இலங்கையில் காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதற்கு தம்மாலான அனைத்து முயற்சிகளையும் செய்வதாக ஐ நா வல்லுநர் குழு தெரிவித்துள்ளனர்.
வலிந்து காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தும் ஐ நா அதிகாரிகள் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் தமது அமர்வுகளை வியாழக்கிழமை நடத்தினர்.
அவர்கள் யாழ்ப்பாணம் வந்திருந்தபோது, காணாமல் போனவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தினர்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய இடங்களில் அவர்களை சந்தித்த காணாமல் போனோவர்களின் உறவினர்கள், நீண்டகாலமாக தமக்கு இலங்கை அரச தரப்பினரிடமிருந்து எவ்விதமான ஆக்கபூர்வமான பதில்கள் கிடைக்கவில்லை எனக் கூறியுள்ளனர்.
அவர்களிடம் பேசிய ஐ நா அதிகாரிகள், அம்மக்களை கண்டறிவதற்கு ஐ நா தொடர்ந்து அனுசரணை வழங்கும் என உறுதியளித்துள்ளனர்.
நிறுவன ரீதியாக மக்கள் அடைந்துள்ள துன்பங்களுக்கு, உண்மைகளைக் கண்டறிந்து நீதியையும் இழப்பீடுகளையும் பெறுகின்ற மனித உரிமை பாதிக்கபட்ட மக்களுக்கு உண்டு என தாங்கள் உறுதியாக நம்புவதாகவும் ஐ நா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வட பகுதிக்கான பயணத்தை முடித்துக் கொண்ட ஐ நா குழுவினர், வெள்ளிக்கிழமை கிழக்குப் பகுதிக்கு செல்லவுள்ளனர்.
நன்றி: பிபிசி தமிழ்