சுன்னாகம் நிலத்தடி நீரில் மலக்கிருமிகள்: இருவேறு நிலைப்பாடுகளால் மக்கள் குழப்பம் !


யாழ்/சுன்னாகம் நிலத்தடி நீரினை உபயோகிப்பது தொடர்பில் பல்வேறு தரப்பினரும் வெவ்வேறான நிலைப்பாடுகளை முன்வைத்து வருகின்றனர்.
நிலத்தடி நீரில் எண்ணெய் கலந்துள்ளதா, இல்லையா என்பது தொடர்பில் நிபுணர் குழுக்கள் முன்வைத்துள்ள இருவேறு நிலைப்பாடுகள் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுன்னாகம் நிலத்தடி நீரில் மலக்கிருமிகள்: இருவேறு நிலைப்பாடுகளால் மக்கள் குழப்பம்இந்நிலையில், யாழ். குடாநாட்டில் நிலத்தடி நீர் மாசடைந்துள்ளமை தொடர்பாக பாராளுமன்றத்தில் இன்று கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.
ஆய்வின் இறுதி அறிக்கையில் குடா நாட்டு நீர் பாவனைக்கு உகந்தது என்று ஆய்வாளர்களால் கூற முடியாதுள்ளதாகவும் நீர் மாதிரிகளில் மலக்கிருமிகள் அதிகம் காணப்படுவதாகக் கூறப்பட்டுள்ளதெனவும் ஈழமக்கள் ஜனநாயக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.

மேலும், இறுதி அறிக்கையின் பரிந்துரைகள் உரிய அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளனவா எனவும் இந்த ஆய்வறிக்கையும் முன்னாள் மத்திய அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கையும் ஒத்திசைவானதா எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.
இதேவேளை, சுன்னாகம் குடிநீர் பிரச்சினை தொடர்பில் அரசாங்கம் செயற்பாட்டுத்தன்மையுடன் உள்ளதைத் தான் உறுதி செய்வதாக நகர அபிவிருத்தி நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.
இந்த விடயத்துடன் மின்சக்தி வலு அமைச்சு, சுகாதார அமைச்சு, சுற்றாடல் அமைச்சு, வட மாகாண விவசாயத்துறை அமைச்சு என்பன தொடர்புபட்டிருப்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர் ரவூப் ஹக்கீம், ஆய்வின் முடிவில் 225 கிணறுகள் பாவனைக்கு ஒவ்வாத நிலையில் இருப்பதைக் கண்டறிந்ததாகவும் தெரிவித்தார்.
மேலும், அந்தக் கிணறுகள் உள்ள பகுதிகளுக்கு பவுஸர்கள் மூலம் நீர் விநியோகம் இடம்பெற்று வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

                                                                                                               நன்றி: நியூஸ் 1st தமிழ்