யாழ் காவல்துறையின் பொறுப்பற்ற கடமையும், மக்களின் மனிதாபனம் அற்ற செயல்களும்!

யாழ். குடாநாடு இந்த வாரம் மீண்டுமொரு மனிதாபிமானமற்ற கோரத் தாண்டவத்தால் மீண்டும் தலை குனிந்திருக்கின்றது.
முன்னொரு காலத்தில் திருமூலரால் சிவபூமி என்று அழைக்கப்பட்ட யாழ்ப்பாணம் அன்பு, ஜீவகாருண்யம், பொறுமை, சகிப்புத் தன்மை, விட்டுக்கொடுப்பு  போன்ற உயர்ந்த விழுமியங்களைக் கைக்கொண்டு வாழ்ந்த ஆசார சீலர்கள் நிறைந்த  இடமாக விளங்கியது. ஆனால் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெறுகின்ற நிகழ்வுகள் யாழ்ப்பாணம் காட்டுமிராண்டிகளும், பண்பற்ற மனிதர்களும் வாழ்கின்ற ஒரு பிரதேசமோ என்று மற்றவர்களை நினைக்க வைக்கின்ற நிலைமைக்கு இட்டுச் செல்கின்றது.


அதற்குச் சிகரம் வைத்தாற்போல கடந்த வாரம் யாழ்ப்பாணத்தின் இதயப்பகுதியாக விளங்குகின்ற யாழ். மத்திய பஸ் நிலையப்பகுதிக்கு அண்மையில் இடம் பெற்ற நிகழ்வு ஒன்று அமைந்துள்ளது.
சட்டத்தைக் கையிலெடுத்த ஒரு சமூக விரோதக் கும்பலால் ஓர் அப்பாவி மனித உயிர்காவு கொள்ளப்பட்டுள்ளது. மணமாலை சூடி ஒரு வாரம்   கழிய முன்னரே ஒருவருக்கு பிணமாலை சூடவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. காட்டு மிராண்டிக் கும்பலொன்றினால் இரும்புக் கம்பியால் கடுமையாகத் தாக்கப்பட்ட தனியார் கல்வி நிலைய ஆசிரியர் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் ஒரு வாரத்துக்கும் அதிகமான நாள்கள் சிகிச்சை பெற்றும் சிகிச்சை பயனளிக்காமல் இறந்துள்ளார்.

அதாவது சட்டவிரோத  கும்பலொன்றினால் ஈவிரக்கமில்லாமல் தாக்கப்பட்டு இடது கை முறிவடைந்த நிலையில் தலையில் ஏற்பட்ட பாரதூரமான காயத்தினால் சாவைத் தழுவியுள்ளார். நாட்டில் இடம்பெறுகின்ற கொலைச் சம்பவங்களை ஆராய்ந்து பார்க்கின்றபோது அவை பெரும்பாலும்  முன்விரோதம் அல்லது காழ்ப்புணர்வு என்பவற்றினால் ஏற்படும் பழிவாங்கும் உணர்வு காரணமான திட்டமிடப்பட்ட கொலைகளாகவோ அல்லது திடீர்  கோபாவேசத்தினால் ஏற்படும் கைமோசக் கொலைகளாகவோ அமைகின்றன.
ஆனால் இங்கு இடம்பெற்ற கொலை இவை எவற்றிலும் சாராமல் தட்டிக் கேட்க ஆளில்லாத சண்டப் பிரசண்டர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணம் மின்சாரநிலைய வீதி 2 ஆம் ஒழுங்கையில் வசிக்கும் மாதவ மணிவண்ணன்  தர்சினி என்ற யாழ். இந்து ஆரம்பப் பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியை, கொட்டகலை றொசிற்ரா வீடமைப்புத் திட்டத்தை சேர்ந்த சண்முகவேல் மாதவ மணிவண்ணனை மணம் முடித்து ஏழு நாள்களே ஆகியிருந்தன. 

சம்பவ தினத்தன்று நெல்லியடியிலுள்ள உறவினர்களையும் பார்த்து விட்டு திருமணமாகிய புதிய தம்பதியினர் என்பதால் கோயிலுக்கும் சென்று விட்டு இரவு ஒன்பது மணி  அளவில் வீட்டுக்குத் திரும்பியிருந்தனர்.

