சாதாரண மழை-வெள்ளத்தினை கையாளத் தெரியாத அரசு அணு உலை விபத்தென்றால் என்ன செய்யும்?

சாதாரண மழை-வெள்ளத்தினை கையாளத் தெரியாத அரசு அணு உலை விபத்தென்றால் என்ன செய்யும்?... செம்பரம்பாக்கம் ஏரியை நடுஇரவில் யாருக்கும் சொல்லாமல் திறந்துவிட்டு நம்மை அழித்தது போல, அணு உலை பிரச்சனை என்றால் சொல்லிக்கொள்ளாமல் ஊரைவிட்டு வெளியேறி ஓடிவிடும்,
வெள்ளம் என்றாலாவது பரவாயில்லை, தண்ணீரை கண்ணால் காணமுடியும், கதிர்வீச்சினை எப்படி காணமுடியும், அனைவரும் கதிரியக்கத்தில் மூச்சற்று வீழ்வோம். குழந்தைகள் புற்றுநோயோடு போராடிச் சாகும், பிறக்கும் குழந்தைகள் குறைகளோடு மனிதனைப் போலல்லாமல் பிறக்கும், ஆனால் எந்த முதலமைச்சரும், முன்னாள் முதலமைச்சரும், எதிர்கட்சி தலைவரும், முதலமைச்சருக்கு ரிசர்வேசன் செய்தவரின் குழந்தைகளும் பாதிப்பிற்குள்ளாகாமல் ஊரைவிட்டு வெளியேறிச் சென்றிருக்கும் .. இந்த அரசியல்-அதிகாரிகளை நம்பி நாம் எப்படி நம் சந்ததிகளை விட்டுச் செல்லமுடியும்.
இந்நிலையில் தோழர் முகிலன் முன்னெடுத்திருக்கும் போராட்டம் முக்கியமானது, வரலாற்று முக்கியத்துவம் பெற்றது. மறக்காமல், தவிர்க்காமல் நம் சந்ததியினருக்காகவும் போராட்டத்தினை நடத்தும் முகிலனுக்கு துணை நிற்க , பின்வரும், அவரது போராட்ட கோரிக்கைகளை அவசியம் வாசியுங்கள்.


