கிணற்றில் தவறி விழுந்து நேற்று மரணமான மூத்த புகைப்பட ஊடகவியலாளர் கதிரவேல் ஐயாவின் இறுதிக்கிரியை இன்று அளவெட்டியில் உள்ள அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை(19) பிற்பகல் 2.00 மணியளவில் இடம்பெற்றன. இதையடுத்து அவரது பூதவுடல் அளவெட்டி மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. கதிரவேல் ஐயாவின் இறுதிக்கிரியைகளில் ஊடகத்துறை நண்பர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
ஊடகத்துறையில் 35 வருடங்களுக்கு மேலாக சேவையாற்றிய கதிரவேல் ஐயா தமிழராட்சி மாநாட்டு படுகொலை, மாவிட்டபுர ஆலய உட்பிரவேச போராட்டம் போன்ற பல நெருக்கடி சமயங்களிலும் கூட சிறந்த புகைப்பட ஊடகவியலாளராக செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பொலிஸாரின் தாக்குதலால் தனது ஒற்றைக்கண்ணின் பார்வையையும் இழந்த நிலையிலும் அவரது ஊடகப் பணி தொடர்ந்ததுடன் ஊடகத்துறையில் அவரது பங்களிப்புக்காக 2012ஆம் ஆண்டு கலாபூசணம் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.