வடபகுதிக்கு விஜயம் செய்த புதிய ஜனாதிபதி மற்றும் 'தேசிய உணவு உற்பத்தி ஊக்குவிப்பு நிகழ்வுகளும்!

தமிழ் மக்களின் சகஜ வாழ்வுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் காரணிகள் பல, ஐ.நா ஆய்வறிக்கையில் திடமாக ஆராயப்படவில்லை என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். “பாதுகாப்பான உணவு மற்றும் நிலையான விவசாயம்” என்ற எண்ணக் கருவின் உணவு உற்பத்தி தேசிய வேலைத்திட்ட தொடக்க விழா இன்று ஜனாதிபதி மைத்திரிபால தலைமையில் இரணைமடுவில் இடம்பெற்றது. இதில் வரவேற்புரை நிகழ்த்தும் போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
   நல்லிணக்கம் கொண்ட நிலையான நாட்டை உருவாக்க உத்தேசித்திருக்கும் எமது ஜனாதிபதியும் அவரின் அமைச்சர்களும், அலுவலர்களும், ஆதரவாளர்களும் எம்மால் வரவேற்கப்பட வேண்டியவர்கள். அத்துடன் எமது சுக துக்கங்களில் பங்கெடுக்கும் இராஜதந்திரிகளும் எம்மால் மனமுவந்து வரவேற்கப்பட வேண்டியவர்கள். இன்று “பாதுகாப்பான உணவு மற்றும் நிலையான விவசாயம்” என்ற எண்ணக் கருவின் நடைமுறைப்படுத்தல் நிகழ்வாகவே இந்த உணவு உற்பத்தி தேசிய வேலைத்திட்டம் இரணைமடுவிலிருந்து தொடக்கப்படுகின்றது. அதனை நாம் வரவேற்கின்றோம். உள்நாட்டில் உற்பத்தியை ஊக்குவிக்கவும், சுயநிறைவை ஏற்படுத்தவும், சேதன உரத்தை வெகுவாக மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தவும், உற்பத்தித் திறனை மேம்படுத்தவும் இன்னோரன்ன காரணங்களுக்காகவும் இந்த நிகழ்ச்சியை வரவேற்கின்றோம்.
பல வருட காலமாக பலரால் மறக்கப்பட்டிருந்த அல்லது மறைக்கப்பட்டிருந்த எம் மக்கள் மத்தியில் இருந்து தேசிய ரீதியான ஒரு நிகழ்வை இன்று முடுக்கி விடுவது வருங்காலத்தில் பலமான தேசிய ஒருமைப்பாட்டையும் நிலையான நிலைமைப் பாட்டையும் உண்டு பண்ண உதவும் என்று எதிர்பார்க்கின்றோம். பெரும்பான்மையின மக்கள் மரமாகவும் சிறுபான்மையின மக்கள் கொடியாகவும் இணைந்து வாழ்வதே தேசிய ஒருமைப்பாடு என்ற எண்ணம் இந்நாட்டில் பலர் மத்தியிலும் இருந்து வந்திருக்கின்றது. வடகிழக்கு மாகாண மக்கள் அதை ஏற்க வில்லை. ஏற்கவும் முடியாது. காரணம் சரித்திர ரீதியாக பன்னெடுங்காலமாகத் தமிழ்ப் பேசும் வடகிழக்கு மாகாண மக்கள் இந்தப் பிரதேசங்களில் பெரும்பான்மையின மக்களாகவே வாழ்ந்து வந்திருக்கின்றார்கள், வருகின்றார்கள்.
சென்ற நூற்றாண்டின் முதற் பகுதியில் சிங்களத் தலைவர்களாகிய சேர் ஜேம்ஸ் பீரிஸ் அவர்களும் திரு.ஈ.ஜே.சமரவிக்ரம அவர்களும் இதை வலிந்து குறிப்பிட்டிருந்தார்கள். வடக்கு கிழக்கில் தமிழ்ப் பேசும் மக்கள் எப்பொழுதுமே பெரும்பான்மையினராக வாழ்ந்து வந்துள்ளார்கள் என்று கூறியிருந்தனர். இரு மரங்கள் ஒருமித்து பக்கம் பக்கமாக வாழ்தலையே எம்மக்கள் விரும்புகின்றனர். பிறிதொன்றுக்குக் கொடியாக வளைந்திருக்க விரும்பவில்லை.
