மூடிய புத்தகமாக கூட்டமைப்பு, திறந்த புத்தகமாக த.ம.பேரவை!

தமிழ் மக்கள் பேரவை உதயமாகியுள்ளது 

இவர்கள் ஏன் தமிழ் மக்கள் குறித்து அச்சமடைய வேண்டும்.
தமிழ் மக்கள் பேரவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்துவதற்காக் சிதைப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு என்று ஏன் கூக்குரலிட வேண்டும். 
2009இல் போர் முற்றுப் பெற்றபின் கடந்த 6 வருட கால தமிழர் அரசியலில் தமிழித் தேசியக்  கூட்டமைப்பு சாதித்த சாதனை என்ன?
எவ்வித தீர்வுப் பொதியும் இன்றி வெறும் கையுடன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப் போய் மூக்குடைபட்ட கூட்டமைப்பினர் தான் மீண்டும் வெறும் கையுடன் நல்லாட்சிக்காரர்களிடம் இரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றனர். 2016 இல் தீர்வு வரும் என்று தமிழ் மக்களை நம்புமாறும் கூறுகின்றனர். 
அரசியல் தீர்வு விடயத்தில் கூட்டமைப்பின் நம்பிக்கைக்குரிய நல்லாட்சிக் காரர்கள் “கிராம ராஜ்யம்” நோக்கி நகர்கின்றனர். 
கூட்டமைப்பினர் மௌனம் சாதிப்பது அவர்களின் இராஜதந்திர அரசியல் நகர்வின் அங்கமாக இருக்கலாம். ஆனால் கூட்டமைப்பினரின் தோல்வி கண்ட இராஜதந்திர நகர்வுகளில் தமிழ் மக்கள் எவ்வளவு காலத்திற்கு நம்பிக்கை வைத்து கண்மூடி மௌனிகளாக இருப்பது என்பதே கேள்வியாகும்.
மூடிய புத்தகமாக கூட்டமைப்பு கொண்டு நடத்துகின்ற அரசியல் பயணத்தில் திறந்த புத்தகமாக தமிழ் மக்கள் பேரவை உதயமாகியுள்ளது. 


தமிழ் மக்கள் பேரவையின் உதயம் தமிழர் அரசியலில் குறிப்பாக தமிழரசுக் கட்சி அரசியலில் பெரிதும் பேசப்படும் பொருளாக மாறியுள்ளது. இவர்கள் ஏன் தமிழ் மக்கள் பேரவை குறித்து அச்சமடைய வேண்டும்.

தமிழ் மக்கள் பேரவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்துவதற்காக் சிதைப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு என்று ஏன் கூக்குரலிட வேண்டும். 
உண்மையிலேயே 2009இல் போர் முற்றுப் பெற்றபின் கடந்த 6 வருட கால தமிழர் அரசியலில் தமிழித் தேசிய கூட்டமைப்பு சாதித்த சாதனை என்ன?

உண்மையில் கூட்டமைப்பு சாதித்திருந்தால் இதுவரை மாற்றுக் கருத்துக்கள் மட்டுமே தமிழ் மக்கள் மத்தியில் உலவிய  நிலையில் அந்த மாற்றுக் கருத்துக்கள் தமிழ் மக்கள் பேரவை என்ற குழந்தையாகப் பிரசவித்திருக்காது. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ காலத்தில் 11 முறை இன விவகாரத் தீர்வு  குறித்து பேச்சுவார்த்தை நடத்தியது. 
இந்த 11 சுற்றுப் பேச்சுவார்த்தையில் என்ன பேசப்பட்டது என்பது குறித்து அரசாங்கத் தரப்பும், கூட்டமைப்பும் வெளிப்படையான தன்மையுடன் பேச முன்வரவில்லை. 

தமிழ் மக்களுக்குப் பொறுப்புக் கூறும் தார்மீகக் கடமைப்பாட்டைக் கொண்டுள்ள கூட்டமைப்பு கூட 11 சுற்றுப் பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது?  தீர்வு தொடர்பாக கூட்டமைப்பு முன்வைத்த தீர்வுத்திட்டம் என்ன? அரசாங்கத்தரப்பு இன விவகாரத் தீர்வு குறித்து முன்மொழிந்த யோசனைகள் என்ன? என்பன போன்ற விடயங்களைத் தமிழ் மக்களின் முன்வைப்பதற்கு முன் வரவில்லை.

