமளவில் அத்திட்டம் முன்னேறி வருகின்றது.

லண்டன் நாக பூசணி அம்மன் கோவில் இத் திட்டத்தில் ஊதா விற்கு கரம் கொடுக்கின்றனர். தற்போது சிவனருள் இல்லமும் ஊதா வோடு தகவல்களை பரிமாறி,  பயனாளிகள் 5000 பெறுவதை உறுதி செய்யும் பொருட்டு செயற்படுகின்றார்கள்

கூடிய விரைவில் எமது அங்கத்தவர்கள் அனைவருக்கும் அந்த உதவித்தொகை கிடைக்கும் என நாம் நம்புகின்றோம்

ஐக்கிய இராட்சியத்தில் இருக்கும் நல்லுள்ளம் கொண்ட எமது உறவுகள் ஊதா வினூடு எமது பயனாளிகளுக்கு உதவுமாறு கேட்டுக் கொள்கின்றோம்

அதேவேளை எமக்கும் உதவி நிற்போர் பலரையும் பற்றி நான் இங்கு குறிப்பிட்டு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.

வட மாகாண சபை
வட மாகாணசபை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோருக்காக  மாதாந்த உதவித் தொகை யாக கழுத்துக்கு கீழ் பாதிக்கப்பட்டோருக்கு 3000 ரூபாவும்  இழுப்புக்கு கீழ் பாதிக்கப்பட்டோருக்கு 1500 ரூபாவும் வழங்குகின்றார்கள் .

இவ்வாறான உதவிகளுக்காக வட மாகாண சபைக்கு எமது மனமார்ந்த நன்றிகள் . வட மாகாண சபை இந்த தொகையை அதிகரிக்க வேண்டும். அத்தோடு இந்த உதவித் தொகை நாடளாவிய ரீதியில் வழங்கப்பட வேண்டும்.

மாவட்ட பொது வைத்திய சாலை (வவுனியா)

உதவும் உறவுகள் அமைப்பு (சுவிஸ்)
வாழவைப்போம் அமைப்பு (கனடா)
Accountancy Group Estd 1986  (Striving. Achieving. Encouraging)
SUGUN (Cheap& Quality app calls)
சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் விடியல் அமைப்பினர்
கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு
பிரித்தானியா வாழ் தமிழ் உறவுகள்
திரு வேலாயுதம் கணேஸ்வரன் ( சிவன் பௌடேசன்)
இலங்கை வங்கி (வவுனியா)
மக்கள் வங்கி ( வவுனியா)
ஏனைய உதவிகள் வழங்கிய அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டுன்ளோம்

உயிரிழை
நாம்  எமது முயற்சிகளை இன்னமும் வினைத்திறன் மிக்கதாக அமைப்பதற்கு உயிரிழை அமைப்பானது  இன்னமும் விரிவு படுத்தப்பட வேண்டும்

நாம் தற்போது ஒரு வாடகைக்கு எடுக்கப்பட்ட இடத்தில் அலுவலகத்தை ஆரம்பித்திருகின்றோம். எமக்கு ஒரு கணனி கூட இன்னமும் இல்லை , ஒரு சில உதவிகளை மட்டும் நம்பி எமது அலுவலகம் இருகின்றது.

ஆனாலும் உலகம் பூராகவும் வாழும் எமது  உறவுகள் கேட்கும் தகவல்களை வழங்கக்கூடிய நிலைக்கு உயிரிழை முன்னேற வேண்டும்

நாம் எமக்கான ஒரு கட்டடத்தில் எமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

எம்மை நிறுவன மயப்படுத்தி வளர்க்க உதவுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
               ********************************************************************************
இன்று நான் இந்த மேடையில் நிற்கின்றேன் . மன்னிக்கவும் , இருக்கின்றேன்

நான் இந்த மேடைக்கு தூக்கி வரப்பட்டேன். இது தான் உன்மையில் எமக்காக இருக்கக்கூடிய முக்கிய சவால்.

சக்கர நாட்காலிப்பாவனையாளர் , ஒரு நகர சபை மேடையில் ஏற முடிய வில்லை.

சர்வதேச அளவில் சக்கர நாட்காளிகளில் அமர்வோர் பங்கு பற்றும் ஒலிம்பிக் நடக்கும் தருணத்தில் வாழ்கின்றோம்.

அவ்வாறான ஒரு உலகிற்கு நாம் எம்மை இட்டுச் செல்ல வேண்டும்

இவ்வாறான கருத்துருவாக்கம் எமது கட்டட வடிவமைப்பாளர்களின் எண்ணக்கருத்தில் உதிக்க வேண்டும்,
இவை சட்ட மாக்கப்பட வேண்டும்.

