வவுனியாவில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்ட ‘மாவீரர்நாள்’ !

ஈழ விடுதலைப்போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களையும், நாட்டுப்பற்றாளர்களையும் நினைவுகூர்ந்து, கார்த்திகை 27 அன்று வவுனியாவில் ‘மாவீரர்நாள்’ உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

வவுனியா பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில், வவுனியா சிந்தாமணிப்பிள்ளையார் ஆலய முன்றலில் நடைபெற்ற ‘மாவீரர்நாள்’ நிகழ்ச்சியில், மாலை 06 மணி 05 நிமிடத்துக்கு ஆலய மணி மூன்று முறை ஒலிக்க விடப்பட்டதைத்தொடர்ந்து, 

‘நவ 27’ என்று வடிவமைக்கப்பட்டிருந்த முதன்மைச்சுடரை அரசியல் கைதி ஒருவரின் தாயாரும், வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் ம.தியாகராசா, எம்.பி.நடராஜ், பிரஜைகள் குழுவின் தலைவர் கி.தேவராசா ஆகியோரும் ஏற்றினர். 

மெழுகுவர்த்திகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த தமிழர் தாயகத்தை குறிக்கும் தமிழீழ உருவப்படத்துக்கு, பிரஜைகள் குழுவின் செயலாளர் தி.நவராஜ், ஊடகப்பேச்சாளர் அ.ஈழம் சேகுவேரா, பொருளாளர் கோ.ராஜா ஆகியோருடன் இணைந்து நகரப்பகுதி இளைஞர்கள் ஒளி ஏற்றினர். 

மாவீரர்களின் தியாகங்களைக்கூறும் புரட்சிப்பாடல் ஒலித்து ஓய, மாவீரர்களுக்கு வீரவணக்கமும் செலுத்தப்பட்டது.