அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் மாணவன் தற்கொலை !


அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி தற்கொலை செய்து கொண்ட மாணவன் ஊடகத்துறையில் ஏற்பட்ட விருப்பு காரணமாக உயர் தரத்தில் ஊடக கற்கையினை ஒரு பாடமாக தேர்வு செய்து கற்று வந்துள்ளான்.
கோப்பாய் வடக்கை சேர்ந்த இராஜேஸ்வரன் செந்தூரன் எனும் 18 வயதுடைய மாணவன் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என கோரி ஜனாதிபதிக்கு தனது பாடக்கொப்பியில் கடிதம் எழுதி வைத்து  விட்டு தற்கொலை செய்து கொண்டான்.
கோண்டாவில் புகையிரத நிலையத்திற்கு அருகில் காங்கேசன்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வியாழக்கிழமை(26) காலை வந்து கொண்டிருந்த புகையிரதத்திற்கு முன்பாக பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளான்.

குறித்த மாணவன் கொக்குவில் இந்துகல்லூரியில் க.பொ.த. உயர்தரத்தில் கலைத்துறையில் ஊடக கற்கை , தமிழ் மற்றும் புவியியல் ஆகிய பாடங்களை தேர்வு செய்து கற்று வந்துள்ளான். எதிர்வரும் (2016 ம் ஆண்டு )ஆகஸ்ட் மாதம் உயர்தர பரீட்சையில் தோற்றவுள்ளான்.
பாடசாலையில் மிக அமைதியாக தானும் தன் பாடும் என்று இருப்பான், நன்றாக படிப்பான், விளையாட்டுத் துறையிலும் ஈடுபாடு உள்ளவன். பெரிதாக நண்பர்கள் என்று சுற்றி திரிய மாட்டான். பாடசாலை வாறதும் போறதும் தான் தெரியும் அவ்வளவு அமைதியானவன்.என மாணவனுடன் கல்வி கற்ற சக மாணவர்கள் தெரிவித்தனர்.
கோப்பாய் வடக்கில் வாழைத்தோட்டங்களுக்கு  நடுவில் உள்ள சிறிய வீட்டில் 1997ம் ஆண்டு செப்டெம்பர் 18 ம் திகதி இரண்டு பெண் சகோதரிகளுக்கு பின்னர் பெற்றோருக்கு மூன்றாவது ஆண் மகனாக பிறந்தவனே செந்தூரன் எனும் இம் மாணவன் ஆவான். 
இந்த மாணவனுக்கு இரு அக்காக்களும் ஒரு தங்கையும் தம்பி ஒருவரும் உள்ளனர்  மாணவனின் தந்தையார் தோட்டவேலையில் ஈடுபடுபவர் .
வீட்டிலேயே அமைதியானவன், தம்பியார் சில வேளைகளில் தகப்பனுக்கு உதவியாக தோட்டத்திற்கு தண்ணீர் கட்ட போவான், இவன் பெரியளவில் போக மாட்டான், பெரும்பாலும் வீட்டு சாமி அறையினுள் இருந்து படித்துக்கொண்டு இருப்பான். வீட்டில் சகோதர்களுடன் மிக பாசமாக பழகுவான்.