இன்று தொடங்கப்படும் “பாதுகாப்பான உணவு மற்றும் நிலையான விவசாயம்” என்ற எண்ணக்கரு தேவைகளில் இருந்து விடுபட நாம் எடுக்கும் நடவடிக்கைகளில் ஒரு அங்கம். உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய நாம் எடுக்கும் நடவடிக்கை தேவைகளில் இருந்து நம்மை விடுவிக்கும். அதேநேரம் நாம் பயத்தில் இருந்தும் விடுபட வேண்டும். மதிப்புடனும் வாழ வேண்டும். மற்றைய மாகாணங்களில் இதனை உறுதிப் படுத்தியிருக்கும் நாங்கள் வடகிழக்கு மாகாணங்களில் அதை உறுதிப்படுத்த முனையவில்லை என்பதே வருத்தத்திற்குரியதொன்று.
ஆகவே உணவுப் பாதுகாப்பு கொடுக்கும் போது மக்கள் பாதுகாப்பும் அவர்களுக்குத் தேவை. இல்லையென்றால் வலிந்து வைத்து வாழ்வாதாரங்கள் வழங்குவது போல் ஆகிவிடும். பயத்தை ஏற்படுத்தி, வலிந்து தம்வசம் வைத்து, வாழ்வாதாரங்கள் கொடுத்து எம்மக்களை அடிமைகள் போல் நடத்தும் சந்தர்ப்பங்கள் அண்மைக் காலங்களில் எமது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இது வரை காலமும் எம்மக்களிடையே அவர்களின் தேவைகள் பற்றிய ஒரு முழுமையான சகல துறைகள் சம்பந்தமான மதிப்பீடு, சகல மட்டத்திலும், முக்கியமான சர்வதேச உதவி நிறுவனங்களின் உதவியுடன் செய்யப்படவில்லை.
2003ம் ஆண்டில் இது நடைபெற்றது. உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி போன்றவற்றின் உதவியுடன் ஐக்கிய நாடுகள் நிறுவனம் இதைச் செய்தது. ஆனால் அதன்பின் நடைபெறவில்லை. இது நடைபெற வேண்டும். நாம் அண்மையில் ஐக்கிய நாடுகளிடம் கேட்டதோ சகல துறை சகல மட்டத் தேவை பற்றிய ஆய்வறிக்கை. எமக்குக் கிடைத்ததோ மனித நல ஆய்வறிக்கை மட்டுமே. அதுவும் எம்மக்களின் சகஜ வாழ்வுக்கு முட்டுக் கட்டையாக இருக்கும் காரணிகள் பல திடமாக அதில் ஆராயப்படவில்லை.
எமது காணிகள் மற்றோரின் வசம். உரியவர்கள் உட்செல்ல முடியாத நிலை; வாழ்வாதாரங்கள் வழங்காத நிலை. போருக்குப் பின்னரான விரக்தி நிலை என்பன அதில் ஆராயப்படவில்லை. சமூகத்தில் போரின் தாக்கங்களை புரிந்து கொள்ள நாம் எத்தனிக்கவில்லை. வறுமை நிலை போக்க வழி வகைகள் ஆராயப்படவில்லை. மக்கள் பிரதிநிதிகளுடன் சேர்ந்து மக்கள் தேவைகளை ஆராய முற்படவில்லை. இது யுத்தம் முடிவடைந்த உடனேயே நடைபெற்றிருக்க வேண்டும்.
அதற்குப் பதிலாக மேலிருந்து தமக்கு உகந்ததைத் தரவே மத்திய அரசாங்கம் விரும்புகின்றது. கீழ் மட்டத்தில் மக்களிடம் இருந்து எங்கள் தேவைகளை அறிந்துணர்ந்து செயல்ப்பட விரும்பவில்லை. மக்கள் பிரதிநிதிகளைப் புறக்கணித்தே மக்கள் சேவையில் ஈடுபட மத்தியானது விரும்புகின்றது.2003ம் ஆண்டில் நடைபெற்றது போல முழுமையான தேவைகள் சம்பந்தமான ஆய்வறிக்கைகளைப் பெற்று மாகாண அபிவிருத்திக்கான மேன்மைத் திட்டம் ஒன்றை உருவாக்கி மக்களின் கருத்துக்களைச் செவிமடுத்து அவற்றை நடைமுறைப்படுத்த விழைந்தால் நாம் அதற்கு ஒரு போதும் தடையாக இருக்க மாட்டோம். மாறாக எமது தற்போதைய நிலையை அறிய விரும்பாமல் எமது பாதிப்புக்களை பல மட்டங்களிலும் ஆய்வு செய்ய எத்தனிக்காமல், முழுமையான முன்னெடுப்புகளை முடுக்கிவிட மனம் இல்லாமல், மனித தேவைகளின் ஒரு அங்கத்தை மட்டும் வலியுறுத்தி இந்த நிகழ்வு நடைபெறுவது எமக்கு ஏமாற்றத்தை அளிக்கின்றது.