அணு உலை எதிர்ப்பு போராட்ட குழிவின் தலைவர்களில் ஒருவரான தோழர்.மு்கிலன் Mugilan Swamiyathal இடிந்தகரை மக்கள் மற்றும் இதர போராடும் தோழர்கள் மீது தமிழக அரசு தொடுத்துள்ள 132 பொய் வழக்குகளை திரும்பப் பெறக் கோரியும், அணு உலையை மூடவும், அணு உலை கழிவுகளை கூடன்குளத்திலியே வைத்திருப்பது, கூடுதல் அணு உலையை துவக்குவது என பல்வேறு மக்கள் விரோத நடவெடிக்கைகளை கண்டித்தும், அம்பலப்படுத்தியும் புதன்கிழமை காலையில் திருச்சி நீதிமன்றத்தில் சரணடைகிறார்.
இந்த கைது நடவெடிக்கை மூலம் அரசின் மக்கள்விரோத நடவெடிக்கைகளை மக்கள் கவனத்திற்கு கொண்டு செல்ல இயலும் என்கிற அரசியல் நோக்கில் கைதாகிறார்.
இதன் மூலம் அதிமுக அரசு நடத்திவரும் அடக்குமுறை, இந்திய அரசு செய்து வரும் அயோக்கியத்தன ஒப்பந்தங்கள், பெரிய ஆளும், ஆண்ட, எதிர்கட்சிகளின் கள்ள மெளனம் ஆகியவற்றினை அம்பலப்படுத்த கைதாகிறார்.
தேசத் துரோக வழக்கு, அரசுக்கு எதிரான யுத்தம் உள்ளிட்ட பல்வேறு பொய் வழக்குகளை அணு உலை எதிர்ப்பு போராட்ட குழு தலைவர்கள் மீது தமிழக அரசு சுமத்தி இருக்கிறது.
இடிந்தகரை-கூடன்குளம்-கூத்தன்குழி உள்ளிட்ட கிராம மக்கள் 1 லட்சம் பேர் மீதான பொய் வழக்குகளை பதிவு செய்து அவர்களை அன்றாடம் நீதிமன்றங்களுக்கு அலைக்கழித்து பழிவாங்கிக் கொண்டிருக்கிறது தமிழக அதிமுக அரசு.
கூடன்குளத்தில் முதல் அணு உலையில் இருந்து கடந்த மாதம் அணுக்கழிவு வெளியே எடுக்கப்பட்டு உள்ளது.
கடுமையான கதிர்வீச்சுள்ள தன்மையுள்ள 48,000 ஆண்டுகள் வைத்து அரசு மிக கவனமாக பாதுகாக்க வேண்டிய அணுக்கழிவு, இங்கு கூடங்குளம் அணுஉலை வளாகத்திலேயே தற்போது வைக்கப்பட்டு உள்ளது.
அணுக்கழிவின் கடும் பாதிப்புக்கு அஞ்சியே கர்நாடக அரசும், பாஜக-காங்கிரசு-அஇஅதிமுக-சிபிஎம் போன்ற அரசியல் கட்சிகளும், கர்நாடக மக்களும் கோலார் தங்கவயல் உட்பட கர்நாடகத்தில் எங்கேயும் இதை வைக்க விட மாட்டோம் என ஒன்றுபட்டு போராடி, கர்நாடகத்தில் இருந்து இரண்டே நாளில் இதை விரட்டி அடித்தனர். ஆனால் தமிழகத்தில் ஆளும் அஇஅதிமுக, ஆண்ட திமுக உட்பட யாரும் கூடன்குளம் அணுக்கழிவு இங்கு வைத்துள்ளதைப் பற்றி இதுவரை வாய் திறந்து கூட எதுவும் பேசவில்லை.
முதல்வராக உள்ள ஜெயலலிதாவின் பங்குதாரர் என நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தப்பட்ட வைகுண்டராசன் அவர்களின் வி.வி.மினரல் நிறுவனத்திற்கு, தாதுமணல் அள்ள 30 ஆண்டுகளுக்கு அணுசக்தி ஒழுங்காற்று வாரியத்தின் (AERB) சட்டத்திற்கு விரோதமாக, சுமார் 300 ஹெக்டேர் (சுமார் 756 ஏக்கர்) நிலத்தை 12-08-2011 அன்று வழங்கிய தமிழக அரசின் அனுமதியை உடனே ரத்து செய்யக் கோரியும்
கூடன்குளத்தில் 3,4,5,6 எனத் தொடர்ந்து இந்திய அரசு அணு உலைப் பூங்கா அமைக்க திட்டமிட்டு உள்ளதை கைவிடக் கோரி தமிழக அரசு அழுத்தம் கொடுக்க கோரியும்….
இப்போராட்டத்தினை தோழர் முகிலன் முன்னெடுக்கிறார். அவர் மீது சுமத்தப்பட்டுள்ள பொய்வழக்குகளின் அடைப்படையில் தமிழக அரசு அவரை சிறையில் அடைக்கச் செய்யும். அவரது சிறைவாசம் என்பது மக்கள் நலக் கோரிக்கைக்காக முன்னெடுக்கப்படும் போராட்டமே. இதில் நாம் பங்கெடுப்பது அவசியம். தமிழக அதிமுக அரசிற்கு அழுத்தம் கொடுப்பதுவும், திமுக, காங்கிரஸ், பாஜக, சிபிஎம் போன்ற கட்சிகளின் துரோகத்தினை அம்பலப்படுத்தியும் நாம் போராட தயாராவது அவசியம்.
அணு உலைகள் தமிழகத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும். கடந்த 5 வருடங்களாக போராடிவரும் இடிந்தகரை மக்களின் நியாயமான கோரிக்கைக்கு நாம் ஆதரவளித்து அவர்கள் குரலை வலுப்படுத்துவது நமது சந்ததியினரை காப்பதற்கு ஒப்பானதாகும்.
தோழர் முகிலன் உள்ளிட்டவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெருவதும், அணு உலையை இழுத்து மூடுவதும், சட்டவிரோத ஒப்பந்தங்களை ரத்து செய்வதும் என அனைத்து கோரிக்கைகளுக்கும் நமது ஆதரவினை வழங்கி போராட்டத்தினை வலுப்படுத்துவோம்.
தோழர்.முகிலன் முன்வைத்த கோரிக்கைகளை பரவலாக எடுத்துச் செல்வோம். அதுவே அவரது போராட்டத்திற்கு நாம் செய்யும் முதல் கட்ட ஆதரவு.
சென்னையின் நீர் நிலைகளைப் பற்றியோ, பொருளாதாரக் கொள்கைகளைப் பற்றியோ கவலைப்படாத நமக்கு மழை ஒரு எச்சரிக்கை மட்டும் கொடுத்துச் சென்றிருக்கிறது. ஆனால் அணு உலைகள் எச்சரிக்கையை கொடுக்காது, நீங்கா அழிவினை கொடுக்கும். இதை மனதில் வைத்து அனைவரும் கைகோர்ப்போம்.

மக்களுக்காக சிறை செல்லும் தோழருக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழினம் காப்போம் வாருங்கள்
-மே பதினேழு இயக்கம்-