அரசியல் கைதிகள்’ எனும் சொல்ப்பிரயோகமே புழக்கத்தில் இல்லாதவாறு அனைத்து கைதிகளையும் விடுதலை செய்க!

‘அரசியல் கைதிகள்’ எனும் சொல்ப்பிரயோகமே புழக்கத்தில் இல்லாதவாறு அனைத்து கைதிகளையும் விடுதலை செய்க! -  ஜனாதிபதிக்கான மகஜரில் வவுனியா மாவட்ட சிவில் சமுக மனித உரிமை அமைப்புகளும், தொழில் சங்கங்களும் வலியுறுத்தல்.

அரசியல் கைதிகளின் கோரிக்கைகளுக்கு வலுச்சேர்க்கும் முகமாக, நேற்று (16.10.2015 வெள்ளிக்கிழமை அன்று) வவுனியா நகரசபை மைதானத்தில் காலை 7.00 மணியிலிருந்து மாலை 5.00 மணி வரை அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தை  ‘வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு’வின் ஒழுங்கமைப்பில், மாவட்ட சிவில் சமுக மனித உரிமை அமைப்புகளும், தொழில் சங்கங்களும் நடத்தியிருந்தன.

போராட்டத்தில் பெருந்திரளாக கலந்துகொண்டிருந்த மக்களிடம் கையொப்பம் பெறப்பட்டு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு,

அனைத்து அரசியல் கைதிகளுக்கும் நிபந்தனைகளின்றி, மகோன்னத சிந்தனையில் ‘பொதுமன்னிப்பு’ வழங்கி விடுதலை செய்து, அரசியல் கைதிகளின் குடும்பங்கள் மற்றும் அவர்களது பிள்ளைகளின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த உதவுமாறு கேட்டு, மாவட்டத்தின் சிவில் சமுக மனித உரிமை அமைப்புகளும் தொழில் சங்கங்களும் கூட்டாக கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளன. 

அந்த கோரிக்கை மனுவின் முழுவிவரமும் வருமாறு:


மாண்புமிகு மைத்திரிபால சிறிசேன அவர்கள்,
ஜனாதிபதி,
இலங்கை சனநாயக சோசலிச குடியரசு,
இலங்கை.
15.10.2015

ஜனாதிபதி அவர்களே! 

மகோன்னத சிந்தனையில் அரசியல் கைதிகளுக்கு ‘பொதுமன்னிப்பு’ வழங்கி விடுதலை செய்வீராக!

நாடு முழுக்கவும் உள்ள 14 சிறைச்சாலைகளில் தமது விடுதலையை வலியுறுத்தி சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துவரும் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளுக்கு வலுச்சேர்க்கும் முகமாக, 16.10.2015 வெள்ளிக்கிழமை இன்று வவுனியா நகரசபை மைதானத்தில் காலை 7.00 மணியிலிருந்து மாலை 5.00 மணிவரை அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தை ‘வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு’வின் ஒழுங்கமைப்பில், மாவட்ட சிவில் சமுக மனித உரிமை அமைப்புகளும், தொழில் சங்கங்களும், மக்களும், மக்கள் பிரதிநிதிகளுமாக இணைந்து நடத்திக்கொண்டிருக்கின்றோம். 

இலங்கையின் முன்னைய ஆட்சியாளர்களிடமும் சரி, தற்போதைய அதிபர் தங்களிடமும் சரி, தேர்தல்கள் மூலம் நாங்கள் தேர்ந்தெடுத்த அரசியல் பிரதிநிதிகளிடமும் சரி, ‘மலையை மத்தாகக்கொண்டு கடலை மோராகக் கடைந்து’ தரச்சொல்லி நாங்கள் பணிக்கவில்லை. குறைந்தபட்சம், எமது உறவுகளான தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறும், காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் பொறுப்புக்கூறுமாறும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள எமக்கு உரித்துடைய நிலங்களை விடுவித்து மீளக்குடியேற அனுமதிக்குமாறும் கோரிக்கை விடுத்தே வந்திருக்கிறோம்.

எமது மக்களின் நெஞ்சை அழுத்தும், குரல்வளையை நெரிக்கும் தவிர்க்க முடியாத இந்த சமகாலப்பிரச்சினைகளுக்கு உடனடித்தீர்வுகளைக்காண முன்னைய அரசுகளோ, அன்றி தாங்களோ இம்மியளவு தானும் அக்கறை காட்டாமல் இருப்பது, தங்களை ‘இன்றைய இலங்கை அதிபர்’ பதவியில் அமர்த்தியதில் கூடியளவு பங்களிப்பு வழங்கிய ‘பெரும் மக்கள் கூட்டத்தினர்’ என்ற வகையில் அதிருப்திகளையும், நம்பிக்கையீனங்களையும் உண்டு பண்ணியுள்ளது. இது தமிழ் - சிங்கள மக்களுக்கிடையே நல்லிணக்கத்துக்கான வாய்ப்புகளை அடித்துத்துரத்த தொடங்கியுள்ளது.  

இலங்கையில் வாழும் ஒவ்வொரு பிரஜைகளினதும் சுதந்திரத்துக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாகவும், இலங்கையிலுள்ள அனைத்து தேசியக்குடியினங்களாலும் நிராகரிக்கப்பட்டதாகவும் உள்ள ‘பயங்கரவாத தடைச்சட்டம்’ ‘அவசரகால தடைச்சட்டம்’, சிவில் சமுகத்துக்கும் பொது அமைதிக்கும் ஊறு செய்விக்கும் சவால் விடுவிக்கும் இந்தக்கொடுஞ்சட்டங்கள், இலங்கையில் இன மொழி சமய கலாசார வேறுபாடின்றி பல ஆயிரம் இளைஞர்கள் யுவதிகளின் எதிர்காலத்தை சூனியமாக்கியுள்ளது. 