ஊரிலும் நண்பர்கள் என்று பெரியளவில் சுற்றி திரிய மாட்டான். அருகில் உள்ள வாசியசாலைக்கு சென்று தினசரி பத்திரிகைகள், புத்தகங்கள் அனைத்தையும் வாசிப்பான்.
அரசியல் சம்பந்தமாக நண்பர்களுடன் விவாதிப்பது கதைப்பது இல்லை. நண்பர்களுடன் சகஜமாகவே பழகுவான். தனக்கு என சொந்தமா முகநூல் கணக்கு வைத்திருக்கின்றான். அதில் கூட அரசியல் சம்பந்தமாகவோ போராட்டங்கள் தொடர்பிலான பதிவுகளே இட்டது கிடையாது அது தொடர்பான செய்திகளை பகிர்ந்ததும் இல்லை.
நேற்றைய தினம்(புதன் கிழமை) திருக்கார்த்திகை யை முன்னிட்டு அருகில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலில் பொங்கல் வழிபாடு நடைபெற்றது. அதன் போது கோயிலில் நின்றான். மாலை வீட்டில் வீட்டு தீபம் ஏற்றி சாதரணாமாகவே இருந்தான்.
நாட்டில் பிரச்சனை நடைபெற்ற போது சிறு வயது பையனாகவே இருந்தான்.யாழ் இடப்பெயர்வின் போது இவன் பிறக்கவே இல்லை.  யுத்தம் முடிவுக்கு வந்த போது அவனுக்கு 12 வயது. யுத்தத்தின் பாதிப்புக்கும் முகம் கொடுக்க வில்லை. மாணவனின் உறவினர்கள் எவரும் அரசியல் கைதிகளாகவும் இல்லை இவ்வாறு இருக்கையில் எவ்வாறு அவனுக்கு இவ்வாறன சிந்தனை வந்தது என்பது தெரியவில்லை. என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
மாணவன் தற்கொலை செய்ய முதல் எழுதிய அக் கடிதத்தில், அதிமேதகு ஜனாதிபதி மைத்திரி நல்லாட்சி அரசாங்கம் அனைத்து அரசியல் கைதிகளையும் புனர்வாழ்வு அளித்து உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
மேலும் ஒரு தமிழ் அரசியல் கைதிகளேனும் சிறையில் இருக்க முடியாது.இந்த அரசியல் கைதிகள் உடனடியாக விடுதலை செய்ய வேண்டியதன் அவசியம் எனக்கு புரிந்தும் கூட இந்த நல்லாட்சி அரசாங்கத்திற்கு இன்னமும் புரியவில்லையே என்பது எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கின்றது.என மாணவன் எழுதிய அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
அக் கடிதத்தில் உள்ள கையெழுத்து அவனுடையது தான் என உறவினர்கள் நண்பர்கள் கூறுகின்றனர்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்து கின்றோம் என பேச்சளவில் கூறும் அரசியல்வாதிகள் நாலு தொடக்கம் 8 மணித்தியாலங்கள் வரையில் உண்ணாவிரத போராட்டம் என்று கூறி போராட்டத்தை முன்னெடுத்து விட்டு ஊடகங்களுக்கு அறிக்கை விடுத்து கொண்டும், இருக்கையில் இந்த மாணவன் இவ்வாறன விபரீதமான முடிவு எடுத்துள்ளான்.
 
மாணவின் இறப்பின் மீது ஏறி அரசியல் செய்ய இந்த நேரம் பலர் தயாராகி இருப்பார்கள். வீர வசனங்கள் ,  அறிக்கைகளை இந்த நேரம் தாம் எழுதிக்கொண்டும் தம்மால் அவ்வாறு வீர ஆவேசமாக  எழுத முடியாதவர்கள் வேறு நபர்கள் மூலம் எழுதிக்கொண்டு இருப்பார்கள்.
அரசியல் வாதிகளின் இந்த நடவடிக்கைகளை பார்த்து நிச்சயம் நாளை இந்த மாணவனின் ஆத்மா கண்ணீர் சிந்தும்.
இந்த மாணவனின் ஆத்மா சாந்தியடைய மாணவின் கோரிக்கை நிறைவேற்றப்படவேண்டும். மாணவனின் கோரிக்கை நிறைவேற அனைவரும் இதய சுத்தியுடன் செயற்பட வேண்டும். மாணவனின் இறப்பில் தங்களுடைய அரசியல் சுயலாபத்தை தேட கூடாது.
நல்லாட்சி என கூறும் இந்த ஆட்சியாளர்கள் மாணவனின் கோரிக்கையை நிறைவேற்றுவார்களா ?

                                                                 **************** 
                                                 
                                                            தகவல்: குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக மயூரப்பிரியன்.