நல்லாட்சி பற்றிப்பேசும் சிறீலங்கா அரசுக்கு ஈழக்குழந்தைகளின் ஏக்கங்கள் புரிகிறதா?

நல்லாட்சி பற்றிப்பேசும் சிறீலங்கா அரசுக்கும் - அரசின் ஒரு அங்கமாக இரண்டறக் கலந்திருப்பவர்களுக்கும் ஈழக்குழந்தைகளின் ஏக்கங்கள் புரிகிறதா?

இந்த உலகத்தில் சீவிக்கின்ற ‘அனைத்து சிறுவர்களுக்கும் உள்ள அடிப்படை உரிமைகள் - பாதுகாப்பு’ என்பனவற்றை பிரகடனப்படுத்தி, 1954ம் வருடத்திலிருந்து ஐக்கிய நாடுகள் சபையால் ஒக்டோபர் முதலாம் நாள், ‘உலக சிறுவர் தினம்’ ஆக அமுல்ப்படுத்தப்பட்டு அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

உலகம் முழுக்கவும் வாழுகின்ற சிறுவர்களும், சிறுவர்களின் நலன்களைக் கவனத்தில் கொண்டு அவர்களுக்கான பல பொதுநலத்திட்டங்களை உலகெங்கும் நடைமுறைப்படுத்திவரும் தன்னார்வத்தொண்டு அமைப்புகளும் இந்த சர்வதேச நாளை, ‘அன்பளிப்பு பொருள்கள் - கேளிக்கை கலை நிகழ்ச்சிகளுடன் மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடத் தயாராகியுள்ள நிலையில், காஸா, சிரியா, இலங்கை போன்ற நாடுகளில் வாழும் சிறுவர்களின் சமகால நிலைவரமோ நெஞ்சை கசக்கிப் பிழிந்து விடுகின்றது.
மைத்திரி – ரணில் இருவருக்கும் செவிட்டில் அரைந்த ஈழக்குழந்தைகள்!




