('உ+ம் புகைப்படம்) |
குடாநாட்டில் சட்டத்திற்கு மாறாக போலி மருந்தகங்கள், பற்சிகிச்சை, கண் சிகிச்சை நிலையங்கள் இயங்குவது தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை சுமத்திவந்த நிலையில், மேற்படி போலி மருந்தகங்கள், மற்றும் சிகிச்சை நிலையங்களை கண்டறிய கொழும்பிலிருந்து விசேட குழு யாழ்ப்பாணம் வரவுள்ளது.
மாவட்டத்தில் குறிப்பாக யாழ்.போதனா வைத்தியசாலை சுற்றாடலில் பல போலி மருந்தகங்கள் மற்றும் சிகிச்சை நிலையங்கள் உரிய அனுமதிகள் பெற்றுக் கொள்ளாமல் இயங்கிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக இவ்வாறான சிகிச்சை நிலையங்களில் மருத்துவர்கள் அல்லாத மருத்துவ உதவியாளர்கள், கைவினையாளர்கள் கூட சிகிச்சை வழங்கி வருகின்றமை தொடர்பிலும், மிகவும் போலியான மருத்துவப் பொருட்களை பயன்படுத்துகின்றமை தொடர்பிலும் கடந்த பல மாதங்களாக யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். குறிப்பாக ஒரு பற்சிகிச்சை நிலையத்தில் பல் கட்டும் பிரத்தியேக கம்பிக்குப் பதிலாக வேலி கட்டப் பயன்படுத்தப்படும் கட்டுக்கம்பி பயன்படுத்தப்பட்டமையினால் ஒருவர் பாதிக்கப்பட்டமை தொடர்பாகவும் வைத்தியர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு கொடுத்த போதும் நடவடிக்கை எவையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை. மருந்தகங்களில் பல அனுமதிப்பத்திரம் இல்லாமலும், மருந்தகங்கள் நடாத்துவதற்கா உள்ள சட்டவிதிமுறைகளை மீறியும் இயங்கி வருகின்றன. குறிப்பாக பெரும்பாலான மருந்தகங்களில் மருந்தாளர் இல்லாமலே இயங்கி வருகின்றது. இதுதவிர மருந்தாளர்களின் தரச் சான்றிதழ்களை மட்டும் பணம் கொடுத்து பெற்று மருந்தகங்களில் பார்வைக்கு வைக்கும் வழக்கமும் யாழ்ப்பாணத்தில் உள்ள மருந்தகங்களில் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. மருந்தாளர் இல்லாமலும், போதிய வசதிகள் இல்லாமலும் மருந்தகங்கள் இயங்கி வந்தால் அவை பொது மக்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும்.
எனவே இவ்வாறு சட்டவிதிமுறைகளை மீறி இயங்கும் மருந்தகங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அடுத்த டிசம்பர் மாதம் இரண்டாம் வாரமளவில் இவ்வாறான மருந்தகங்கள் மீதான ஆராய்வுகளை மேற்கொள்வதற்கு கொழும்பிலிருந்து விசேட குழு யாழ்ப்பாணம் வருகைதரவுள்ளது. இக் குழவினல் யாழ்ப்பாணத்தில் அனுமதிப்பத்திரம் இல்லாமலும், சட்ட விதிமுறைகளை மீறி நடாத்தப்படும் மருந்தகங்கள் மீதான நடவடிக்கை மேற்கொள்ளவுள்ள அதேவேளை, யாழ்ப்பாணத்தில் உள்ள சகல மருந்தக உரிமையாளர்களை அழைத்து சட்டவிதிமுறைகள் தொடர்பில் அறிவுறுத்தவும் உள்ளனர் என்றும் பணிமனைத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.