விக்கி – சுமந்திரன் முரண்பாடு உண்மையானதா? உள்நோக்கம் கொண்டதா?

சுமந்திரனின் அண்மைக்கால செயற்பாடுகளும், சொல்லாட்சிகளும் வெளியிடுகின்ற கருத்துக்களும் தமிழ் மக்களிடையே அதிருப்தியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதில் அவர் வடமாகாணசபையின் தீர்மானத்திற்கு எதிராகவும் முதலமைச்சருக்கு எதிராகவும் பகிரங்கமாக வெளியிட்ட கருத்துகள் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. வடமாகாண முதலமைச்சரும் சுமந்திரனுக்கு பகிரங்க கடிதம் மூலம் பதிலளிக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் தனது கருத்துக்களை நிதானமாகவும் தீர்க்கமாகவும் முன்வைத்துள்ளதாகவே படுகிறது. இருப்பினும் சில சந்தேகங்களும் எழத்தான் செய்கின்றன.


01. அரசியல் கைதிகளின் விடயத்தில் வடமாகாண முதலமைச்சரால் ஜனாதிபதியுடன் நேரடியாகத் தொடர்புகொள்ள முடிகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராலும் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவின் பேச்சாளராலும் முடியாமல் போனது ஏன்?

02. முதலமைச்சர் ஜனாதிபதியுடன் நெருக்கமாக இருக்கையில், கூட்டமைப்பின் தலைவரும், தமிழரசுக் கட்சியின் தலைவரும், அக்கட்சியின் வெளியுறவுச் செயலாளரும் பிரதமருடன் நெருக்கத்தைப் பேணிவருவதில் ஏதேனும் உள்நோக்கம் இருக்குமோ?

03.முதலமைச்சராக இருந்தாலும் சரி, சம்பந்தனாக இருந்தாலும் சரி, சுமந்திரனாக இருந்தாலும்சரி இவர்கள் வடக்கு-கிழக்குடன் நெருக்கடியான காலகட்டங்களில் நேரடியான தொடர்புகளைக் கொண்டவர்களாக இருந்ததில்லை. 
அண்மைக்காலங்களில் சம்பந்தரிடம் திணிக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையானது, இன்று அவரால் அடையாளப்படுத்தப்படும் அல்லது இறக்குமதி செய்யப்படும் நபர்களிடமும் கையளிக்கப்படும் நிலை தோன்றியுள்ளது. 

04.நெருக்கடியான காலகட்டங்களில் மக்களுடன் நின்று பல்வேறு தியாகங்களைச் செய்து இதய சுத்தியுடன் இனப்பிரச்சினைத் தீர்விற்காக உழைத்து வருபவர்கள் பல்வேறு காரணங்களுக்காக தனிமைப்படுத்தப்படுகின்றனர். கொழும்பிலிருந்து பல்வேறு காரணங்களுக்காக இறக்குமதி செய்யப்பட்டவர்கள் தலைமைப்பதவியில் அமர்த்தப்படுகின்றனர். அவர்களுக்கு சிங்களம் தெரியும், படித்தவர்கள் என்ற பொருத்தமற்ற காரணங்கள் கூறப்படுகின்றன. 

ஆனால் இங்கு தமிழ் மக்களும் தமிழ் மக்களுக்காகத் தொடர்ந்தும் போராடிவருபவர்களும் ஒன்றை தெளிவாகப் புரிந்துகொள்வது அவசியமாகும்.

05. முதலமைச்சருக்கும் சுமந்திரனுக்கும் இடையிலான விரிசல் உண்மையானதுதானா? அதேபோல் முதலமைச்சருக்கும் பிரதமருக்கும் இடையில் உள்ள ஊடலும் நியாயமானதும் நேர்மையானதுமானதா? கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடம் முதலமைச்சர் இவைகுறித்து கலந்துரையாடாதது ஏன்? கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் ஏகோபித்த முடிவின் பின்னரே தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்ததாகவும், அவர்களின் முயற்சியினாலேயே வெற்றிபெற்றதாகவும் ஒப்புக்கொள்ளும் முதல்வர் அவர்கள் தமது உள்ளக்கிடக்கையை கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளுடன் பகிர்ந்துகொள்ளாதது ஏன்?

06. அமைச்சர்கள் தெரிவில் தான் மிகவும் நிதானமாகவும் ஒவ்வொருவரைப் பற்றி தீர்க்கமாக யோசித்தே முடிவெடுத்ததாகவும் கூறும் முதல்வர் அவர்கள், தாம் தேர்தலில் போட்டியிட்ட இடம் யாழ்ப்பாணம் என்பதையும் அவர் தனது தேர்தல் தொகுதியைத் தவிர வேறெங்கும் செல்லவில்லை என்பதையும் மிகவும் எளிதாக மறந்துவிட்டார் போலும். அமைச்சர்களாக நியமனம் செய்தவர்களை அவர் ஒருமுறையேனும் பார்த்திருப்பாரா என்பதே சந்தேகம். இதில் பெரும்பான்மையோர் அரசியலுக்கே புதியவர்கள். இவ்வாறிருக்கையில் அவர்களது அரசியல் அனுபவத்தை வைத்தும் அவர்களின் சேவைகளைக் கருத்தில்கொண்டும் பதவி வழங்கியதாகக் கூறுவதை எவ்வாறு ஏற்றுக்கொள்வது?

07.முதலமைச்சருடன் சம்பந்தன், சுமந்திரன் மற்றும் மாவை ஆகியோர் முரண்படுவதாக வெளியுலகிற்குக் காட்டி இந்நால்வருமே இந்நாட்டின் பிரதான தேசிய கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியிடமும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியிடமும் தமிழர்களை அடகுவைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனரா என்ற கேள்வி அந்நால்வர்களின் நடவடிக்கைகளை உன்னிப்பாக அவதானிக்கும் எவருக்கும் இயல்பாக எழக்கூடியதே.

ஆசிரியர் முதலமைச்சர் மற்றும் அவரது மாணவர் சுமந்திரனுக்கிடையிலான விரிசலின் மூலம் தமிழரசுக்கட்சியின் உண்மையான முகம் வெளிப்பட்டுள்ளது என்பது மட்டும் உண்மை. அதாவது தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்படுமோ இல்லையோ அவர்கள் கொழும்பின் தயவில் தமிழர்களை தொடர்ந்தும் பிச்சைக்காரர்களாக அலைய விடப்போகிறார்களோ என்ற சந்தேகம் வலுவாக எழுகிறது.

-காலக்கணிப்பான்-