பிரித்தானிய அரசுக்கு தமிழ் மக்களால் கொடுக்கப்படும் நெருக்கடிகள் !!!

கடந்த அறுபது வருடங்களுக்கு மேலாக இலங்கையில் தமிழருக்கு எதிராக  சிறிலங்கா அரசாங்கங்களால் திட்ட மிட்ட முறையில் மேற்கொள்ளப்பட்டுவரும் இன அழிப்புக்கு எதிராக தமிழர் தரப்பு நீதி கேட்டு தாம் வாழும் நாடுகளில் போராடி வருகின்றார்கள்.
அந்த வகையில் பிரித்தானியாவில் பிரித்தானிய தமிழர் பேரவையினால் பெரும் மக்கள் போராட்டங்கள் தொடந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இப்போராட்டங்களின் ஒரு வடிவமாக பிரித்தானியாவில் தமிழர்கள் வாழ்கின்ற பிரதேசங்களின் தத்தமது பாராளுமன்ற உறுப்பினர்களை அப்பிரதேச மக்கள் தொடர்ச்சியாக சந்தித்துவருகின்றார்கள்.

இச் சந்திப்புக்களின் போது அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கூட்டத் தொடரின் 30 வது அமர்வில் அமெரிக்காவினால் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்ட பிரேரணையை இறுதியில் இலங்கையும் சூட்சுமமாக ஆதரித்தது. இப்பிரேரணையை முன்னெடுத்த நாடுகளில் பிரித்தானியாவும் ஒன்று. இப் பிரேரணையில் கூறப்பட்டுள்ள பொது நலவாய நாடுகளின் நீதிபதிகளும், வெளிநாட்டு நீதிபதிகளும் உள்ளிணைக்கப்படுகின்ற ஐ.நா. விசாரணை அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள விடயங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் இதில் சர்வதேசப் பொறிமுறை மற்றும் சர்வதேசக் கண்காணிப்பு என்பதும் மிகவும் குறைந்தபட்சமாகவே காணப்படுவதனால் இப் பிரேரணையை இலங்கை தனக்கு சாதகமாகப் பயன்படுத்த உள்ளது.


ஆகவே விசாரணையின் நம்பகத் தன்மையை உருவாக்குவதற்கு நீதியான விசாரணையை மேற்கொள்வதற்குரிய உள்நாட்டு, வெளிநாட்டு நீதிபதிகள், சட்டவாளர்கள், விசாரணையாளர்களை நியமிப்பதில் பிரித்தானியா பெரும் பங்கு வகிக்க வேண்டும். விசாரணையின் போது சாட்சிகளின் பாதுகாப்பும், அவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படாவண்ணம் இயல்பு நிலையில் தமது சாட்சிகள் வழங்கப்படவேண்டும் என்றும் தம் கோரிக்கைகளை மக்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முன்வைத்தார்கள்.

அத்துடன் வடகிழக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்றுதல். குறிப்பாக இலங்கையின் எண்பது வீதமான இராணுவம் யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியிலும் தமிழர் தாயகத்தில் தொடர்ந்து நிலை கொண்டிருப்பதால் இராணுவ நெருக்குவாரத்திற்குள் மீள் குடியேற முடியாமல் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் சிங்களக் குடியேற்றம், கட்டாயக் கருக்கலைப்பு, பாலியல் வன்முறைகள், உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் அபகரிக்கப்பட்டிருக்கும் நிலங்கள் இது அனைத்தையும் தடுத்து நிறுத்துவதற்கான கோரிக்கைகளை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தி வருகிறார்கள் பிரித்தானிய தமிழர் பேரவையினர்.
  
இந்த வகையில் Edmonton பிரதேச பாராளுமன்ற உறுப்பினர்  Kate Osamor MP அவர்களையும், Tooting பிரதேச பாராளுமன்ற உறுப்பினர்  Rt Hon Sadiq Khan MP  அவர்களையும், Wolverhampton N/E பிரதேச பாராளுமன்ற உறுப்பினர் Emma Reynolds MP அவர்களையும், Wolverhampton S/E பிரதேச பாராளுமன்ற உறுப்பினர் Rt Hon Pat Mcfadden அவர்களையும், East Ham பிரதேச பாராளுமன்ற உறுப்பினர் Rt Hon Stephen Timms MP அவர்களையும், Dartford  பிரதேச பாராளுமன்ற உறுப்பினர்  Gareth Johnson MP அவர்களையும்,  Ilford North பிரதேச பாராளுமன்ற உறுப்பினர்   Wes Streeting MP அவர்களையும், Aberdeen North பிரதேச பாராளுமன்ற உறுப்பினர் Kirsty Blackman அவர்களையும் நேரடியாகச் சந்தித்து தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தார்கள். தாங்கள் இதற்கு பிரித்தானிய பிரதமருடனும், வெளியுறவுச் செயலகத்துடனும் பேசி இக் கோரிக்கைகளுக்கு ஏற்ற சாதகமான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதி அளித்திருந்தார்கள்.

முன்னதாக அண்மையில் Wolverhampton South East பகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் Rt Hon Pat McFadden MP அவர்களையும், Harrow West பகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் Gareth Thomas MP அவர்களையும், Wimbledon பகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் Stephen  Hammond MP  அவர்களையும், Lewisham East பகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் Heidi Alexander MP  அவர்களையும் மற்றும் Milton Keynes  பகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் Mark Lancaster MP  அவர்களையும்  நேரடியாகச் சந்தித்து தமது கோரிக்கைகளை தெரியப்படுத்தியிருந்தனர். இதன்பொழுது மேற்படி பாராளுமன்ற உறுப்பினர்களும் தொடர்ச்சியாக தாம் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதிமொழி அளித்திருந்தனர்.

தொடர்ந்தும் ஏனைய பிரதேசங்களிலும் இச் சந்திப்புக்கள் இடம்பெறுவதால் மேலும் எம் உறவுகளின் ஒத்துழைப்புக்களையும் பிரித்தானிய தமிழர் பேரவையினர் வேண்டி நிற்கின்றனர்.