சம்பந்தன் இயக்கத்தில் இரண்டு திரைப்படங்கள் 2016ம் ஆண்டில் - அ.ஈழம் சேகுவேரா!

2016ம் ஆண்டுக்குள் பிரவேசிப்பதற்கு இருப்பதோ இன்னும் ஏழு நாட்கள். காத்திருக்க அக்காலத்துக்குள் கால் புகுத்திவிடுவோம். வழமைபோன்று தென்னிந்திய தமிழ் சினிமாவில் கவனத்தை ஈர்க்கும் பெரிய நட்சத்திர அந்தஸ்து நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாக உள்ளநிலையிலும், ஈழத்தில் வெளியாகவுள்ள இரண்டு திரைப்படங்கள் மீதுதான் அனைவரினது பார்வையும் மையமிட்டுள்ளது. அவ்விரு திரைப்படங்கள் பற்றியே பலரும் இப்போது பேசிக்கொண்டிருக்கின்றார்கள்.  

‘கலர்புல்’ மற்றும் ‘பிளக் அன்ட் வையிட்’ என்று வெளியாகவுள்ள இரண்டு முழுநீள திரைப்படங்களினதும் கதை முன்னோட்டத்தில் முதலில்…





‘கலர்புல்’ திரைப்படத்தை பார்த்து விடுவோம். 

‘முன்னைய எல்லா ஆண்டுகளை விடவும், 2016ம் ஆண்டு தமிழ் மக்களுக்கு முக்கிய ஆண்டாகும்.’ 

தங்கத்தட்டில் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை வைத்து இரா.சம்பந்தனிடம் மைத்திரியும் ரணிலும் கூட்டாக நீட்டப்போகின்ற ஆண்டு. பீயோன் சுமந்திரன் கண்களில் ஆனந்தக்கண்ணீர் வடித்துக்கொண்டு சம்பந்தனுக்கு அருகில் நிற்க, அந்தத்தட்டை வாய் முழுக்கவும் சிரித்துக்கொண்டு சம்பந்தன் கையேந்தி வாங்கப்போகின்ற ஆண்டு. (தமிழினத்துக்காக அரசாங்கத்திடம் அவர் கையேந்தும் முதலாவது சந்தர்ப்பமாக இது அமையப்போகின்றது.)  

விடிய விடிய வான வெடிகளால் எல்லோருடைய தூக்கத்தையும் கெடுத்து, யாழ்ப்பாணத்தில் சி.வி.கே தலைமையிலும், கிளிநொச்சியில் சிறீதரன் தலைமையிலும், முல்லைத்தீவில் அன்ரனி ஜெகநாதன் தலைமையிலும், வவுனியாவில் சத்தியலிங்கம் தலைமையிலும், மன்னாரில் சாள்ஸ் தலைமையிலும், திருகோணமலையில் துரைரெட்ணசிங்கம் தலைமையிலும், மட்டக்களப்பில் அரியநேத்திரன் தலைமையிலும், அம்பாறையில் கலையரசன் தலைமையிலும் இலங்கை தமிழரசுக்கட்சியினர் அதகளப்படுத்தப்போகின்ற ஆண்டு. 

ஏ-9 சாலையின் இருமருங்கும் கட்சிக்கொடி பறக்க, மாவை.சேனாதிராசா திறந்தவெளி வாகனத்தில் கையை அசைத்தவாறு மட்டக்களப்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு பயணிக்கப்போகின்ற ஆண்டு. அவர் பயணிக்கும் வழி நெடுகிலும் தமிழரசுக்கட்சியின் ஆதரவாளர்கள் பெரும் கூட்டமாக திரண்டு வந்து, தமது கையைக்கிழித்து இரத்தத்தால் அவருக்கு மீண்டும் திலகம் வைக்கப்போகின்ற ஆண்டு. சந்து பொந்து ஓடை மூலை முடுக்கு என்று புரட்சிப்பாடல்களாலும், வெற்றிக்கோசங்களாலும் போவோர் வருவோரது காது ஜவ்வு கிழியப்போகின்ற ஆண்டு. 

