பிரித்தானிய தமிழர் பேரவையின் தொடர்ச்சியான அரசியல் செயற்பாடுகளினால் நெருக்கடி நிலைமைக்குள் இலங்கை அரசு!
தமிழர்களுக்கு எதிராக நடாத்தப்பட்ட இன அழிப்புக்கு சர்வதேச விசாரணைகளை தமிழர் தரப்பு அழுத்தம் கொடுத்து வந்த வேளையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கழக உயர் ஸ்தானிகர் சையத் ஹுசேன் ( Zeid Ra’ad Al-Hussein) அவர்களும் உள்ளக விசாரணை நம்பகத் தன்மை அற்றதென OISL விசாரணை அறிக்கை மூலம் வெளிப்படுத்தியிருந்தார்.
கடந்த காலத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்ட தொடர்ச்சியான தீர்மானங்கள் போன்று அல்லாது இம் முறை அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்ட தீர்மானம் வாக்கெடுப்பு எதுவுமின்றி ஏகமனதாக இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இலங்கை அரசு தான் சர்வதேசம் கோரும் விடயங்களைச் செய்வதாக பல நாடுகளை ஏற்றுக் கொள்ள வைத்ததன் மூலம் தற்போதைக்கு விசாரனையை தன்வசப்படுத்தியுள்ளது.
தமிழர் தரப்பின் நீண்ட காலக் கோரிக்கைகேற்ற ஒரு தீர்மானமாக இது அமையாவிட்டாலும், இதில் குறிப்பிடப்பட்டுள்ள பல விடயங்களில் தமிழர் தரப்பு தமது அரசியல் ராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் இலங்கை அரசை எதிர்காலத்தில் நெருக்கடி நிலைமைக்குள் தள்ளும் என்பதில் எது வித ஐயமுமில்லை. போதிய கால அவகாசம் இன்றி நிறைவேற்றப்பட்ட இத் தீர்மானத்தில் உள்ள பாரதூரமான குறைபாடுகள் தொடர்பான விடயங்களை வெளிப்படுத்தி தத்தம் நாடுகளின் கரிசனையைத் திருப்பி தமிழர் தரப்பு தொடர்ச்சியாக குரல் கொடுக்க வேண்டும்.
அந்த வகையில் இத் தீர்மானத்தினை பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சியங்களைப் பாதுகாத்து வெளிப்படையானதகவும் சுதந்திரமானதாகவும் நடமுறைப்படுத்துவதினை உறுதிப்படுத்த வேண்டுமென பிரித்தானிய தமிழர் பேரவையினரால் பல்வேறு மட்டங்களில் தொடர்ச்சியான அரசியல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதிகளவான சர்வதேச நீதவான்கள், சட்டவல்லுனர்கள் மற்றும் ஆய்வாளர்கள் பிரசன்னத்தை உறுதிப்படுத்தல், சாட்சியாளர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தல், சுதந்திரமான சாட்சிப் பதிவுகளை மேற்கொள்ளும் பொருட்டும் தமிழர் தாயக பிரதேசத்தில் இருந்து இராணுவத்தினரை வெளியேற்றல் போன்ற கோரிக்கைகளை முன் வைத்து பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களை நேரடியாகச் சந்தித்து அவர்களினூடாக தமது கோரிக்கைகளை பிரித்தானிய தமிழர் பேரவையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் அண்மையில் Wolverhampton South East பகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் Rt Hon Pat McFadden MP அவர்களையும், Harrow West பகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் Gareth Thomas MP அவர்களையும், Wimbledon பகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் Stephen Hammond MP அவர்களையும், Lewisham East பகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் Heidi Alexander MP அவர்களையும் மற்றும் Milton Keynes பகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் Mark Lancaster MP அவர்களையும் நேரடியாகச் சந்தித்து தமது கோரிக்கைகளை தெரியப்படுத்தியிருந்தனர். இதன்பொழுது மேற்படி பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ச்சியாக தாம் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதிமொழி அளித்திருந்தனர்.