காலம் தாழ்த்தாமல் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படல் வேண்டும்!

போர் முடிந்து பல ஆண்டுகள் ஆகியும் “தமிழ் அரசியல் கைதிகள்" விடுவிக்கப்படவில்லை. ஒவ்வொரு ஆட்சி மாற்றங்களின் போதும் தாங்கள் விடுவிக்கப்படுவோம் என்று எதிர் பார்த்துஇ எதிர் பார்த்துக் காத்திருந்து ஏமாற்றங்களை மட்டுமே சேகரித்து வைத்திருக்கும் அவர்கள் கடந்த சனிக்கிழமை தங்களை விடுவிக்க கோரி உண்ணாவிரதம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்கள்.


சில நாட்கள் கடந்த நிலையில் 6 பேர் மயங்கி விழுந்து வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் பலர் பத்து ஆண்டுகளுக்கு மேலாக விடுதலை செய்யப்படுவோம் என்ற கனவுகளை சுமந்து நான்கு சுவருக்குள்ளேயே வாழ்ந்து வரும் அவர்களது கனவு கனவாகவே முடிந்து விடுமோ என்ற அச்சம் தோன்றியுள்ளது. “ காணாமல் போனோருக்கு " என்ன நடந்தது என்ற விடை தெரியாக் கேள்வியுடன் வாழும் எம் தாயகத்து உறவுகளுக்கு உயிரை மட்டும் சுமந்து அரசியல் கைதிகள் என்ற பெயரில் வாழும் இவர்களையாவது உயிரோடு கொடுக்க வேண்டும் இலங்கை அரசு.

செய்யாத குற்றத்தை செய்தது என்று ஒப்புவிக்க வைத்து தண்டனை கொடுக்கப்பட்டவர்கள், இத்தனை ஆண்டு கடந்தும் தீர்ப்பு வழங்கப்படாமல் இழுத்தடித்து கொண்டிருக்கப்படுபவர்கள், வழக்கு எதுவும் இல்லாமலே வெறுமனவே திரும்ப திரும்ப 14 நாட்கள் தவணை பெறப்பட்டு தடுத்து வைத்திருக்கப்படுபவர்கள், விசாரணையில் உள்ளவர்கள் என்று அத்தனை பேரையும் விடுவிக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம்.

2010 ஆம் ஆண்டிலிருந்து எம்மால் மேற்கொள்ளப்பட்டு வரும் " Are They Alive " என்ற வாசகத்துடன் கூடிய போராட்டத்தை தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விபரம் கோரியும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரியும் நாம் பல்வேறு வெளிநாட்டு அமைப்புகளுக்கு அழுத்தம் கொடுத்திருந்தோம். தொடர்ந்து அவர்கள் விடுதலைக்கு குரல் கொடுத்து வரும் நாங்கள் இனிமேலும் காலம் தாழ்த்தாது அவர்களை விடுவிக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம். இதற்காக பிரித்தானிய அரசு மூலம் அழுத்தம் கொடுப்போம்.

தாயகத்தில் வாழும் உறவுகளும் கட்சி பேதம் மறந்து அவர்கள் விடுதலைக்கு ஒருமித்த குரலில் குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். சர்வதேசத்தின் பார்வை இலங்கை மீது குவிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில், நல்லெண்ண நடவடிக்கையாக இலங்கை அரசு அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றோம். எனவே இந்த சந்தர்ப்பத்தில் எல்லா பக்கத்திலிருந்தும் கொடுக்கப்படும் அழுத்தம் அவர்கள் விடுதலையை விரைவு படுத்தும். தமிழர்களாக வாழ்க்கையை தொலைத்து நிற்கும் அவர்களுக்கு இனியாவது விடுதலை கிடைக்க ஒரே குரலில் ஒலி எழுப்புவோம்.



media@tamilsforum.com

working together for peace with justice and dignity