‘எவ்விடத்திலும் எவ்வேளையிலும் யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம்’ என்ற நமட்டுத்துணிச்சலையும் அசட்டு அதிகாரத்தையும் கொடுக்கும் இந்தக்கொடுஞ்சட்டங்களை பயன்படுத்தி வஞ்சிக்கப்பட்ட பல ஆயிரம் இளைஞர்கள் யுவதிகள், பொலிஸாராலும் முப்படைகளாலும் சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்டு தடுப்புக்காவல்களுக்கும் சிறைக்கூடங்களுக்கும் கொண்டுசெல்லப்பட்டுள்ளார்கள். கொண்டுசெல்லப்பட்டவர்களில் பலர் காணாமலும் போகச்செய்யப்பட்டுள்ளார்கள். 

சர்வதேச மனித உரிமைச் சட்டங்களுக்கும், பிரகடனங்களுக்கும் முரணான இத்தகைய கைது நடவடிக்கைகள் அரசியல் சார்புடைய கைது நடவடிக்கைகளே! எனவே தான் நாம் காலம் காலமாக ஆட்சிபீடமேறுகின்ற இலங்கை அரசுகளுக்கு திரும்பத்திரும்பவும் வலியுறுத்துகின்றோம் ஆட்சியாளர்களினதும் - அரசுகளினதும் நலன்கள் சார்ந்த அரசியல் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் நிகழ்த்தப்பட்டுள்ள இத்தகைய கைது நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அனைவரும் அரசியல் கைதிகளே!  

தடுத்து வைத்தல் மற்றும் ஆள்கடத்தல் சம்பவங்கள், இலங்கையில் குடியியல் சமுகங்களுக்கு மோசமான பாதிப்புகளையும், ஆபத்துகளையும் உண்டுபண்ணியுள்ளது. சமுக கட்டமைப்பு முதல் குடும்ப அலகு வரை அனைத்தையும் சிதைத்துச்சின்னாபின்னமாக்கியுள்ளது. வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள், பொருளாதாரம், தொழில், வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம், சமுகநிலை எல்லாவற்றிலும் கடுமையான தாக்கங்களை உண்டுபண்ணியுள்ளது. 
அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டுள்ள குடும்பங்கள் அவர்களது பிள்ளைகள், கல்வி, சுகாதாரம், உணவு, உடை, பராமரிப்பு, பாதுகாப்பு, தொழில், பொருளாதாரம் என்று தமது நாளாந்த அத்தியாவசிய தேவைகளைக்கூட பூர்த்தி செய்ய முடியாத அவலநிலையில் துன்பப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். இது ஒரு அடிப்படை மனித உரிமை மீறல் என்பதையும் தங்களுக்கு சுட்டிக்காட்ட விளைகின்றோம்.  

நீதிக்கான விசாரணைகளுமின்றி, நீதிமன்ற நடவடிக்கைகளுமின்றி 12 முதல் 20 வருட காலமாக அரசியல் கைதிகளான எமது உறவுகள், தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு சட்டத்தில் உள்ள தண்டனைக்காலத்தை விடவும் மேலதிகமாகவே விளக்கமறியலில் தண்டனைக்காலத்தை அநுபவித்துவிட்டார்கள். 

ஆதலால், ‘இனியும் தடுத்துவைத்து விசாரணைகளை தொடருதல், வலிந்து திணித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து குற்றத்தை ஒப்புக்கொள்ள நிர்ப்பந்தித்தல், அன்றி, நீதிமன்றத்தில் பாரப்படுத்தல், சிறப்பு நீதிமன்றங்களை அமைத்தல், ஆணைக்குழுக்களை நியமித்தல், விசேட பிரதிநிதிகளை சிபாரிசு செய்தல்’ என்பன ஏற்புடையற்றதும் மனிதாபிமானமற்றதுமான செயல்முறைகளாகும். இவை எமது உறவுகளின் விடுதலையை நீட்டிக்கச்செய்து காலம் கடத்தவே செய்யும். இந்த உலகத்தில் உங்களைப்போல எங்களைப்போல நடமாடவும் சீவிக்கவும் உள்ள மறுக்கப்பட்டுள்ள அவர்களின் அடிப்படை ‘மனித உரிமைகளுக்கு ஆழ ஆழ குழிப்படுக்கை வெட்டும்’ இத்தகைய வன்ம நடவடிக்கைகள், குரோத எண்ணங்கள் வேண்டவே வேண்டாம். 

மாறாக, ‘அரசியல் கைதிகள்’ எனும் சொல்ப்பிரயோகமே இலங்கையில் புழக்கத்தில் இல்லாதவாறு அனைத்து கைதிகளுக்கும் நிபந்தனைகளின்றி, மகோன்னத சிந்தனையில் ‘பொதுமன்னிப்பு’ வழங்கி விடுதலை செய்து, நாடு மெய்யான சாந்தி சமாதானம் சமத்துவத்தைக்காண உழைப்பீராக! என்று கேட்டுக்கொள்கின்றோம். 

நூலிழை அளவு நம்பிக்கைகளுடன்…

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினருடன்,
மாவட்ட சிவில் சமுக அமைப்புகளும், தொழில்சங்கத்தினரும்.  

முக்கிய கவனத்துக்கு:

இந்த கோரிக்கை மனுவில், ‘அரசாங்கத்துக்கு எதிராக கடுமையான சொல்லாடல்கள்’ இடம்பெற்றிருப்பதாக தெரிவித்து அடையாள உணவு தவிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் கையொப்பமிட மறுப்பு தெரிவித்திருந்தமையும் கவனத்தில் கொள்ளத்தக்கது.
 

















                                                                                                                   <vavuniyacitizen@gmail.com>