காணாமல் போனவர்கள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சியம் மற்றும் முறைப்பாட்டினை தெரிவித்துள்ளனர் !

காணாமலாக்கபப்ட்டவர்கள் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சியம் அளித்தவர்கள்.
காணாமற்போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழு உடுவில் மற்றும் தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவுகளுக்கான அமர்வை தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் இன்று நடத்தியது. இதில், காணாமற்போனோரின் உறவினர்கள் அளித்த சாட்சியங்கள்-விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளான பாப்பா, இளம்பரிதி, எழிலன், பாபு, ரூபன், வேலவன், தங்கன், லோரன்ஸ் ஆகியோருடன் எனது கணவர் உட்பட சுமார் 60 பேரை ஒரு பஸ்ஸில் இராணுவத்தினர் ஏற்றிச் செல்வதை அவதானித்தேன் என இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு காணாமற்போன விடுதலைப் புலிகளின் நிதித்துறைப் பொறுப்பாளரான மணிவண்ணன் என்று அழைக்கப்படும் சூசைப்பிள்ளை வரதராஜாவின் மனைவி சாந்தினி சாட்சியமளித்தார்.

ஆலய வீதியில் விளையாடிக்கொண்டிருந்த மகனை மோட்டார் சைக்கிளில் சிவில் உடையில் வந்தவர்கள் கடத்தி சென்று உள்ளதாக தாய் ஒருவர் சாட்சியம் அளித்துள்ளார்.
காணாமலாக்கப்பட்டவர்களை கண்டறிய உருவாக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஐந்தாவது நாள் விசாரணை அமர்வு செவ்வாய்கிழமை சங்கானை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. குறித்த சாட்சியமர்வில் சாட்சியம் அளிகையிலையே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் சாட்சியமளிக்கையில்,
எனது மகனான ஸ்ரிபன் ரெஜி (வயது 21) என்பவர் சங்கானை நிச்சாம் பிள்ளையார் கோவில் வீதியில் நண்பர்களுடன் 2008ம் ஆண்டு 7ம் மாதம் 8ம் திகதி விளையாடிக்கொண்டிருந்த வேளை மூன்று மோட்டார் சைக்கிளில் சிவில் உடையில் வந்த ஆறு பேர் மகனின் பெயரை கூறி அழைத்து மோட்டார் சைக்கிளில் ஏற்றி சென்றனர். அதன் பின்னர் மகன் தொடர்பிலான எந்த தகவலும் இல்லை என தெரிவித்தார்.
புலிகளின் நிர்வாக பிரிவு விஜிதரன்.
விடுதலைபுலிகளின் நிர்வாக பிரிவை சேர்ந்த விஜிதரன் எனப்படும் சி.ரவிச்சந்திரன் 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி பாதிரியார் பிரான்சிஸ் தலைமையில் சரணடைந்த விடுதலைபுலி களின் முக்கிய தளபதிகளுடன் சரணடைந்து இருந்தார். அதன் பின்னர் அவர் பற்றிய எந்த தகவல்களும் இல்லை என அவரது மனைவி அருள்மொழி சாட்சியம் அளித்துள்ளார்.

காணாமல் போன எனது தம்பியை இராணுவ முகாமில் கண்டேன்.
தனியார் வகுப்புக்கு சென்ற வேளை காணாமல் போன என் தம்பியை கலட்டி இராணுவ முகாமில் முகத்தில் காயத்துடன் கண்டேன் என சகோதரி சாட்சியம் அளித்துள்ளார். மேலும் சாட்சியத்தில் தெரிவிக்கையில், யாழில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்திற்கு சென்ற கந்தையா லதீஸ்வரன் (வயது 20) எனும் எனது தம்பி 2006ம் ஆண்டு 12ம் திகதி 22ம் திகதி காணாமல் போயிருந்தார்.

யாழ்.பல்கலை கழகத்தில் கல்வி கற்றுக்கொண்டு இருந்தேன். 2007ம் ஆண்டு 8ம் மாதம் 1ம் திகதி பல்கலைக்கழகத்திற்கு கலட்டி சந்தி வழியாக சென்ற போது , கலட்டி சந்தியில் இருந்த இராணுவ முகாமுக்குள் எனது தம்பி முகத்தில் காயத்துடன் நின்றதனை கண்டேன். என சாட்சியம் அளித்தார்.
மன்னார் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்ற சகோதரியை காணவில்லை.
விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்த வேளை முதுகில் காயம் ஏற்பட்டு மன்னார் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த எனது சகோதரியை காணவில்லை என சகோதரி ஒருவர் சாட்சியம் அளித்துள்ளார். மேலும் சாட்சியத்தில் தெரிவிக்கையில்,
எனது தங்கையான ரஞ்சிதா என்பவர் விடுதலை புலிகள் அமைப்பில் இருந்தார். இறுதியாக 2009ம் ஆண்டு 2ம் மாதம் 20ம் திகதி புதுக்குடியிருப்பு வள்ளி புனத்தில் கண்டேன்.
அதன் பின்னர் தொடர்பில்லை. பின்னர் நாம் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் வந்து வலயம் நான்கு முகாமில் இருந்தோம். அவ்வேளை அங்கு எம்மை கண்ட தம்பி ஒருவர் எனது சகோதரி முதுகில் காயம் ஏற்பட்ட நிலையில் மன்னார் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்ததை கண்டதாக தெரிவித்தார்.