சிறுவர்களை வேலைக்கு அமர்த்துதல், ஆயுதப்போரில் ஈடுபடுத்துதல், பாலியல் இச்சைகளுக்கு பயன்படுத்துதல் என்று, உலகின் பல நாடுகளும் சிறுவர் துஸ்பிரயோகங்களை எதிர்கொண்டுள்ள நிலையில்… 
இலங்கை ஈழத்தில் ‘உயிர் வாழ்வதற்கும் - வாழ்க்கையில் முன்னேறுவதற்கும் மறுக்கப்பட்டுள்ள தமக்குரிய அடிப்படை உரிமைகள்’ தொடர்பில், வடக்கு கிழக்கு சிறுவர்களின் மெய்யான களநிலைவரத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தி,
நல்லாட்சி பற்றி தொண்டைக்கிழிய கத்தும் மைத்திரி – ரணில் கூட்டு அரசினதும், அந்த அரசுக்கு முண்டு கொடுத்து நியாயப்படுத்தி, அதனை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் ஒரு அங்கமாக இரண்டறக் கலந்திருப்பவர்களினதும் செவிட்டில் மிகப்பலமாக அரைந்துள்ளனர் ஈழக்குழந்தைகள்!
கூடவே சிறுவர் உரிமைகள் தொடர்பில் உலகின் மூலை முடுக்கெங்கும் பிரசங்கம் செய்யும் ‘யுனிசெஃப், யுனெஸ்கோ, சேவ் த சைல்ட் (SAVE THE CHILD)’ போன்ற சர்வதேச அமைப்புகளையும், சிவில் சமுக அமைப்புகளையும் வெட்கித்தலைகுனிந்து நாணிக்கோணி குறுகிப்போகச்செய்துள்ளனர்!
வவுனியா மாவட்டம் செட்டிகுளம் பிரதேசத்தில் முகத்தான்குளம் கிராமத்தில் தமிழ் அரசியல் கைதி ஒருவரின் வானம் பார்த்துக்கிடக்கும் குடிலுக்கு முன்பாக கடந்த 25.09.2015 அன்று ஒன்றுகூடிய தமிழ் அரசியல் கைதிகளின் குழந்தைகள்,
‘சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்டு எத்தகைய குற்றச்சாட்டுகளும் இன்றி நீண்ட காலமாக சிறைக்கூடங்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமது அப்பாக்களை விடுதலை செய்யுமாறும், நீதிக்கு மாறாக தமது அப்பாக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையினால் தமது வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள், குடும்ப பொருளாதாரம், கல்வி, போசாக்கு, சுகாதாரம், சமுகநிலை, அரவணைப்பு, பாதுகாப்பு எல்லாவற்றிலும் கடும் தாக்கங்களையும் - பிற்போக்குநிலைமையையும் தாம் சந்தித்துள்ளதாகவும்,
உலகெங்கும் உள்ள குழந்தைகள் போலவே தாமும் பாடசாலைக்கல்வியை கற்க (பாடசாலைக்குப்போக) விரும்புவதாகவும், உலக சிறுவர் தினத்தை சுதந்திரமாக - சமத்துவமாக - மகிழ்ச்சியாக கொண்டாட விரும்புவதாகவும், தமது அப்பாக்கள் விடுதலை செய்யப்பட்டு தம்முடன் சேர்ந்து வாழ்வதற்கு வாய்ப்பளிக்கப்பட்டால் மாத்திரமே தமது இத்தகைய சின்னச்சின்ன கனவுகள் மெய்ப்படும் ஒளிமயமான (நம்பிக்கையான) எதிர்காலம் ஒன்றுக்குள் தம்மால் பிரவேசிக்க முடியும் என்றும்’ தெரிவித்தனர்.
நடப்பாண்டின் (2015 ஒக்டோபர் 1) உலக சிறுவர் தினத்திலாவது தமது குறைகள், கவலை, கண்ணீர், அவலங்களை விளங்கிக்கொண்டு, சிறுவர்களின் உணர்வுகளுக்கும் - உரிமைகளுக்கும் மதிப்பளித்து, குழந்தைகள் மீது கருணை காட்டவும், தமது அப்பாக்களை விடுதலை செய்யவும்  சிறீலங்காவின் புதிய ஆட்சியாளர்களுக்கும், அவர்களை சார்ந்திருப்பவர்களுக்கும் நல்ல புத்தியைக்கொடுக்க – மனித மாண்பைக்காட்ட இறைவனை பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தனர்.  
உலகெல்லாம் உள்ள குழந்தைகளுக்கிடையே புரிந்துணர்வையும், பொதுநிலைப்பாட்டையும் ஏற்படுத்துவதற்காக உழைக்கும் ஐக்கியநாடுகள் சபைக்கும், அதன் முகவர் அமைப்புகளுக்கும், நல்லாட்சி பற்றி பேசும் சிறீலங்காவின் புதிய அரசுக்கும், அந்த அரசுக்கு முண்டு கொடுத்து நியாயப்படுத்தி, அதனை பிரதிநிதித்துவப்படுத்தி அதன் ஒரு அங்கமாக இரண்டறக் கலந்திருக்கும் இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், மாவை.சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், மனோ கணேசன், விஜயகலா மகேஸ்வரன், டி.எம்.சுவாமிநாதன் போன்றவர்களுக்கும் இந்த ஈழக்குழந்தைகளின் ஏக்கங்கள், எதிர்பார்ப்புகள், ஆசைகள், அபிலாசைகள், தேவைகள், கனவுகள், உளக்கிடக்கைகள் தொடர்பில் ‘அடிப்படை புரிதல்களும் - தெளிவுநிலையும்’ ஏற்படவேண்டும் என்பதே ஈழக்குழந்தைகளினது மட்டுமல்ல, மனிதநேயமுள்ள அனைத்து உலக மக்களினதும் வேண்டுதல்களும் - பிரார்த்தனைகளுமாக இருக்க முடியும்!   
செய்தி அறிக்கையிடல் மற்றும் ஒளிப்படங்கள்: ஊடகவியலாளர்,
-அ.ஈழம் சேகுவேரா-
இலங்கை முல்லைத்தீவு.
(01.10.2015)