இறுதியாக கூட்டமைப்பு நடத்திய ஊடக மகாநாட்டில் பேச்சுவார்த்தை ஒரு அங்குலம் தானும் நகரவில்லை என்ற செய்தி தெரிவிக்கப்பட்டது. அப்படியானால் ஒரு அங்குலம் கூட நகராத நிலையில் இனவிவகாரத் தீர்வு குறித்து அரசாங்கத் தரப்புடன் 11 சுற்றுப் பேச்சுவார்த்தையில் என்னதான் பேசப்பட்டது என்பது குறித்து வினா எழுப்புவதற்கு தமிழ் மக்களுக்கு உரிமை இல்லையா? 

தமது தலைவிதியையே தீர்மானிக்கும் ஒரு பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது என்பது குறித்து தெரியாமலே தமிழ் மக்கள் இரண்டாவது முறையும் கூட்டமைப்பினரை நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்து அனுப்பினர்.
இன்று மீண்டும் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்துவதாகவும் 2016 இன விவகாரத் தீர்வில் ஒரு திருப்பு முனையாக அமையும் என்றும் கூட்டமைப்பினரில் குறிப்பாக, தமிழரசுக் கட்சி சார்ந்தோர் ஆரூடமாகத் தெரிவித்து வருகின்றனர்.

இன விவகாரத் தீர்வுக்கென கூட்டமைப்பு முன்வைக்கப் போகின்ற அல்லது தற்போதைய பேச்சுவார்த்தையில் அரச தரப்பிடம் முன்வைத்துள்ள தீர்வு யோசனைகள் என்ன என்பது குறித்து 2016ல் தீர்வு வரும் எனக் கூறும் சம்பந்தன் ஐயாவோ அல்லது கூட்டமைப்பு காரர்களோ வெளிப்படையாக பேச முன்வரவில்லை. மீண்டும் இன விவகாரத்துக்கான தீர்வினை மூடு மந்திரமாக வைத்துக் கொண்டு கூட்டமைப்பினர்  தமிழ் மக்களுக்குக் கண்ணாமூச்சி விளையாட்டுக் காட்டுகின்றனர்.

கூட்டமைப்பினர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பெறுபேறுகள் குறித்து இரு தரப்பினருமே மௌனம் காத்த போதும் பேச்சுவார்த்தையின் ஆரம்பத்தில் என்ன பேசப்பட்டது என்பது குறித்து ஊடகங்கள் அறிந்தே இருந்தன.

அதாவது பேச்சுவார்தையின் ஆரம்பத்திலேயே அரசாங்கத்தரப்பு அதிகாரப் பரவலாக்கம் குறித்து பேசுவதற்கு ஒன்றும் இல்லை. கிராம சபைக்கு அப்பால் அதிகாரப் பகிர்வு குறித்து சிந்திக்கும் நிலையில் அரச தரப்பு இல்லை என்ற ஏடு தொடக்கத்துடனேயே பேச்சுவார்த்தையை அரசாங்கத் தரப்பு ஆரம்பித்திருந்தது என்பது வெளிச்சத்துக்கு வந்தது.

பேச்சுவார்த்தையின் ஆரம்பமே கோணலான பின் கூட்டமைப்பினர் மஹிந்த அரசாங்கத் தரப்புடன் 11 சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடாத்துவதற்கு என்ன இருந்தது, எதைப்பற்றியெல்லாம் கூட்டமைப்பினர் அரச தரப்பிடம் பேசினர் என்பது இன்றும் மர்மமாகவே உள்ளது. 

இன விவகாரத் தீர்வுக்கான பொதியினை முன்வைக்குமாறு தமிழ்ச் சமூகத்தின் பல்வேறு மட்டங்களில் இருந்தும் கோரிக்கை விடுத்த போதும் கூட்டமைப்பினர் இன்று வரை செவி சாய்ப்பவர்களாகத் தெரியவில்லை. எவ்வித தீர்வுப் பொதியும் இன்றி வெறும் கையுடன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப் போய் மூக்குடைபட்ட கூட்டமைப்பினர் தான் மீண்டும் வெறும் கையுடன் நல்லாட்சிக்காரர்களிடம் இரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றனர். 2016 இல் தீர்வு வரும் என்று தமிழ் மக்களை நம்புமாறும் கூறுகின்றனர். 

கூட்டமைப்பினர் நல்லாட்சிக்காரர்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கை, நல்லாட்சிக் காரர்கள் வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தும் தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தில் வெளிச்சமாகின. இதனை தமிழ் மக்கள் நன்கறிவர். 
தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் நடைபெற்ற கண்துடைப்புக்கள், வாக்குறுதி மீறல்கள் கண்முன் நிற்கின்றன. இவ்வேளையில் தான் அரசியல் தீர்வு விடயத்தில் கூட்டமைப்பின் நம்பிக்கைக்குரிய நல்லாட்சிக் காரர்கள் “கிராம ராஜ்யம்” நோக்கி நகர்கின்றனர். 

முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச காலத்தில் பேசப்பட்ட கிராமிய ராஜ்யம், சந்திரிக்கா அம்மையார் காலத்தில் இந்தியாவின் முன்னாள் அமைச்சரான மணிசங்க ஐயர் மூலம் முன் மொழியப்பட்ட கிரா ராஜ்யம் எனும் விடயத்தைத் தான் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசாங்கமும் கூட்டமைப்பிற்கு முன்மொழிந்தது.

நல்லாட்சியில் அரசியலமைப்பு பேரவை உருவாக்கப்படப் போவதாகப் பேசப்படும் இவ்வேளையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கிராம ராஜ்யம் குறித்த நடைமுறைச் செயற்பாட்டில் இறங்கியுள்ளார்.

சிங்களத் தலைமைகளுக்கு அதிகாரப் பரவலாக்கம் என்பது கிராம ராஜ்யம் என்பது தான் அர்த்தம். மாகாண சபைகளுக்கான நிதி அதிகாரங்களைப் பிடுங்கிய நல்லாட்சி அரசாங்கம் அதிகாரப் பகிர்வினை மாகாண சபையில் இருந்து கிராம ராஜ்யத்தினை நோக்கி இழுத்துச் செல்ல முற்படுகின்றது.

கூட்டமைப்பினர் இனவிவகாரத்துக்கான தீர்வு வரும் 2016ஆம் ஆண்டு தீர்க்கமானதான ஆண்டாக அமையும் என தமிழ் மக்களை நம்புமாறு கூற மறுபக்கம் கூட்டமைப்பின் நம்பிக்கைக்குப் பாத்திரமான நல்லாட்சிக்காரர்கள் சிங்களத்தலைமைகளின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப காய்களை நகர்த்திக்கொண்டிருக்கின்றனர். 

இன்றைய இந்த நிலை குறித்து கூட்டமைப்பினர் மௌனம் சாதிப்பது அவர்களின் இராஜதந்திர அரசியல் நகர்வின் அங்கமாக இருக்கலாம். ஆனால் கூட்டமைப்பினரின் தோல்வி கண்ட இராஜதந்திர நகர்வுகளில் தமிழ் மக்கள் எவ்வளவு காலத்திற்கு நம்பிக்கை வைத்து கண்மூடி மௌனிகளாக இருப்பது என்பதே கேள்வியாகும்.

எனவே தான் மூடிய புத்தகமாக கூட்டமைப்பு கொண்டு நடத்துகின்ற அரசியல் பயணத்தில் திறந்த புத்தகமாக தமிழ் மக்கள் பேரவை உதயமாகியுள்ளது. 

இன்றைய தமிழகத்தில் திராவிடக்கட்சிகளின் துரோகத்தனங்களாலும் காங்கிரஸ் கட்சியின் ஏமாற்றுத்தனங்களாலும் வெறுத்துப்போன தமிழ் மக்கள் வீதிக்கு வந்து சகாயத்தைக் கூப்பிடுகின்றார்கள் என்றால் இதன் அர்த்தம் என்ன? இன்றைய அரசியல் களத்தில் நிற்கும் அரசியல் வாதிகள் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்றுதான் அர்த்தம். அரசியலில் சூனியம் நிலை கொண்டுள்ளது என்பது தான் அர்த்தமாகும்.

சகாயத்தின் மீதான கவர்ச்சி அல்ல, ஒரு புதிய அரசியல் மாற்றத்திற்கான பசியே தமிழக மக்களை வாட்டி எடுக்கின்றது.  முடிந்தால் அந்த பசியை போக்க மக்களுக்கு ஏற்ற செயல் திட்டங்களுடன் நல்ல தலைமையோடும் மக்களைச் சந்தியுங்கள்; இல்லையேல் வாயை மூடிக்கொண்டிருங்கள்! என்று தமிழக “த இந்து” நாளிதழில் சமஸ் தமிழக அரசியல் வாதிகளை நோக்கி தமிழக மக்கள் சார்பில் சுட்டு விரலை நீட்டியுள்ளார்.

சமஸின் வார்த்தைகள் தமிழகத்திற்கு மாத்திரமல்ல இலங்கையில் உள்ள வடக்கு, கிழக்கு, மலையகம் என சகல தமிழ்த் தலைமைத்துவங்களுக்கும் பொருந்தும். கூட்டமைப்பும் இதற்கு விதிவிலக்கல்ல.