க்ளைமாக்ஸ்:

இந்த வெற்றியில் தமக்கும் உரிமையுண்டு என்று, ரெலோவின் செல்வமும் அவரது கட்சியினரும் கெஞ்சப்போகின்ற ஆண்டு. ஐயகோ… உந்த வெற்றியில் எமக்கும் பங்கில்லையே என்று மனம் நொந்து, முதலமைச்சர் விக்னேஸ்வரனும், சுரேஸ் பிறேமச்சந்திரனும், சித்தார்த்தனும், கஜேந்திரகுமாரும் அவர்களது ஆதரவாளர்களும் கைகட்டி ஓரமாய் நின்று வேடிக்கைப்பார்க்கப்போகின்ற ஆண்டு. 

அடுத்து… இடைவேளையை எடுத்துக்கொள்ளாமல், ‘பிளக் அன்ட் வையிட்’ திரைப்படத்தையும் பார்த்து விடுவோம். 

‘2016ம் ஆண்டின் அரையாண்டுக்குள் முழுமையாகவோ அன்றி பகுதியாகவோ, உள்ளுராட்சிமன்றங்களுக்கான தேர்தல் நடத்தப்படும் என்ற உறுதியான அறிவிப்பு நிச்சயம் வெளியிடப்பட்டுவிடும்.’

அப்போது இரா.சம்பந்தன்:

‘பார்த்தீர்களா…? பார்த்தீர்களா…? நான் ஏலவே சொல்லியிருந்தேனே… 2016ம் ஆண்டு தமிழ் மக்களுக்கு முக்கியமான ஆண்டு என்று. அது இப்போது உறுதியாகிவிட்டது கண்டீர்களா…? ஆண்டின் முற்பகுதியிலேயே தேர்தல் ஒன்றை நடத்தி தமிழ் மக்களின் ஒற்றுமைக்கு இந்த அரசாங்கம் சவால் விட்டுப்பார்க்கின்றது. இந்த தேர்தலிலும் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் அரசாங்கத்தின் சதியை முறியடித்துக்காட்ட வேண்டும். 

இது எமக்கு முக்கியமான தேர்தல். சர்வதேசம் எங்களை உத்து உத்துப்பார்த்துக்கொண்டிருக்கிற இந்த நேரத்தில, தமிழ் மக்கள் வாக்குகளை சிதறடிக்காமல், பிளவுபடாமல் தங்கள் ஒற்றுமையை மிகப்பலமாக வெளிப்படுத்த வேண்டும். (ஆசன பங்கீட்டின் போது அவர்கள் மட்டும், தங்களுக்குள் சண்டையிட்டு கொள்வர். பின்னர் ஒருவாறு சமரசமாகி விடுவர். மறுபடியும் தேர்தல் பிரசாரத்தின்போது ஊர் ஊராய் ஒருவர் மீது ஒருவர் சேற்றை அள்ளிப்பூசுவர்.) 

இம்முறையும் தமிழ் மக்கள் தங்கள் ஆணையை கூட்டமைப்புக்குத்தான் வழங்க வேண்டும். நாங்கள் எங்கட பலத்தை சர்வதேச சமுகத்துக்கு நிரூபித்துக்காட்ட வேண்டும்.’ என்று மூச்சை தம் கட்டிக்கொண்டு நீட்டி முழங்குவார். 

அப்புறம் என்ன? கூச்ச நாச்சமின்றி பகுத்தறிவுமின்றி, தமிழ்ச்சமுகம் வாக்குகளை வாரி அள்ளி இறைத்துவிட்டு வரும். தேர்தல் வெற்றிக்குப்பின்னர்… 

கிராமங்களின் புழுதி தெருக்களில் சம்பந்தனதோ அவரது சகாக்களதோ கால்கள் பதியவேமாட்டுது. அரசாங்கத்தின் உரிமை மறுப்புகளுக்கு எதிராக சிவில் சமுக அமைப்புகள் ஒன்று ரெண்டு, அவ்வப்போது சில போராட்டங்களை நடத்தும். அந்த மக்கள் போராட்டங்களிலும் உவர்களின் தலைகளைக்காணக்கிடைக்காது. (மாவையர் மட்டும் போராட்ட ஏற்பாட்டாளர்களை முட்டித்தள்ளி கீழ வீழ்த்திப்போட்டு முன்னுக்கு வந்து மீடியாவுக்கு முகத்தைக்காட்டி, போராட்டத்தை தானே ஒழுங்குபடுத்தி நடத்தியதாக உரிமை கொண்டாடி பேட்டி கொடுப்பார்.)  

