பேரத்துக்கு விலைபோய் சலுகை அரசியலுக்கு அடிபணிந்து கூட்டமைப்பின் 14 எம்.பிக்கள் !

சம்பந்தனின் பேரத்துக்கு விலைபோய் சலுகை அரசியலுக்கு அடிபணிந்து கூட்டமைப்பின் 14 எம்.பிக்கள் பட்ஜெட்டுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
 
 
இலங்கை பாராளுமன்றத்தில் (19.12.2015) இன்று மாலை 6.00 மணியளவில் இறுதி வாக்கெடுப்புக்கு விடப்பட்ட 2016ம் வருடத்துக்கான வரவு-செலவுத்திட்டத்துக்கு ஆதரவாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி எம்.பிக்கள் செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், இருவரையும் தவிர மிகுதி 14 பேரும் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

வாக்கெடுப்புக்கு முன்னர், பாராளுமன்ற வளாகத்துக்குள் அமைந்துள்ள கட்சியின் காரியாலயத்தில் தனது கட்சி எம்.பிக்களை சந்தித்த திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன், பட்ஜெட்டுக்கு ஆதரவாக கட்டாயம் எல்லோரும் வாக்களிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார். 

அத்துடன் ‘உங்கட தேர்தல் தொகுதிகளில எத்தின வீட்டுத்திட்டம், கக்குஸ், பாலம், றோட்டு போட வேண்டும்’ என்ற விவரத்தை தாங்கோ. அத்தினையும் செய்து தரமுடியும்’ என்றும் பேரம் பேசியுள்ளார். சம்பந்தனின் இந்த பேரத்துக்கு விலைபோய் சலுகை அரசியலுக்கு அடிபணிந்து கூட்டமைப்பின் 14 எம்.பிக்களும் பட்ஜெட்டுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

‘வடக்கு கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இராணுவத்தை வெளியேற்றுமாறு கோரிவரும் தாங்கள், இலங்கை வரலாற்றில் என்றுமில்லாதவாறு பாதுகாப்புக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ள பட்ஜெட்டை எவ்வாறு ஆதரிக்க முடியும்?’ என்று, ஏற்கனவே இரண்டாம் சுற்று வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் பட்ஜெட்டை தவிர்த்திருந்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் இறுதி வாக்கெடுப்பிலும் அதே கொள்கையுடன் பட்ஜெட்டை தவிர்த்துள்ளார்.

இரண்டாம் சுற்று வாக்கெடுப்பின் போது பட்ஜெட்டை தவிர்த்திருந்த அக்கட்சியின் மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன், சம்பந்தனின் ஆசை வார்த்தைகளுக்கு மதிமயங்கி தனது கட்சியின் முடிவுக்கு மாறாக பட்ஜெட்டுக்கு ஆதரவாக இம்முறை வாக்களித்துள்ளார்.

அவரை வாக்களிக்கும் தமது முடிவுக்குள் கட்டுப்பட்டு இழுபட்டு வரச்செய்வதற்காக ஏற்கனவே சம்பந்தன், முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர் பதவியை சிவமோகனுக்கு வழங்கியிருந்தமையும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

ஆனால் இரண்டாம் சுற்றில் பட்ஜெட்டுக்கு ஆதரவாக வாக்களித்திருந்த ரெலோ கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய செல்வம் அடைக்கலநாதன், ‘இறுதிச்சுற்றில் பட்ஜெட்டுக்கு ஆதரவாக வாக்களிப்பதாக இருந்தால், அரசியல் கைதிகள் அனைவரையும் நிபந்தனையின்றி விடுதலை செய்தால் மாத்திரமே வாக்களிக்க முடியும்.’ என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
அவரையும் வாக்களிக்கும் தமது முடிவுக்குள் கட்டுப்பட்டு இழுபட்டு வரச்செய்வதற்காக வவுனியா மாவட்டத்தின் அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர் பதவியை சம்பந்தன் வழங்கியிருந்தார். ஆயினும் செல்வம் அடைக்கலநாதன் தமது கட்சியின் முடிவு எதுவோ அதன் பிரகாரம் பட்ஜெட்டை தவிர்த்துள்ளார்.

ஆனால் அக்கட்சியின் அம்பாறை மாவட்ட மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன், தனது கட்சியின் முடிவை மீறி பட்ஜெட்டுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கவனியாதோர் கவனத்துக்கு:

மகிந்த ராஜபக்ஸ சிறுபான்மை இன கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு சலுகைகள் மற்றும் பதவிகளை வழங்கி, அவர்களை தனது கட்சியின் பக்கம் இழுத்து எடுத்து அக்கட்சிகளை உடைத்து பலமிழக்கச்செய்ததைப்போன்றே, கூட்டமைப்புக்குள்ளும் இரா.சம்பந்தன் - சுமந்திரன் - மாவை கூட்டணி பிரித்தாளும் தரித்திரமாக செயல்பட்டு வருகின்றனர். 

அங்கத்துவக்கட்சிகளின் உறுப்பினர்களுக்கு பதவிகள் மற்றும் சலுகைகளை வழங்குவதாக ஆசை காட்டி, அவர்களை இலங்கை தமிழரசுக்கட்சியின் பக்கம் இழுத்து கூட்டமைப்பை பலமிழக்க செய்து தமிழரசுக்கட்சிக்கு ஆள்பிடித்து கட்சியை வளர்க்கும் சர்வாதிகாரப்போக்குடன் இவர்கள் செயல்படுவது எவ்வகையிலும் தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கப்போவதில்லை. கூட்டமைப்பின் ஒற்றுமையை சிதைக்க தங்களுக்கு தாங்களே குழிப்படுக்கை வெட்டிக்கொள்ளும் ஒரு செயல்பாடாகவே அது அமையப்போகின்றது எனலாம்.

ஏற்கனவே பொதுவேட்பாளராக களமிறக்கப்பட்ட வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ஐயாவையும், இலங்கை தமிழரசுக்கட்சியின் பக்கம் இழுப்பதற்கு (தனிக்கட்சி அரசியலுக்குள்) தூண்டில் போட்டு அவர் அதில் சிக்காதபடியாலேயே தற்போது சம்பந்தன் - சுமந்திரன் - மாவை கூட்டணிக்கும் முதலமைச்சர் ஐயாவுக்கும்  முறுகல்நிலைமை உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

தமிழரசுக்கட்சியின் இந்த சுயநலப்போக்குக்கு புத்திஜீவிகளும், சிவில் சமுகத்தினரும், புலம்பெயர் உறவுகளும் முற்றுப்புள்ளி வைத்து, பல ஆயிரம் போராளிகள் - மக்களின் தியாகங்களின் பலனாக உருவாகிய தமிழ் தேசியக்கூட்டமைப்பை அழிவின் பாதையிலிருந்து மீட்டெடுத்து புத்துயிர் கொடுக்க வேண்டும் என்பதே இழப்புகளை சந்தித்துள்ள மக்களின் பெருத்த எதிர்பார்ப்பாகும்.