காணமல்போனவர்கள் மற்றும் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பான பதிவுகளை மேற்கொள்ளுமாறு பிரித்தானிய தமிழர் பேரவையின் அவசர கோரிக்கை!
இலங்கையில் இடம் பெற்ற கடத்தல் மற்றும் கைது சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் சேகரிக்கும் நடவடிக்கைகள் 09.11.2015 அன்று முதல் இலங்கைக்கு சென்றுள்ள “பலவந்தமாக கடத்தப்பட்டவர்கள் மற்றும் காணமல் போனவர்களுக்கான ஐ.நா குழுவினரால்" (WGEID) மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இலங்கை இராணுவத்தினராலும், துணை இராணுவக் குழுக்களினாலும் தமிழர்களுக்கு எதிராக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இவ்வாறான கைது மற்றும் கடத்தல் சம்பவங்களினால் காணமல் போனவர்கள் தொடர்பான தகவல்களை தேடி அறியும் முகமாகவும், அவர்களுக்கான பொறுப்புக் கூறும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முகமாகவும் இப் பதிவுகளை காலம் தாமதிக்காது மேற்கொள்ளுமாறு உள்நாட்டிலும், புலம்பெயர் தேசத்திலும் வாழும் எம் உறவுகளைக் கேட்டுக் கொள்கிறோம்.
இலங்கையில் புதிய அரசு ஆட்சிக்கு வந்த பின்பும் இவ்வாறான கடத்தல்களும் கைதுகளும் தொடர்ச்சியாக இடம் பெற்றுக் கொண்டு இருப்பதுடன், பல இளைஞர்களும் யுவதிகளும் இரகசிய தடுப்பு முகாம்களிலும், விசாரணைகள் எதுவுமின்றி சிறைச்சாலைகளிலும் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டு பல சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுக் கொண்டுள்ளனர். எனவே இவ்வாறு காணமல் மற்றும் கைது செயப்பட்டவர்களுக்கான நீதியைப் பெற்றுக் கொள்ளும்முகமாகவும், காலத்தின் தேவை கருதியும் இப் பதிவுகளை காலம் தாமதிக்காது மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.
அத்துடன் கீழிணைக்கப்பட்டுள்ள பத்திரத்தில் இப் பதிவுகளை மேற்கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்ட கால எல்லைக்குள் மட்டுமே இப் பதிவுகள் மேற்கொள்ளப்பட முடியும் என்பதால் கால தாமதமின்றி மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறோம். பாதிக்கப்பட்ட தாயகத்திலுள்ள உங்கள் உறவுகளுடன் உடனடியாகத் தொடர்பு கொண்டு இவ் விபரங்களைத் தெரியப்படுத்தி மேற்படி ஐ.நா குழுவினருடன் சந்திப்பை மேற்கொள்ளுமாறு கோரவும்.
இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கும், உதவிகளுக்கும் பிரித்தானிய தமிழர் பேரவையினரை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.
தொடர்புகளுக்கு: +44 (0)20 8808 0465
மின்னஞ்சல்: admin@tamilsforum. com
படிவம் தரவிறக்கம் PDF / DOC