ஆண்டின் நடுப்பகுதியில் எங்காவது மாலை, மரியாதை, பொன்னாடை என்று நடத்தப்படும் விழாக்களில் எத்துப்பட்டு தட்டுப்பட்டு காணக்கிடைக்கும்போது, மெமரி பழுதில்லாத ஊடகவியலாளர்கள் சிலர்…

‘ஐயா… உந்த 2016ம் ஆண்டு தீர்வுத்திட்டம்?’

‘ஓ… அதுவா உந்தா வருது. பக்கத்தில வந்துகொண்டிருக்கு. அதுக்குள்ள என்ன அவசரம்? பொறுத்தனீயள். இன்னும் கொஞ்சநாளைக்கு பொறுத்திருங்கோவன். நல்லது நடக்கும். குழப்பிப்போடாதீயள். பார்ப்பம்’ என்பார். 

மறுபடியும் ஆண்டின் இறுதிப்பகுதியில், சூடு சொரணையுள்ள ஊடகவியலாளர்கள் சிலர்…

‘ஐயா… இப்பவாவது அந்த தீர்வுத்திட்டம்?’

(குரலை உசத்தி பெரிதாக சத்தம் போட்டு உருக்கி கதைத்தால், இனி எவனும் தன்னிடம் கேள்வி கேட்கமாட்டான் என்ற கோதாவோடு, குரலில் சட்டென அதிகாரத்தோரணையை எடுத்துக்கொண்டும், மனசுக்குள்ள பொருமிக்கொண்டும்…)

‘ஓம். சொல்லியிருந்தனாங்கள். உண்மைதான். இப்ப அதுக்கு என்ன செய்யச்சொல்லுறீயள்? எல்லா அரசாங்கங்களைப்போலவும் இந்த அரசாங்கத்தையும் நாங்கள் நம்பினம். அது எங்களின்ட நம்பிக்கை. அவ்வளவுதான். அவர்கள் ஏமாற்றியதுக்கு நாங்கள் என்ன பண்ண முடியும். ஆனபடியாலும் இன்னும் நாங்கள் அவர்கள நம்புறம். பேசி இன்னும் சில பல காரிய கருமங்கள ஆற்ற முடியும் எண்டு யோசிக்கிறம். தமிழ் மக்கள் தங்கட நம்பிக்கையை மட்டும் இழந்துவிடக்கூடாது. 2016இல் இல்லாவிட்டால் என்ன? 2017ம் ஆண்டு, 2018ம் ஆண்டு இருக்குது தானே? நம்புங்கள். கருமங்கள அவ்விதமாக ஆற்ற முடியும்.’ என்பார்.

க்ளைமாக்ஸ்:

உலகத்திலுள்ள மற்றைய எல்லா இன மக்களும் தமிழ் சமுகத்தின் வாக்களிப்பின் இலட்சணத்தைப்பார்த்து, ‘உந்த இனம் சோற்றை உண்கிறதா? இல்ல சோற்றின் கழிவை உண்கிறதா?’ என்று ஒருவரை ஒருவர் கேள்வி கேட்டு, தூத்தூன்னு மூணு எச்சில் காறி துப்பி முகத்தை சுழித்துக்கொள்வர். 

ஓடியன்ஸ் கொமன்ஸ்:

மிஸ்டர் ‘சாம்’ அண்ணே…
‘கலர்புல்’ திரைப்படம் ‘றீல்’ ஆனால், உந்த ‘பிளக் அன்ட் வையிட்’ திரைப்படம் ‘றியல்’ அண்ணே…

-அ.ஈழம் சேகுவேரா- 
கருத்துகள் மற்றும் பகிர்வுகளுக்கு: