கிளிநொச்சியில் மழையால் வீடுகள், வீதிகள் எங்கும் வெள்ளம் !

கிளிநொச்சியில் இன்று பிற்பகல் பெய்த கடும்மழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் தாழ் நிலங்களிலும் தற்காலிக வீடுகளிலும் குடியிருக்கும் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக கிளிநொச்சியின் பல பிரதேசங்களின் வீதி போக்குவரத்து பெரிதும் பாதிப்படைந்துள்ளது. பிரதான மற்றும் சிறு வீதிகளில் அதிகளவு வெள்ளம் பாய்வதனால் போக்குவரத்துச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  

இரண்டாம் இணைப்பு:
அத்தோடு வியாபார நிலையங்களுக்குள்ளும் வெள்ளம் புகுந்துள்ளது. அது மட்டுமன்றி கடந்த வாரம் நெல் விதைப்பில் ஈடுப்பட்டவர்களின் வயல் நிலங்களையும் வெள்ளம் ஊடறுத்து பாய்வதனால் சில இடங்களில் விதை நெல்லும் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இவ்வாறு தொடர்ச்சியாக மழை பெய்தால் வெள்ளப் பாதிப்புகள் மேலும் அதிகரிக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக கடந்த 6 வருட காலமாக தற்காலிக தறப்பாள் கொட்டகைகள் பழுதடைந்த நிலையிலும் நிரந்தர வீட்டுத்திட்டம் வழங்கும் அரச உயரதிகாரிகள், தொண்டு நிறுவனங்களின் புறக்கணிப்புக்களால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்தும் அவலங்களையே எதிர்நோக்கி அவலப்பட்டுக் கதிகலங்கி நிற்கிறார்கள். கிளிநொச்சியில் தற்போது மழை காலம் ஆரம்பிக்கப்பட்டு இடைக்கிடை மழை பெய்து வந்த நிலையில் இன்றைய தினம் மாலை 3.00 மணி முதல் பெருமழை தொடர்ச்சியாகப் பெய்து வருகின்றது. கிளிநொச்சியின் கிராம வீதிகள் பல வெள்ளத்தில் மூழ்கிக் காணப்படுகின்றன. தாழ் நிலக் கிராமங்களுக்குள் வெள்ளம் தேங்கி வெள்ளக் காடாகக் காட்சியளிக்கின்றது. வீட்டின் வெளியே வரமுடியாத அளவுக்குப் பெருமழை இடைவிடாது பொழிந்தவண்ணமேயுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் கடந்த 6 வருடகாலமாக பழுதடைந்த தற்காலிக தறப்பாள் கொட்டகைகளில் அவலப்படும் போரால் பாதிக்கப்பட்ட பெருமளவு குடும்பங்கள் அரசினதும் அரச உயரதிகாரிகளினதும் புறக்கணிப்புக் காரணமாக மழையால் பெரும் அவதிப்பட்டுள்ளார்கள்.