வீட்டுக்கு வந்த பின்னர் வீட்டில் குடிப்பதற்குத் தண்ணீர் இல்லாமல் இருந்ததால் தண்ணீர் வாங்குவதற்காக வெளியே வந்த அவர்கள் வீட்டிலிருந்த குப்பைகளையும் எடுத்துக் கொண்டு வந்து மின்சார நிலைய வீதியிலிருந்த குப்பைத் தொட்டிக்குள் போட்டு விட்டு நடந்து சென்று உணவகமொன்றில் தண்ணீர்ப் போத்தலை வாங்கிய பின்னர் தேநீரும் அருந்தி விட்டு வீடு செல்வதற்காக வெளியே வந்துள்ளனர்.
நடந்து சிறிது தூரம் வந்தபோது நேரம் பத்து மணியை எட்டியிருந்தது. அந்த நேரம் சடுதியாக அவர்களைச் சுற்றி வளைத்த மதுபோதையில் இருந்த கும்பலொன்று  கெட்ட வார்த்தைகளால் கேவலமாகப் பேசியவாறு போக விடாமல் தடுத்து வைத்துள்ளது. தாங்கள் கணவன் - மனைவி என்றும், திருமணமாகியவர்கள் என்று கூறியும் அவர்களை அந்தக் கும்பல் போகவிடவில்லை. திருமணமாகியிருந்தால் திருமண பதிவுச் சான்றிதழை காட்டுமாறும் கேட்டு அவர்களை மிரட்டிய அந்தக் கும்பல் தொடர்ந்தும் கீழ்த்தரமாக நடந்து கொண்டுள்ளது.
பலவாறு  மன்றாடிக் கேட்டும் அவர்களை போக விடாததால் மனைவியான தர்சினி அவருடைய சகோதரனான சிவஞானம் சுகிர்தராஜ் என்பவருக்கு தொலைபேசி அழைப்பை எடுத்து தங்களைப் பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் தடுத்து வைத்துள்ளதாகவும்  வந்து காப்பாற்றுமாறும் கோரியுள்ளார். அதற்கு அவரது சகோதரர் உடனடியாக பொலிஸாரின் துரித அழைப்பான 119 க்கு அழைப்பெடுத்து முறையிடுமாறும் தான் உடனடியாக வருவதாகவும் கூறியுள்ளார்.
கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம் வரையும் அவர்களை தடுத்து நிறுத்தி வைத்துள்ளது அந்தக் கும்பல். இடைப்பட்ட நேரத்துக்குள் பொலிஸாருக்கும் பலமுறை அழைப்புக்கள் மேற்கொண்டும் பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து சேர வில்லை. பின்னர் தொலைபேசி அழைப்பைப் பெற்ற சகோதரன் தன்னுடைய தமக்கையும் கணவனும் தடுத்து வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு வந்து நிலைமையை ஊகித்து மதுபோதையிலிருந்த கும்பலுடன் சமாதானமாகப்பேசி அவர்களைக் கூட்டிக்கொண்டு நடந்து சென்றுள்ளார்.
சிறிது தூரம் அவர்கள் நடந்து செல்வதற்கு முன்பாக அங்கு திரும்பவும் வந்த அந்தக் கும்பல் திருத்தவேலைகள் நடைபெற்று கொண்டிருந்த கடையொன்றிலிருந்த இரும்புக்கம்பியினால் மூவரையும் கடுமையாகத் தாக்கியுள்ளது. அந்த மோசமான தாக்குதலால் மூவரும் கடுங்காயத்துக்குள்ளாகி யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
அவர்களில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மாதவ மணிவண்ணன் சிகிச்சை பயனளிக்காமல்  பின்னர் சாவைத் தழுவியுள்ளார்.காயமடைந்தவர்களின் கூற்றுப்படி பொலிஸாரின் அசண்டைத்தனமும் இந்தக் கொலைக்கு ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது.  யாழ். நகரின் மத்திய பகுதியில் அமைந்திருக்கின்ற  பஸ் நிலையத்துக்கு 500 மீற்றர் தொலைவும் இல்லாத தூரத்தில் அமைந்திருக்கின்ற பொலிஸ் நிலையத்திலிருந்து தாக்குதல் சம்பவம் நடந்து முடியும் வரையும் பொலிஸார் குறித்த இடத்துக்குச் செல்லவில்லை.
கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலத்துக்கும் அதிக நேரம் கும்பல் அவர்களைத் தடுத்து வைத்திருந்த போதும் பொலிஸார் வந்து அவர்களை மீட்கவில்லை. அது தவிர அந்தப் பிரதேசத்திலிருந்த பொது மக்கள், முச்சக்கர வண்டிச் சாரதிகள், கடைக்காரர்கள் யாருமே இந்தச் சம்பவத்தை தட்டிக் கேட்க முன் வரவில்லை. அல்லது பொலிஸாரை அழைக்க முன்வரவில்லை. காயமடைந்தவர்களின் கூற்றுப்படி அந்தப் பகுதியில் இருந்த முச்சக்கரவண்டிச் சாரதிகள் சிலரும், சில வர்த்தக நிலைய உரிமையாளர்களும் தம்மைத் தாக்கியோரில் இருந்ததாகத் தெரிவிக்கின்றனர்.
இந்தச் சம்பவம் யாழ். மக்கள் மத்தியில் பலத்த பீதியை உண்டு பண்ணியுள்ளது. நாளாந்தம் இரவு பகல் என்று இல்லாமல் ஆயிரக் கணக்கானோர் வந்து போகும் பகுதியில் இவ்வாறான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளமை மக்களின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. இவ்வாறான ஒரு முக்கியமான இடத்தில் பொலிஸ் காவலரண் ஒன்றோ அல்லது  பொலிஸ் உத்தியோகத்தர்களின்  பாதுகாப்பு நடவடிக்கையோ மேற்கொள்ளப் படாதது ஏன் என்ற கேள்வியும் எழுகின்றது.
திருமணமான தம்பதியர் அதாவது ஒர் ஆணும்  பெண்ணும் வெளியே போவதற்குக்கூட பாதுகாப்பில்லாத பிரதேசமாக யாழ்ப்பாணம் மாறிவருகிறதா? என எண்ணத் தோன்றுகின்றது. பெண்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் அச்சுறுத்தல் மற்றும் அடக்கு முறையின் மற்றொரு வெளிப்பாடுதான் இந்தக் கொலைச் சம்பவம்.
இது யாழ்ப்பாணத்தின் சட்டத்துறைக்கும், நீதித்துறைக்கும் விடுக்கப்பட்ட ஒரு சவாலாகவே எண்ணத்தோன்றுகின்றது. கடந்த வாரம் யாழ். மேல் நீதிமன்றின்  கெளரவ நீதிபதி அவர்கள் யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அதிரடிப் படையைத் துணையாகக் கொண்டு செயற்படுமாறு பொலிஸாருக்கு கட்டளையிட்டு சில நாள்களுக்குள் யாழ். நகரத்தின் மையப்பகுதியில் இந்தக் குற்றச் சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக  யாழ்ப்பாணம் வெலிங்ரன் சந்திப் பகுதியில் புகைப்பட நிலையமொன்றை நடத்தி வரும் யாழ்ப்பாணம் அரசடிப் பகுதியைச் சேர்ந்த இளைஞரொருவர் கைது செய்யப்பட்டு நீதி மன்ற உத்தரவின் பேரில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய இன்னொருவரும் யாழ்ப்பாணப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
நாளாந்தம் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் யாழ். நகரத்தில் பொலிஸாரின் பிரசன்னத்தை காண்பதே அரிதாக உள்ளது. காலை வேளைகளிலும் நெருக்கடியான நேரங்களிலும் போக்குவரத்து பொலிஸாரைக்கூட யாழ் நகரின் மத்திய பகுதிகளில் காணக்கூடியதாக இருப்பதில்லை.



இப்போதுள்ள கேள்விகள் என்ன வெனில், பொலிஸார் தமது பலவீனங்களை அடையாளம் கண்டு கொண்டு குற்றத்தடுப்பு முறைமையை சீர்செய்து கொண்டு, நடந்து முடிந்த இந்தக் குற்றத்துடன் தொடர்புடையவர்களைக் கைது செய்வார்களா என்பதுடன் இனி எதிர்காலத்தில் இடம்பெற இருக்கின்ற குற்றச் செயல்களையும் தடுத்து நிறுத்துவார்களா என்பதேயாகும்.


- மதுமிதன்