அடுத்த கட்டம் :
நாம் உதவித் தொகைகள் நன்கொடைகள் என்ற நிலையைத் தாண்டி பாதிக்கப்பட்டவர்களுக்கான வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்

இவை பெரும்பாலும் அரசு  மற்றும் நிறுவனமயப்படுத்தப்பட்ட அமைப்புக்களால் மட்டுமே முன்னெடுக்கப்பட முடியும்

பாதிக்கப்பட்டோருக்கு பொருத்தமான தொழில் முயற்சிகள் , தொழில் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்

இவ்வாறான கோரிக்கைகளை இங்கு வருகை தந்திருக்கும் அமைச்சர் பெருமானும் , அரச உயர் அதிகாரிகளும் கவனத்தில் எடுக்க வேண்டுமென வேண்டுகின்றேன்,

குழந்தையின் பசி ஆறவேண்டும் , படிக்க வேண்டும் , குடும்பத்துக்கு உழைக்க வேண்டுமென , முதுகெழும்பு முறிந்த நிலையிலும் எமது சகோதரர்கள் உழைத்தார்கள் , உழைக்கின்றார்கள் .......... பொருத்தமற்ற தொழில்களில் நீண்ட நேர உழைப்பு  அவர்களின் உயிரைக் காவு கொண்டு விட்டது.

எமது இந்த கோரிக்கைகள்  அரச உயர் மட்டத்துக்கு எடுத்துச் செல்லும் வல்லமை இங்கு வீற்றிருக்கும் பெரியோர்களுக்கு உண்டு என்பதனால் நான் இந்த மகஜரை அவர்களுக்கு கையளிக்கின்றேன்.

இதனை நீங்கள் மேதகு சனாதிபதிக்கும் , மேதகு பிரதமருக்கும் , மேதகு எதிர்க்கட்சி தலைவருக்கும் , அனுப்பிவைக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

சாதாரண மனிதர்களாக வாழ்ந்து பின்னர் சக்கர நாற்காலிகளுக்குள் முடக்கப்பட்டுள்ள உங்கள் சகோதரர்களின் வாழ்வில் ஓர் முன்னேற்றத்தை கொண்டு வருவதற்கு இந்த பூமிப்பந்தில் வாழும் தமிழ்கூறும் நல்லுககத்தினரும் , மற்றவர்களும்  நிட்சயம் கரம் கொடுப்பார்கள் என்ற பெரும் நம்பிக்கையோடு நாம் இந்த உயிரிழை என்னும் அமைப்பை உருவாக்கியதோடு அவர்கள் தொடர்பான தகவல்களையும் உயிரிழை பகிந்து வருகின்றது.
பின்வரும் இலக்குகளை நோக்கி பணிபுரியும் உயிரிழைக்கு உதவும் உள்ளம் கொண்டோருக்காக பின்வரும் தகவல்களை பகிர்கின்றோம்

உயிரிழையின் இலக்கு
:
முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட தனி நபரோ அல்லது குடும்ப உறுப்பினரோ தாங்களே சுயமாக இயங்கக்கூடிய வகையில் மேம்படுத்தலும், உறுதிப்படுத்தலும்.
முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக உயிரிழை அமைப்பினூடாக குரல் கொடுத்தலும், பெற்றுக் கொடுத்தலும்.
மருத்துவம், வாழ்வாதாரம், போக்குவரத்து நிரந்தர பராமரிப்ப மையம் ஆகிய நான்கினையும் நீதியான, நேர்மையான வகையில் வழங்குதல், உறுதி செய்தல்.
அரச மற்றும் அரசசார்பற்ற அமைப்புக்களின் உதவியினை நேரடியாகவோ அல்லது உயிரிழையூடாகவோ பெற்றுக் கொடுப்பதும், உறுதிப்படுத்தலும்

எனவே எமதுஅமைப்பிற்கககு ஒத்துழைப்பு வழங்கி வரும் அனுசரணையாளர்களுக்கும் எம்மோடு இணைந்து செயற்ப்படும் மாவட்ட சமூக சேவைகள் திணைக்களத்தினருக்கும் பிரதேச செயலகத்தினருக்கும் மாவட்ட பொதுவைத்திய சாலையினருக்கும் இணைந்து செயற்படும் அத்தனை உள்ளங்களுக்கும் எமது அமைப்பிலான நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.
நன்றி










நன்றி:உயிரிழை.