நாம் முகாமை விட்டு வெளியே வந்து 2010ம் ஆண்டு 7ம் மாதம் மன்னார் வைத்திய சாலைக்கு சென்று விசாரித்தோம் எந்த தகவலும் இல்லை என சாட்சியம் அளித்தார். 
கணவனை வெள்ளை வானில் கடத்தினார்கள்.
மன்னார் பேசாலை சந்திக்கு அருகில் 2009ம் ஆண்டு 8ம் மாதம் 23ம் திகதி மோட்டார் சைக்கிளில் சென்ற எனது கணவரை வெள்ளை வானில் வந்தவர்கள் கடத்தி சென்றதாகவும், சில நிமிடங்களில் அப்பகுதிக்கு வந்தவர்கள் வீதியில் கிடந்த கணவரின் மோட்டார் சைக்கிளை எடுத்து சென்றதாகவும் , கண் கண்ட சாட்சியங்கள் எனக்கு தெரிவித்தன என மனைவி சாட்சியம் அளித்துள்ளார்.

கணவர் கடத்தப்பட்டு சில மாதங்களில் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்திய ஒருவர் கணவரை விடுவிக்க வேண்டுமாயின் 20 லட்சம் ரூபாய் பணத்தினை வங்கியில் வைப்பில் இடுமாறு கோரினார்கள்.
அதனை அடுத்து இரண்டு லட்சம் ரூபாய் வீதம் இரு தடவைகள் நான்கு லட்சம் ரூபாய் பணம் வைப்பிலிட்டேன். அதன் பின்னரும் கணவனை பற்றிய தகவல் இல்லாததால் மீண்டும் பணத்தை வைப்பிலிடவில்லை.
அதன் பின்னர் வீட்டுக்கு வந்த புலனாய்வாளர்கள் விசாரணை என்ற பெயரில் தொந்தரவு செய்ய தொடங்கினார்கள். அதனால் மன்னாரில் இருந்த சொந்த வீட்டை வாடகைக்கு கொடுத்து விட்டு யாழில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளேம்.

இந்நிலையில் கடந்த வருட இறுதியில் யாழ் நகர் பகுதியில் காணாமல் போனோரை கண்டறிய கோரி நடாத்தப்பட்ட போராட்டத்தில் எமது இரண்டாவது மகள் கலந்து கொண்டு இருந்தார்.
அதன் போது மகளை புகைப்படம் எடுத்து  இணையத்தளம் ஒன்று ஆவா குழு தலைவி என மகளின் கண்ணை மறைத்து வேறு ஒரு பெண்ணின் பெயருடன் வெளியிட்டு இருந்தது.
அதுவும் புலனாய்வாளர்களின் செயற்பாடாக தான் இருக்கும் என சந்தேகிக்கின்றேன் என தனது சாட்சியத்தில் தெரிவித்தார்.
கொழும்பில் கல்விகற்ற மகனை காணவில்லை.
கொழும்பில் கல்வி கற்று வந்த சி.சிவதிலீபன் (வயது 19) எனும் எமது மகனை 2008ம் ஆண்டு 9ம் மாதம் 15ம் திகதி முதல் காணாமல் போயுள்ளார்.
எமது மகனை மிரட்டி இராணுவத்தினர் அவருடன் தொடர்பினை வைத்து இருந்தார்கள் பியந்த மற்றும் மகேஷ் எனும் இராணுவ அதிகாரிகள் மகனுடன் தொடர்பில் இருந்தார்கள்.
மகன் காணாமல் போய் சில தினங்களில் எமது மகன் தங்கி கல்வி கற்று வந்த உறவினர் வீட்டுக்கு தொலைபேசியில் தொடர்பினை ஏற்படுத்திய மகேஷ் எனும் இராணுவ அதிகாரி இவ்வளவு நாளும் எம்முடன் தான் சிவதிலீபன் இருந்தார். 

தற்போது அவர் உங்கள் வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார் என கூறினார். ஆனால் எமது மகன் மீண்டும் அந்த உறவினர் வீட்டுக்கு செல்ல வில்லை என பெற்றோர் தெரிவித்தனர்.
தண்ணீர் குடிக்க கூட அனுமதிக்காது என் மகனை இராணுவம் இழுத்து சென்றது.
சுதுமலை ஆனைக்கோட்டையை சேர்ந்த நடராஜா சாந்தரூபன் (வயது 25) எனும் எனது மகன் யாழ்.தொழினுட்ப கல்லூரியில் கல்வி கற்று வந்தார்.
1996ம் ஆண்டு 11ம் மாதம் 21ம் திகதி எமது வீட்டுக்கு வந்த ஆனைக்கோட்டை கூழாவடி இராணுவ முகாமை சேர்ந்த ஜெகத்குமர எனும் இராணுவ அதிகாரியின் தலைமையில் வந்த இராணுவத்தினர் எனது மகனின் பெயரை கூறி எங்கே என கேட்டனர்.
அதன் போது எனது கணவர் மகன் தோட்டத்தில் வேலை செய்து கொண்டு இருக்கின்றார் அழைத்து வாறன் என கூறி சென்றார். கணவன் பின்னால் சென்ற இராணுவத்தினர் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த எனது மகனை பிடித்து வீட்டுக்கு இழுத்து வந்தனர்.
வீட்டுக்கு இழுந்து வந்து வீட்டு வாசலில் மகனை உட்கார வைத்து விட்டு எமது வீட்டை சுற்றி வளைத்து இராணுவத்தினர் தேடுதலை நடத்தினர்.
அதன் போது மகன் தோட்டத்தில் வேலை செய்த களைப்பால் தாகத்திற்கு என்னிடம் குடிக்க தண்ணீர் கேட்டார். தண்ணீரை குடிக்க கொடுக்க கொண்டு சென்ற போது இராணுவத்தினர் தண்ணீரை கொடுக்க விடாது தடுத்ததுடன் எனது மகனை பவளில் ஏற்றி சென்றனர்.
 

அதன் பின்னர் எனது கணவர் மகனை தேடி அலைந்து திரிந்து நோயுற்று காலமாகி விட்டார். என தனது சாட்சியத்தில் தாய் ஒருவர் குறிப்பிட்டார்.
ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளை மகனை கடத்தினார்கள்.
ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளை எமது வீட்டுக்கு சீருடையில் வந்த 15க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் வீட்டை சுற்றி வளைத்து எனது மகனை கைது செய்து கொண்டு சென்றனர் 
சுதுமலை தெற்கை சேர்ந்த தவராசா சதிஸ்குமார் எனும் எமது மகனை 1996ம் ஆண்டு 12ம் மாதம் 20ம் திகதி ஆனைக்கோட்டை கூழாவடி இராணுவ முகாமை சேர்ந்த ஜெகத் குமார எனும் இராணுவ அதிகாரியின் தலைமையிலான இராணுவத்தினரே மகனை கொண்டு சென்றனர். 
அன்றைய தினத்தின் பின்னர் மகனை பற்றிய எந்த தகவலும் இல்லை என பெற்றோர் தமது சாட்சியத்தில் குறிப்பிட்டனர்.

சனல் 4 வில் வெளியான புகைப்படத்தில் அண்ணா உயிரோடு இருக்கின்றார்

சனல் 4 வில் வெளியான புகைப்படத்தில் அண்ணா உயிரோடு இருக்கின்றார்


எனது அண்ணா உயிரோடு இருக்கும் புகைப்படம் சனல் 4 தொலைக்காட்சியில் வெளியானது என தங்கை சாட்சியம் அளித்துள்ளார். பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சியமர்வில் காணாமல் போன அண்ணன் தொடர்பில் சாட்சியம் அளிக்கையிலையே அவ்வாறு தெரிவித்தார்.


சாட்சியத்தில் மேலும் தெரிவிக்கையில்,  எனது அண்ணன் பே.பிரதீபன் விடுதலை புலிகள் அமைப்பில் 19 வருடங்களாக இருந்தவர். கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் 17ம் திகதி இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னர் காணாமல் போனார்.

அதன் பின்னர் கடந்த 2010ம் ஆண்டு சனல் 4 தொலைக்காட்சியில் இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டவர்கள் என ஒரு தொகுதியினர் கைகள் கட்டப்பட்ட நிலையில் தண்ணீர் இருக்கும் கிடங்கினுள் இருத்தி வைக்கப்பட்ட புகைப்படம் வெளியிடப்பட்டது. அந்த புகைபப்டத்தில் எனது அண்ணன் , வேறு உறவினர்கள் மற்றும் எமக்கு அறிமுகமானவர்கள் இருந்தனர்.

மற்றுமொரு புகைப்படத்தில் எமது உறவினர்களில் ஒருவரை இராணுவ அதிகாரிகள் அழைத்து வரும் புகைப்படம் வெளியானது. அதில் இராணுவ அதிகாரியினால் அழைத்து வரப்பட்ட உறவினர் அண்ணன் இருக்கும் புகைப்படத்தில் இருக்கின்றார்.


எனவே அந்த உறவினரை அழைத்து வரும் இராணுவ அதிகாரிகளை விசாரித்தால் அண்ணன் மற்றும் அண்ணா வுடன் புகைப்படத்தில் இருக்கும் ஏனையவர்களுக்கு என்ன நடந்தது என்பது தெரியவரும். அதனை தாமதிக்காது விசாரணை செய்து அண்ணாவை பற்றிய தகவல்களை கண்டறியுமாறு சகோதரி சாட்சியம் அளித்தார்.