தமிழ் மக்கள் பேரவை குறித்த உங்களின் விமர்சனங்கள், கண்டனங்களைத் தூர தள்ளி வையுங்கள், குறிப்பாக தமிழ் மக்கள் பேரவையின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள வடமாகாண முதலமைச்சர் மீதான வசைபாடுதலையும் சேறுவாரி இறைப்பதனையும் தயவுசெய்து நிறுத்திவிடுங்கள். அதே வேளையில் வசைபாடுவதற்கும், சேறுவாரி இறைப்பதற்கும் நீங்கள் தகுதியானவர்களா என்று சற்று சிந்தியுங்கள்.

தமிழ் மக்கள் பேரவையில் இருப்போரில் அரசியலில் தோற்றுப் போன ஒருசிலர் பற்றியே உங்களது கண்களுக்குத் தெரியலாம். ஆனால் அந்த அமைப்பு கூட்டமைப்பின் அரசியலால் தோற்றுப் போன ஒரு மக்கள் கூட்டத்தின் பிரதிநிதியாக நிற்பதை நீங்கள்  காணத் தவறுகிறீர்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடாத்துகின்ற அரசியல் என்பது தமிழீழ விடுதலைப் புலிகள் போட்ட பிச்சை. விடுதலைப் புலிகளே கோடும் போட்டு உங்கள் அரசியல் பயணத்திற்க்கான பாதையையும் அமைத்துக் கொடுத்தனர். இன்றும் கூட்டமைப்பினர் அதனை நினைவு கூருகின்றனர். ஆனால் அந்த தியாகிகளின் இன்றைய நிலைமை எவ்வாறு இருக்கின்றது என்பது குறித்து கூட்டமைப்பினர் கரிசனை கொண்டனரா?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம்…
1. இனவிவகாரத்திற்கான தீர்வுப் பொதி உள்ளதா?
2. போரினால் குடும்பத்தவர்களை இழந்த தலைவர்களினதும் அவர்களது குடும்பத்தினரதும் வாழ்க்கையைக் கொண்டு நடத்த ஏதுவான திட்டங்கள் கூட்டமைப்பினரிடம் உள்ளதா?
3. பெற்றோரை இழந்த பிள்ளைகளின் எதிர்காலத்திட்டங்கள் ஏதும் உள்ளதா?
4. போரினால் அவயங்களை இழந்த சிறுவர், சிறுமியர் குறித்து திட்டங்கள் உள்ளனவா?
5. போரினால் ஊனமாகிப் போனவர்களின் வாழ்க்கையைக் கொண்டு நடத்த ஏதுவான திட்டங்கள் உள்ளனவா?
6. பெண் போராளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் திட்டங்கள் உள்ளனவா?
7. போரினால் சீரழிந்து போன வடக்கு கிழக்கை மீளக் கட்டியெழுப்ப எவ்வளவு பணம் தேவை. அது குறித்து கூட்டமைப்பு மதிப்பீடு செய்துள்ளதா?

8. போர் முற்றுப்பெற்ற 2009ஆம் ஆண்டுக்குப் பிறகான கடந்த 6 ஆண்டு காலத்தில் அவசர அவசியமாக மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் குறித்து கூட்டமைப்பு கவனம் செலுத்தியதா?

ஆம் மேற்கூறியது போன்ற பல விடயங்களில் கூட்டமைப்பு கவனம் செலுத்தியது. அதன் பெறுபேறு இது தான் என்று கூட்டமைப்பு முன் வைக்குமாக இருந்தால் கூட்டமைப்பு கூறுவது போன்று தமிழ் மக்கள் பேரவை தேவையில்லைதான்.
ஆனால் கூட்டமைப்பால் இந்த கேள்விகளுக்கான பதிலைக் கூற இயலாது. 
அப்படியானால் தமிழ் மக்கள் பேரவை இன்றைய காலத்தில் தேவை என்பதை கூட்டமைப்பினர் ஏற்றுக் கொள்வர். 

அந்தவகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற மாபெரும் அரசியல் சக்திக்கு சமாந்தரமாக தமிழ் மக்கள் பேரவையும் பயணிப்பது காலத்தின் தேவையாகும். 
மொத்தத்;தில் முரண்பாடுகளையும் வசைபாடுதல்களையயும்  துடைத்தெறிந்துவிட்டு ஒட்டுமொத்த தமிழ் மக்களின் நலன் கருதி கூட்டமைப்பும், தமிழ் மக்கள் பேரவையும் கைக்கோர்த்துப் பயணிப்பதே சிறந்தது.

வீ.தேவராஜ்
நன்றி: தமிழ்த்தந்தி (வாரமலர்)
27-12-2015