ஆனால் இதனைச் செய்ய முனைபவர் எமது மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர் என்பது எமக்கு மன மகிழ்வைத் தருகின்றது. மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் விவசாயக் குடும்பத்தில்ப் பிறந்தவர். எம் விவசாயிகளுக்கு அது ஒரு மகிழ்வூட்டுஞ் செய்தி. எதேச்சாதிகாரத்தை எதிர்த்துப் போராடி ஜனநாயகத்திற்கு வழிவகுத்தவர். அந்த விதத்தில் எமது தமிழ்ப் பேசும் மக்களின் அன்பையும் மதிப்பையும் பெற்றவர். என தெரிவித்தார்.
 
பின்பு ஜனாதிபதி ஆற்றிய உரை சிலவற்றை இங்கே:
கிளிநொச்சி மருதநகர் பகுதியில் நடைபெற்ற 'தேசிய உணவு உற்பத்தி ஊக்குவிப்பு நிகழ்ச்சி '  திட்டத்தில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வயலில் இறங்கி இயந்திரத்தின் மூலம் நாற்றுக்களை நாட்டி வைத்தார்.
 
இதனை விட நாங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் மிளகாயில் 80வீதம் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதனை விட சோயா, கௌப்பி, பயறு உள்ளிட்டவற்றையும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து கொண்டிருக்கின்றோம். இதனால் விவசாயிகள் தொடர்ந்தும் வறுமை நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். மேலும் 50வீதமான மக்கள் போஷாக்கான உணவு கிடைக்காமல் இருக்கின்றார்கள். இலங்கையில் 23வீதமான மக்கள் போஷாக்கு குறைபாட்டினால் உண்டாகும் நோய்களுக்குள்ளாகியிருக்கின்றார்கள்.
எனவே உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவேண்டிய தேவையுள்ளது. இதற்கமைய அடுத்து வரும் 3வருடங்களில் உள்நாட்டு உற்பத்தியை உயர் மட்டத்திற்கு கொண்டுவரவேண்டும். விவசாயத்திற்கான நிலம் ஒரு அங்குலம் கூட செய்யை பண்ணப்படாமல் இருக்க முடியாது. அரசாங்க காணிகளாக இருந்தால் அவை தொடர்பில் காணிக்குரிய திணைக்களம் அல்லது அமைச்சிடம் அரசாங்கம் அது குறித்துக் கேள்வி எழுப்பும். இதேபோன்று தனியார் காணியாக இருந்தால் அரசாங்கம் அதனைப் பெற்று, செய்கை பண்ணும் நிலை உருவாக்கப்படும். மேலும் முதலமைச்சர் வரவேற்புரை நிகழ்த்தும்போது பல விடயங்களை சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
எம்மை பொறுத்தவரையில் இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களும் சமவுரிமையுடன் வாழவேண்டும். இந்நி லையினை உருவாக்குவதற்கு ஆக்கபூர்வமான பேச்சுக்கள்,அவசியமாகின்றது. எனவே அவ்வாறான ஆக்கபூர்வமான பேச்சுக்களுக்கு நாங்கள் அழைப்பு விடுகின்றோம். மேலும் இன்றைய தினம் ஆரம்பித்து வைத்திருக்கின்ற இந்த திட்டத்தில் மத்திய அரசாங்கத்திற்கு மட்டுமல்ல மாகாண அரசாங்கத்திற்கும் பங்கு இருக்கின்றது. 13ம் திருத்தச்சட்டத்தின் ஊடாக அதிகாரம், வழங்கப்பட்டிருக்கின்றது.
எனவே அடுத்துவரும் 3வருடங்களில் இந்த திட்டத்தை வெற்றிகரமான ஒரு திட்டமாக மாற்றியமைப்பதற்கு மத்திய மாகாண அரசாங்கங்கள் இணைந்து செயலாற்றவேண்டும் என்பதுடன் மக்கள் தங்கள் வீடுகளில் வீட்டுத்தோட்டங் களை உருவாக்க வேண்டும். இது தொடர்பில் நாம்,அடுத்துவரும் மாதங்களில் இலங்கையின் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று அதிகாரிகள், அமைச்சர்களுடன் பேச்சுவார்த் தை நடத்தி உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பேன் என்றார்.